R_-Sampanthanசிறீலங்கா அரசியலில் எதிர்க்கட்சியாக அமரும் வாய்ப்பினை சிங்கள அரசு தமிழ்க் கட்சி ஒன்றிற்கு வழங்கியுள்ளது. சிறீலங்கா சுதந்திரகட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து முன்னாள் அரச தலைவர் மகிந்த ரஜபக்சாவினை தோற்கடிப்பதற்கு வகுத்த வியூகத்தின் விளைவே இதுவாகும்.

 

எனினும் சுதந்திரக்கட்சியினையும் அதன் கூட்டமைப்பையும் இரண்டாக பிரித்து ஒரு தரப்பு தேசிய அரசுக்கு ஆதரவு வழங்க மறுதரப்பு எதிர்க்கட்சியாக செயற்படும் திட்டத்தையே சிங்கள தேசம் தீட்டியிருந்தது.

 

ஆனால் இந்தியாவின் தலையீடும், ஆலோசனையும் சிறீலங்காவின் திட்டத்தை மாற்றி அமைத்துள்ளது. இந்தியா மற்றும் சிறீலங்கா அரசுகளின் இந்த மாற்றத்திற்கான காரணம் ஒன்று தான். அதாவது தமிழ் மக்கள் மீதான போரின் போது சிறீலங்கா அரசும், அதன் படையினரும் மேற்கொண்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான அனைத்துலக விசாரணையை தடுத்தல் அல்லது அதற்கான கால அவகாசத்தை ஏற்படுத்திக் கொள்ளுதல்.

 

சிறீலங்கா அரசின் இந்த திட்டத்திற்கு தற்போது வெளிப்படையாகவே தனது ஆதரவுகளை வழங்கி வரும் அமெரிக்காவினையும், அனைத்துலக சமூகத்தையும் திருப்திப்படுத்தவே தமிழ் மக்களுக்கு சிறீலங்கா அரசில் அதிக அந்தஸ்த்து வழங்கப்பட்டுள்ளது போன்றதொரு தோற்றப்பாடு உருவாக்கப்பட்டுள்ளது.

 

225 ஆசனங்களைக் கொண்ட சிறீலங்கா அரசின் அரசியல் அமைப்பில் 16 ஆசனங்களைக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் எதனையும் சாதித்து விட முடியாது என்பதை சிங்கள தேசம் நன்கு உணரும். கடந்த கால வரலாறும் அதனையே  எமக்கு கற்றுத்தந்திருந்தது.

 

1977 களில் சிறீலங்காவில் எதிர்க்கட்சியாக அமரும் வாய்ப்பு தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு கிட்டியிருந்தது. அப்போது அது தொடர்பில் கருத்து தெரிவித்த அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள், தாம் எதிர்க்கட்சியாக அல்லாது எதிரிக்கட்சியாக செயற்படப்போவதாக தெரிவித்திருந்தார்.

 

ஆனால் பின்னர் தான் எமக்கு புரிந்தது, அது சிங்கள அரசை மிரட்டுவதற்கு விடுக்கப்பட்ட கோரிக்கையல்ல, தமிழ் மக்களை ஏமாற்றுவதற்கு பயன்படுத்தப்பட்ட வார்த்தை என்று.

 

எனவே போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பான அனைத்துலகத்தின் விசாரணைகளில் இருந்து தப்புவதற்காக சிங்கள அரசு எறிந்துள்ள இந்த எலும்புத்துண்டை தவிர்த்து தமிழ் மக்களின் அன்றாட மற்றும் அத்தியாவசிய பிரச்சனைகளை தீர்க்கும் முயற்சிகளை எதிர்க்கட்சித் தலைவர் முன்னெடுக்க வேண்டும் என்பதுடன் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவும், தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனைக்கு உகந்த தீர்வை எட்டவும் அவர் தனது பதவியை அனைததுலக மட்டத்தில் பயன்படுத்த வேண்டும்.

 

சிறீலங்கா அரசு கொடுத்துள்ள இந்த அற்ப சலுகையானது, தமிழ் மக்களை பயன்படுத்தி அனைத்துலக மட்டத்தில் அது தப்பிப் பிழைப்பதற்காக மார்க்கமாகும்.

 

எனவே தற்போது தான் தமிழ் மக்கள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டிய காலம், மக்கள் போராட்டங்களும், மாணவர் போராட்டங்களும் முழு வீச்சுடன் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதுடன், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும், அனைத்துலக சமூகத்திற்கும் அழுத்தங்களை ஏற்படுத்த வேண்டும்.

 

சிங்கள அரசின் சதி வலையில் இந்க இரு தரப்பும் சிக்கிவிடாது இருப்பதற்கான ஏதுநிலைகளை நாம் ஏற்படுத்த வேண்டும். சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீராவின் இராஜதந்ததினையும் இந்திய – அமெரிக்க கூட்டுச் சதியையும் முறியடிக்க வேண்டும்.

 

தமிழகம் மற்றும் புலம்பெயர் அமைப்புக்கள் இந்த போராட்டத்திற்கான பின்தளமாக செயற்பட முடியும், அதனை தாயகத்தில் மேற்கொள்வதற்கு அங்கு ஒரு வலுவான தமிழர் அணியின் எதிர்த்தரப்பு உருவாக்கப்ட வேண்டும்.

 

கடந்த பொதுத்தேர்தலில் வடக்கு – கிழக்கில் உருவாக்கப்பட்ட தமிழ்க் கட்சிகளின் இரு பிரதான எதிரணிகளை போன்ற ஒரு பலமான எதிரணியின் தேவை தற்போது எமக்கு உள்ளது. அதன் மூலம் தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகளை தடம்புரளாது தடுக்க முடியும்.

 

மறுவளமாக தமிழத் தேசியக் கூட்டமைப்பானது சிங்கள அரசுக்கும், அதனை வழிநடத்தும் எஜமானர்களுக்கும் விசுவாசமாக இருக்காது, சிறீலங்காவில் ஏற்படுத்தப்படும் உள்ளக விசாரணைக் கட்டமைப்புக்கு ஆதரவினை வழங்கக்கூடாது.

 

அனைத்துலக விசாரணையே வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் கூறுவாராக இருந்தால் அதுவே போதும். அதனை விடுத்து சிங்கள அரசுக்கு கால அவகாசத்தை வழங்கவேண்டும் என அவர் சிந்தித்தால் நாம் மீண்டும் 1977 ஆம் ஆண்டில் காலடி எடுத்து வைப்போம் என்பதே நிதர்சனமானது.

 

ஈழம் ஈ நியூஸ்