அனைத்துலக போர்க்குற்ற விசாரணையில் இருந்து சிறீலங்கா அரசு தப்பமுடியாது

0
619

சிறீலங்கா இராணுவமே தமிழ் மக்களை அதிகளவில் படுகொலை செய்திருந்தது. கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் உட்பட பெருமளவான தமிழ் மக்கள் போரின் இறுதி மாதங்களில் படுகொலை செய்யப்பட்டனர் என போர்க்குற்றவியல் நிபுணர்கள் மற்றும் முன்னாள் ஐ.நா பணியாளர்களை உள்ளடக்கிய குழு தனது அனைத்துலக குற்றவியல் சான்று வேலைத்திட்டம் என்ற நடவடிக்கையின் ஊடாக வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

war-crime-mulli
உத்தியோகபூர்வமான இந்த அறிக்கையானது அடுத்த மாதம் ஜெனீவாவில் ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணைக்குழு தனது கூட்டத்தொடரை மேற்கொள்ளவுள்ள நிலையில் வெளிவந்துள்ளது. சிறீலங்காவில் 40,000 இற்கு மேற்பட்ட பொதுமக்கள் போரின் இறுதி மாதங்களில் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழு தனது அறிக்கையில் முன்னர் தெரிவித்திருந்தது.

சிறீலங்கா அரசு சுயாதீனமான விசாரணைகளை மேற்கொள்ளத்தவறினால் போர்க்குற்ற விசாரணை ஒன்றை தாம் கோரவுள்ளதாக அமெரிக்காவும் பிரித்தானியாவும் தெரிவித்துள்ளன. சிறீலங்காவுக்கான இந்தக் காலக்கெடு முடிவதற்கு இன்னும் சில வாரங்களே உள்ளன.

தற்போது வெளிவந்துள்ள அறிக்கையானது திரு ஜேன் ரல்ஸ்ரன், யூகோஸ்லாவாக்கியாவில் இடம்பெற்ற போர்க்குற்ற விசாரணைகளுக்கு முன்னர் தலமைதாங்கியவர், பேராசிரியர் வில்லியம், செபாஸ், பிரித்தானியாவின் மிடில்செக்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான இவர் சிரேலியோனின் உண்மைகளை கண்டறிதல் மற்றும் இனநல்லிணக்கப்பாடு என்ற குழுவின் அங்கத்தவர். ஓய்வுபெற்ற கேணல் டெஸ்மொன்ட் ரவாஸ் காசாவில் உண்மைகளை கண்டறியும் குழுவில் பணியாற்றியவர், கோடன் வைஸ், சிறீலங்காவில் போர் இடம்பெற்ற காலப்பகுதியில் அங்கு ஐ.நா தூதராக பணியாற்றியவர் ஆகியவர்களால் தயாரிக்கப்பட்டது.

bala-3201
இருதரப்பும் போர்க்குற்றங்களை மேற்கொண்டிருந்தபோதும், சிறீலங்கா படையினரே திட்டமிட்டமுறையில் அதிகளவான போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களை மேற்கொண்டிருந்தனர். பொதுமக்களை குறிவைத்து தாக்கியதுடன், வைத்தியசலைகளையும் தாக்கியுள்ளனர். பாலியல் வன்புனர்வு, சிறுவர்கள் மீதான தாக்குதல் போன்றவற்றை சிறீலங்கா படையினர் திட்டமிட்ட முறையில் மேற்கொண்டிருந்தனர். சிறீலங்கா படையினரின் இந்த மனித உரிமை மீறல்களில் விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 12 வயது மகனும் கைது செய்யப்பட்ட பின்னர் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

பொதுமக்கள் செறிவாக வசித்த பகுதிகளை நோக்கியே சிறீலங்கா படையினர் திட்டமிட்டமுறையில் பீரங்கித் தாக்குதல்களை மேற்கொண்டிருந்தனர். இந்த தாக்குதல்களில் தாக்குதல் அற்ற பிரதேசம் என அறிவிக்கப்பட்ட பகுதிகளும் உள்ளடங்கும் இது தொடர்பில் முன்னர் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களையும் இந்த அறிக்கை ஏற்றுக்கொண்டுள்ளது.

பால் மா வாங்குவதற்கு வரிசையில் நின்ற இளம் தாய்மார்களும், குழந்தைகளும் எவ்வாறு எறிகணைத் தாக்குதலில் சிதறி பலியாகினர் என்பதை ஒரு உதவிநலப் பணியாளர் விசாரணையாளர்களிடம் விபரித்துள்ளார்.

