vaiko-12-300-சிங்கள அரசு நடத்தியது போர்க்குற்றமல்ல, அப்பட்டமான இனப்படுகொலை என்ற உண்மையை உலக நாடுகள் உணர வேண்டும் என்று வைகோ தெரிவித்துள்ளார்.

இது குறித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், கூறியுள்ளதாவது:

”இரண்டாம் உலக யுத்தத்தின்போது லட்சக் கணக்கான யூதர்களை படுகொலை செய்த ஜெர்மனியின் அடலாஃப் ஹிட்லரின் நாஜி படைகள் நடத்திய கொடூரங்களின் சாட்சியத்தை டாச்சோ, ஆஸ்விஸ் சித்ரவதை முகாம்கள் இருந்த இடங்களில் இன்றும் காணலாம். வாஷிங்டனில் உள்ள பேரழிவு அருங்காட்சியகத்திலும் பார்க்கலாம்.

ஆனால், நாஜிகள்கூட செய்யாத மிகக் கொடூரமான அழிவுகளை ஈழத் தமிழர்களுக்கு சிங்கள பேரினவாத அரசின் இராணுவத்தினர் செய்தனர் என்பதற்கான ஆதாரங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளிச்சத்துக்கு வந்துள்ளன.அண்மையில் மன்னார் மாவட்டத்தில் மண்ணுக்குள் புதைகப்பட்ட தமிழர்களின் எலும்புக்கூடுகள், குழாய்கள் பதிப்பதற்காக மண்ணை அகழ்ந்தபோது வெளிப்பட்டன.2009 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சிங்கள இராணுவத்தினர் ஈழத்தமிழர்களைக் கூட்டம் கூட்டமாகப் படுகொலை செய்வதையும், குறிப்பாகத் தமிழ் இளைஞர்களை காடுகளுக்குள் இழுத்துச் சென்று சுட்டுக் கொல்வதையும், தமிழ்ப் பெண்கள் மிகக் கோரமான முறையில் கற்பழிக்கப்பட்டு, கொலை செய்யப்படுவதையும் உலகத்துக்கு சுட்டிக்காட்டியபோது நமது குரல் அலட்சியப்படுத்தப்பட்டது.

உலக நாடுகளின் செவிகள் செவிட்டுக் காதுகள் ஆகின. விழிகள் குருட்டுக் கண்களாக இருந்தன.2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் தேதி, சேனல்-4 காணொளியில் 8 இளம் தமிழர்கள் கைகள், கண்கள் கட்டப்பட்டு, நிர்வாணமான நிலையில் சுட்டுக்கொல்லப்பட்ட காட்சி மனிதாபிமானம் உள்ளோர் மனங்களை உலுக்கியது. தமிழர்கள் நெஞ்சில் விழுந்த பேரிடி என 2010 டிசம்பர் 2 ஆம் தேதி அதே சேனல்-4 காணொளியில், இசைப்பிரியா சிங்கள இராணுவத்தினரால் கொடூரமாகக் கற்பழிக்கப்பட்டு, படுகொலைக்கு ஆளாகி, சிதைந்து நிர்வாண சடலமாக மண்ணில் கிடந்த காட்சி தமிழ் இனப்படுகொலையின் உக்கிரத்தை உலகுக்கு உணர்த்தியது.

மாவீர மகன் பாலச்சந்திரன், மார்பிலே 5 குண்டுகள் தாங்கி பூமியில் கிடந்த காட்சியை சேனல்-4 இல் கண்டு தமிழகத்தின் இளைஞர்களும், மாணவர்களும் எரிமலையாய் சீறினார்கள்.2009 இல் போரின் உச்ச கட்டத்தின் போது, சிங்கள இராணுவத்தினர் ஈழத் தமிழ்ப் பெண்களை வதைத்துக் கொன்ற காட்சி புதிய ஆதாரமாகக் கிடைத்துள்ளது. அந்தக் கொடுமையை எழுத்தில் பதிய என் மனம் மறுக்கிறது. ஐயோ! இப்படியும் ஒரு கொடுமையா? என்று புலம்பி தவிக்கிறது.

