vadduதாயகம், தேசியம், தன்னாட்சியுரிமை எனும் கோட்பாடுகளின் அடிப்படையில் ஈழத்தமிழ் மக்களின் அரசியல் பெருவிருப்பினை 1976 இல் உலகிற்கு முரசறைந்த வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் நாற்பதாவது எழுச்சியாண்டில் நாம் இன்று காலடி பதித்துள்ளோம்.

 

14.05.1976 அன்று தந்தை சா.ஜே.வே செல்வநாயகம் அவர்களின் தலைமையில்; நிறைவேற்றப்பட்ட இத் தீர்மானமானது தமிழ் மக்கள் தாம் பட்டறிந்த அனுபவங்களின்;படி எக்காலத்திலும் சிங்கள பௌத்த பேரினவாத அரச கட்டமைப்புக்குள்; வாழ்தல் சாத்தியமற்றது என்பதனைத் தெளிவாக முரசறைந்தது.

 

1977ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலின் போது இத்தீர்மானத்தை தேர்தல் விஞ்ஞாபனமாகக் கொண்டு போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு வாக்களித்து தமிழ் மக்கள் தமது தெளிவான ஆணையையும் வழங்கியிருந்தனர்.

 

இன்று நாற்பது ஆண்டுகள் கழிந்த பின்னரும் 1977ம் ஆண்டுத் தேர்தலின்போது வழங்கப்பட்ட ஆணை மக்கள் மனங்களில் இன்னமும் உயிர்ப்புடன் உள்ளது. 1983இல் கருத்துச் சுதந்திரத்தை மறுதலிக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பின் ஆறாவது திருத்தச் சட்டமூலம் தமிழீழம் எனும் தனிநாட்டை அரசியற் தீர்வாக ஏற்றுக்கொள்வது பற்றிப் பேசுவதையே தண்டனைக்குரிய குற்றமெனப் பிரகடனப்படுத்தியதன் மூலம், தாயக மக்கள் தமது உண்மையான அரசியல் விருப்பைத் தெரிவிக்கவல்ல அரசியல்வெளி இன்று மறுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சர்வதேச சட்டங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையின் அடிப்;படையில் ஈழத் தமிழ் மக்கள் தமது தன்னாட்சி உரிமையினை தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றனர்.

 

முள்ளிவாய்க்காலில் நடாத்தப்பட்ட பெரும் இனவழிப்புப் போர் மூலம் தமிழர் தேசத்தினை ஆக்கிரமித்து, தமிழ் மக்களின் விடுதலை வேட்கையினை சிறிலங்கா அரச பயங்கரவாதம் அடக்கிவிட நினைத்தாலும், உலகெங்கும் வாழும் தமிழர்களின் மூச்சில் தமிழீழ விடுதலை பற்றிய கனவும் எண்ணங்களும் கலந்தே உள்ளன. முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு சிங்கள பௌத்த பேரினவாத அரச கட்டமைப்புக்குள் தமிழ் மக்கள் வாழ்தல் சாத்தியமே அற்றது என்பதனை மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறது.

 

போர் ஒன்றின் ஊடாகத் தாம் பெற்ற இராணுவ வெற்றியினை சிங்கள ஆட்சியாளர்கள் அரசியல் வெற்றியாக்க முனைகின்ற நிலையும், அனைத்துலக அரசுகள் தமது நலன்களின் அடிப்படையில் அமைந்துள்ள சிறிலங்காவின் ஆட்சி மாற்றத்தினைத் தக்கவைப்பதில்; கொண்டுள்ள அக்கறையும்; இன்று ஒரே புள்ளியில் சந்திக்கின்றன.

 

ஈழத் தமிழர்களின் அரசியல் விருப்பினை வெளிப்படுத்தி நிற்கும் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் நாற்பதாவது ஆண்டு நிறைவும், தமிழ் மக்களின் தேசிய பிரச்சனைக்குத் தீர்வு வழங்குவதாகக் கூறி புதிய அரசியல் அமைப்பு ஒன்றினை வரைவதற்கு சிங்கள ஆட்சியாளர்கள் எடுக்கும் முயற்சிகளும் இவ் ஆண்டில் எதிரெதிரே சந்திக்கின்றன. மறுபுறத்தில் இயல்பு வாழ்க்கை மறுக்கப்பட்டு, இராணுவ நெருக்குவாரங்களுக்குள் வாழும் தமிழ் மக்கள், ஆறாம் திருத்தச்சட்டம் அமுலில் உள்ள நிலையில், தமது அரசியல் வேணவாக்களை வெளிப்படுத்துவதற்கான அரசியல் வெளி முற்றாக மறுக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில், ஈழத்தமிழர்களின் அரசியல் விருப்பினை வெளிப்படுத்தவதற்கு ஐ.நா. மேற்பார்வையில் ஓப்பங்கோரல் முறையிலான வாக்கெடுப்பினை நடாத்துவதன் அவசியத்தினை நாம் வலியுறுத்தி நிற்கும் அதே வேளையில், இவ்விடயத்தில் ஈழத் தாயகமும் � புலம் பெயர் மக்களும் � தமிழகமும் � உலகத் தமிழர்களும் இணைந்து ஒன்றையொன்று வலுப்படுத்தும் வகையிலான மூலோபாயத்துடன் செயற்திட்டங்களை முன்னெடுக்க வேண்டியுள்ளது.

 

இதன் அடிப்படையில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும், அனைத்துலக ஈழத் தமிழர் மக்களவையும், அனைத்துலக தமிழ் இளையோர் அமைப்பும் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் நாற்பதாவது ஆண்டினை வலுவூட்டவும், இவ்வாண்டின்போது தீர்மானத்தின் அத்தனை பரிமாணங்களையும்; அரசியல் ரீதியாக வீச்சுடன் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வதற்குமான செயற்திட்டங்களின் அடிப்படையில் கூட்டாக இணைந்து செயற்படுவதெனத் தீர்மானித்துள்ளன.

 

இதன் முதற்படியாக, வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் நாற்பதாவது எழுச்சியாண்டில் அதன் அரசியல் முக்கியத்துவத்தை ஒரு முகமாக வெளிப்படுத்தும் வகையில் ஒற்றை இலச்சினையினைப் பயன்படுத்துவதெனத் தீர்மானித்து மேலேயுள்ள இலச்சினையை வடிவமைத்துள்ளோம்;.

 

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தினை அடித்தளமாகக் கொண்டு செயற்படுகின்ற அனைத்து தமிழர் அமைப்புக்களையும் ஒன்றாக இணைந்து செயற்பட வருமாறு இத்தால் உரிமையோடு அழைப்பு விடுக்கின்றோம்.

 

நன்றி
தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்