எங்கும் இறந்த உடல்கள் சிதறிக்கிடந்தன, ஒரு கர்ப்பிணிப்பெண் இறந்துகிடந்தபோது அவரின் வயிற்றில் இருந்த குழந்தை வெளியில் சிதறிக்கிடந்தது இன்றும் எனது நினைவில் உள்ளது. இந்த தாக்குதலில் 38 சிறுவர்கள் உட்பட 78 பேர் கொல்லப்பட்டிருந்தனர் என அவர் தெரிவித்துள்ளார்.
கரையமுள்ளிவாய்க்கால் மற்றும் வெள்ளைமுள்ளிவாய்க்கால் பகுதிகளில் அமைந்திருந்த தாக்குதல் அற்றபிரதேசத்தின் மீது சிறீலங்கா படையினர் மேற்கொண்ட தாக்குதல்களில் பெருமளவான பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு வலையத்தினுள் இருந்தவர்களின் எண்ணிக்கையை குறைத்துக்கூறிய சிறீலங்கா அரசு அங்கு இருந்தவர்களுக்கு குறைந்த அளவான உணவுகளையே வழங்கியிருந்தது. மனிதாபிமான உதவிகளை நிறுத்திய இந்த நடவடிக்கையும் ஒரு போர்க்குற்றமே. பட்டினியால் பெருமளவான மக்கள் அங்கு உயிரிழந்தனர்.
மருத்துவ வசதிகள் இன்மை மற்றும் மருந்துகளை சிறீலங்கா அரசு தடைசெய்ததால் காயமடைந்த பெருமளவான மக்களின் அவயவங்களை அவசியமின்றி தாங்கள் வெட்டி அகற்றவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதாக அங்கிருந்த வைத்தியர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்த அறிக்கையானது சிறீலங்கா மீதான போர்க்குற்ற விசாரணையை வெகு அண்தைமயாக கொண்டுவந்துள்ளதாக அவுஸ்திரேலியாவைத் தளமாக்கொண்ட பொதுசேவைகள் நீதிமையம் (PIAC) என்ற அமைப்பைச் சேர்ந்த எட்வேட் சன்ரோவ் தெரிவித்துள்ளாதாக பிரித்தானியாவின் த ரெலிகிராப் தெரிவித்துள்ளது.

சிறீலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் நாம் தெளிவான ஆய்வை மேற்கொண்டுள்ளோம். சிறீலங்காவில் கொடுமையான போர்க்குற்றங்கள் இடம்பெற்றுள்ளன. எனவே அங்கு இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் நீதியான விசாரணைகளை மேற்கொள்வதன் மூலமே அங்கு ஒரு இனநல்லிணக்கப்பாட்டையும், அமைதியையும் ஏற்படுத்த முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

war-crime
எனினும் சிறீலங்கா அரசு தான் மேற்கொண்ட போர்க்குற்றங்களின் தடையங்களையும், ஆதாரங்களையும் அழித்துவிட்டதாக பிரித்தானியாவின் மிடில்செக்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான வில்லியம் செபாஸ் அல்ஜசீரா தொலைக்காட்சிக்குத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, எதிர்வரும் மார்ச்மாதம் இடம்பெறவுள்ள ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சிறீலங்கா மீதான சுயாதீனமான போர்க்குற்ற விசாரணையை கோரும் தீர்மானத்தை வொசிங்டன் தனது மூன்றாவது தீர்மானமாக கொண்டுவருவது பெரும்பாலும் உறுதியானது என படைத்துறை ஆய்வாளர் அருஷ் அவர்கள் ஈழம்ஈநியூஸ்இற்கு தெரிவித்துள்ளார்.

சிறீலங்கா மீதான உடனடியான பொருளாதாரத்தடை ஏற்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் குறைவாகவே உள்ளபோதும் அதனையும் நாம் நிராகரிக்க முடியாது.
சிறீலங்காவுக்கு வழங்கப்பட்ட காலஅவகாசம் காலம் கடந்துவிட்டது, எனவே சிறீலங்கா அரசு தப்புவதற்கான சந்தர்ப்பங்கள் மிகவும் குறைவானது ஆனால் தமிழ் மக்களின் அழுத்தங்களும், தமிழகத்தின் அழுத்தங்களும் இந்த சந்தர்ப்பத்தில் மேற்குலகத்தின் மீது மேலும் தீவிரமாக அதிகரிக்கப்படவேண்டும்.

இந்துசமுத்திரப்பிராந்தியத்தில் தமிழ் இனம் பெரும்பான்மையானது என நாம் ஒற்றுமையாக காண்பிப்பதில் தான் மேற்குலகத்தின் அசைவு தங்கியிருக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

செய்தித் தொகுப்பு: ஈழம் ஈ நியூஸ்.