தமிழ்ப் பெண்கள் 15 பேரை சிங்கள இராணுவம் கதறக் கதற பலாத்காரம் செய்து பின்னர் படுகொலை செய்து, சிதைந்துபோன அப்பெண்களின் உடல்களை உணவின்றியும், மருந்தின்றியும், குண்டு வீச்சுகளுக்கு மத்தியில் பதறித் துடித்துக்கொண்டிருந்த தமிழ் மக்கள் முன்னால் மண்ணில் வீசுகிறது. அத்துடன் முடியவில்லை கொடுமை.

மனிதகுலத்தின் கர்பக் கிரகமான பெண்ணின் கருவறையான உடல் பகுதியில் துப்பாக்கிகளைக் கொண்டு நாசப்படுத்தும் அக்கிரமம் மிருகங்கள் கூட செய்யத் துணியாதது.இந்தக் கொடிய சம்பவம் காணொளியாக சேனல்-4 இல் விரைவில் வெளியாகக்கூடும். எனவே, இலங்கைத் தீவில் சிங்கள அரசு நடத்தியது போர்க்குற்றமல்ல, அப்பட்டமான இனப்படுகொலை என்ற உண்மையை உலக நாடுகள் உணர வேண்டும்.

ஈழத்தமிழர்களுக்கு நீதி கிடைக்க இந்த இனக்கொலை குற்றத்துக்கு ‘சுதந்திரமான அனைத்துலக நீதி விசாரணை வேண்டும்’ என்ற ஆவேச முழக்கம், மார்ச் 10 ஆம் தேதி ஜெனீவாவில் முருகதாசன் திடலில் விண்முட்ட எழுவதற்கு புலம்பெயர்வாழ் ஈழத் தமிழர்கள் சங்கமிக்க உள்ளனர்.

அதற்கு ஆயத்தப்படுத்தவும், நீதி கேட்கும் குரல் உலகெங்கிலும் ஒலிக்கவும் பிப்ரவரி 26 ஆம் தேதி, தாய்த் தமிழகத்திலும், தரணி எங்கும் தன்மானத் தமிழர்கள் சாதி, மதம், கட்சிகள் கடந்து நீதி கேட்கும் போர் முழக்கத்தை எழுப்பிட தயாராகிக்கொண்டுள்ளனர்.இந்தச் சூழலில், கொடியவன் மகிந்த ராஜபக்சே மார்ச் 10 ஆம் தேதி லண்டனில் காமன்வெல்த் அமைப்பின் தலைவராக அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்க திட்டமிட்டுள்ளான்.

கூண்டில் குற்றவாளியாக நிறுத்தப்பட வேண்டிய மகிந்த ராஜபக்சேவுக்கு காமன்வெல்த் அமைப்பு தலைவனாக முடிசூட்டியது மன்னிக்க முடியாததாகும்.முருகதாசன் தீக்குளித்து மடிந்த மார்ச் 10 ஆம் தேதியில், தமிழர்கள் ஜெனீவாவில் நீதி கேட்டு அறப்போர் நடத்தும் நாளில், லண்டனில் பதவியேற்பு விழாவுக்கு திட்டமிட்டுள்ளான்.முன்பு லண்டன் மாநகரிலே ஈழத் தமிழர்கள் ஆர்த்தெழுந்து சிங்கள அதிபரை விரட்டி அடித்த அதே பாடத்தை மீண்டும் புகட்ட வேண்டும்.

‘பிரித்தானிய மண்ணுக்குள் நுழையாதே! இங்கிலாந்து அரசே இந்த அநீதிக்குத் துணைபோகாதே!’ எனும் அறப்போருக்கும் லண்டன் வாழ் தமிழர்கள் ஆர்த்தெழ வேண்டுகிறேன்” இவ்வாறு வைகோ தனது அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.