உன்னவன் பெருமைகளை உலகமே சொல்லி நிற்க…
உன் பொறுமைதனை உரைத்தவர்கள் யாருமுண்டா ????
வாழ்க்கை ஒரு போராட்டமென வாழ்பவர்கள் சொல்வதுண்டு…
போராட்டத்திற்குள் வாழ்ந்தவளே – உன் பொறுமைக்கிங்கு சமமேதுமுண்டா ???
படித்த பெரும் பரம்பரையில் பிறந்தும் பல்கலைக்கழகம் துறந்தவள் நீ….
அடிமை வாழ்க்கைக்கு முடிவு தேடிய அண்ணனுக்கு அழகு சேர்த்த தேவதை நீ !!!
அன்புக்குரிய அண்ணியே, நீ……..
நாவரசுகளுக்குப் பெயர்போன பூவரசந் தோட்டத்துப் பூந்தளிர் !!
பெருமைக்குரிய மாந்தர்கள் சூழ்ந்த பெருங்காட்டின் பேரழகி !!
எழிமையின் சிகரம் “ஏரம்பு” வீட்டின் எலிசபெத்து மகாராணி !!
காவியத்தலைவன் கரிகாலனின் கண்ணியமான காதல் மனைவி !!
எதிர்ப்பாலினத்தின் சேட்டைகள் ரசிக்கும் எதிர்காலப் பயமற்ற ஏகாந்த நாட்களிலே…
பலியாகும் சந்தர்ப்பங்கள் வருமென்று தெரிந்தும் புலியாகிப் புறப்பட்ட புங்கையூரின் பொக்கிஷம் !!!
ஏற்ற இறக்கங்கள், காட்டிக் கொடுப்புகள், தேசத் துரோகங்கள் கடந்து..
கத்திமுனையிலே நடந்த நாயகனை கவனம் சிதறாது கையாண்டு களமனுப்பிய காவிய நாயகி !!!
எத்தனையோ நாடுகள், ஏராளம் உறவுகள் பாதுகாப்பு தருவோமென்று உறுதி சொல்ல..
ஈழநாயகனின் இறுதிப் போர் வரைக்கும் இணையாக நின்று சென்ற இரும்பு ரோஜா !!!
வீடு ஒன்று சொந்தமாய் இருக்கவில்லை
விரும்பியபடி வாழ்ந்திட நினைத்ததில்லை
காட்டுக்குள் வாழ்கின்ற நிலை வந்தபோதும் கணவனின் கொள்கைகளை தாண்டிடாத முல்லை !!
கோயில்,குளம், கடை, தெரு அறிந்தவளா கொண்டாட்டம் ஏதேனும் கடந்தவளா ??
அல்லி, பொல்லி, அட்டியல், நகையென்று ஆசைகள் ஏதேனும் கொண்டவளா ??
பெற்றெடுத்த பிள்ளைகளையும் பெரும்போரின் உச்சத்தில் விட்டு..
தாலி தந்த தலைவனும் தர்மநெறி தவறாமை கண்டு..
கூடியழுத கூட்டத்தோடு சென்றவளே….
பாலச்சந்திரன் பட்டபாடு அறிவாயா – உன் பெத்த வயிறு பத்தி எரிய அழுதாயா ??
மூத்தவனின் முடிவுனக்கு புரிந்ததா – உன் வீட்டுக்குமரி என்னானாளென்று தெரிந்ததா ??
முள்ளிவாய்க்கால் கரை வரைக்கும் மூச்சைப் பிடித்து சென்றதறிந்தோம்…
பின்னே நடந்ததென்ன என்னுயிரே ??
பித்தாகிப் போனோமடி பிரபாகரி…!!!
இறைவனுக்கும், ஈழ நாயகனுக்கும் பின்னர்….
இருக்காரா இல்லையா எனும் பட்டியலில் நீயும் சேர்ந்தது ஏதோ ஒருவகையில் நிம்மதி !!!
ஊருக்கு நான் செல்லும் போதெல்லாம் உன்வீடு கடக்கின்ற கணமெல்லாம்….
பெருமையாய் இருப்பதென்னவோ உண்மை.. இருப்பினும், பெருவெள்ளம் சுமந்து நிற்கும் கண்கள் !!!
பெருமைக்குரிய பேரழகே, ஆயிரம் அண்ணிகள் வந்து போகலாம் அத்தனைபேரும் உனக்கு ஈடாகுமா ???
ஈழ நினைவுகளுடன், ஐங்கரன்…