( ‘தேசத்தின் குரல்” மதியுரைஞர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் ஏழாம் ஆண்டு வீரவணக்க நாள் தமிழர் தேசம் எங்கும் அனுசரிக்கப்படுகின்றது. அவரது 2 ம் ஆண்டு நினைவு நாளில் பெண்ணிய மற்றும் உளவியல் ஆய்வாளரான பரணி கிருஸ்ணரஜனி அவர்களால் எழுதப்பட்ட நீண்ட ஆய்வின் சுருகக்மான வடிவத்தை இந் நாளில் மீள பதிவு செய்கிறோம்.)

bala-1
காலம் என்பது பல நினைவுகளை தின்று செரித்துவிடக்கூடியது. ஆனால் சில இழப்புக்களும் பிரிவுகளும் காலத்தால் தின்று தீர்த்துவிட முடியாதவை. கால உடைப்பில் சிதறுண்டு போகாத அத்தகைய ஒரு பேரிழப்புத்தான் அன்ரன் பாலசிங்கம் அவர்களுடையது. அவரின் இழப்பினூடாக விழுந்த வெற்றிடம் என்றுமே இட்டு நிரப்பப்பட முடியாதது. ஆனால் நிரப்பப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம். ஆனால் துரதிர்ஸ்டவசமாக அந்த வெற்றிடம் அப்படியே வெறுமையாகவே கிடக்கிறது.

அவர் தன் வாழ் நாளில் எத்தகைய பணியை மேற்கொண்டிருந்தார். அது இன்று எவ்வாறு முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது என்பதை ஆராய்வதும் அதிலுள்ள தேக்கங்களைக் கண்டடைந்து அதைக் களைய முற்படுவதும்தான் நாம் அவருக்குச் செய்யும் நிஜமான அஞ்சலியாகும். இதையொட்டி இந்தப் பத்தியினூடாக பன்முக ஆளுமை கொண்ட அவரது பணியின் ஒரு சிறு பகுதியை விளங்கிக் கொள்ள முற்படுவோம்.

இக் கட்டுரையின் தலைப்பு, காலனியாதிக்கத்திற்கெதிராக தனது வாழ்வின் இறுதிவரை போராடிய கறுப்பின வீரரான பிரான்ஸ் பனான் (Frantz Fanon) இன் Wretched of Earth நூலுக்கு பிரெஞ்சு தத்துவமேதை சர்த்தார் (Jean Paul Satre) எழுதிய முன்னுரையிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டது. ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைப் போராட்ட வடிவங்களை விபரிக்கும் பனான் இன் இந்நூல் உலகப் பிரசித்தி பெற்றது. அதைவிடப் பிரசித்தம் அந்நூலுக்கு சர்த்தர் எழுதிய முன்னுரை. உலக வரலாற்றிலேயே நூலின் உள்ளடக்கத்திற்கு நிகராக எதிர்வினையை எதிர்கொண்டதும் சிலாகிக்கப்பட்டதும் அனேகமாக சர்த்தாரின் இந்த முன்னுரையாகத்தான் இருக்க முடியும்.

‘நீதி என்பது அரசின் வன்முறை, வன்முறை என்பது மக்களின் நீதி” என்ற கருத்தியல் கோட்பாட்டின் அடிப்படையில் ஒடுக்கப்ட்டவர்களின் விடுதலையின் அடிநாதமாக இருக்கும் வன்முறையை சிலாக்கிக்கும் பனான் இன் நூலுக்கு முன்னுரை எழுதப்புகும் சர்த்தர் பல படிகள் மேலேபோய் வன்முறையின் உச்சமாக நிகழும் பயங்கரவாதத்தை தூக்கிப்பிடிக்கிறார். அரச வன்முறைக்குள்ளாகி நிர்க்கதியாகி நிராயுபாணிகளாக இருக்கும் மக்களின் ஒரே ஆயுதம் பயங்கரவாதம் மட்டுமே என்று வாதிடும் சர்த்தர் ஒடுக்கப்பட்டவர்களின் ஆயுதக்கிளர்ச்சிக்கு ஒரு புதிய வடிவத்தையும் தருகிறார். பிரெஞ்சு வேர்ச் சொல்லிலிருந்து பிரித்தெடுத்து ” terror” என்ற வார்த்தைக்கு ஒரு புதிய வியாக்கியானத்தை வழங்கியவர் சர்த்தார்.

சர்தாரினதும் பனானினதும் வியாக்கியானப்படி அரசின் வன்முறைக்குள்ளாகி ஒடுக்கப்பட்டு அடக்கப்படும் ஒரு இனத்திலிருந்து அந்த அடக்குமுறைக்குள்ளிருந்தே திமிறியெழுந்து வன்முறையின் துதிபாடியபடி வரலாறு ஒன்று மேலெழும் என்பது ஒரு கோட்பாடாகக் கட்டவிழ்கிறது. அப்போது அந்த வரலாற்றின் மீது பேரொளி ஒன்று வந்து குவிகின்றது. அப்போது ஒடுக்கப்பட்ட அந்த இனம் மட்டுமல்ல எதிரிகள் உட்பட ஒட்டுமொத்த உலகமுமே அந்த வரலாற்றுப் பேரொளியின் தரிசனத்தைக் காண்கிறார்கள். அது ஒரு முடிவிலி. அந்த இனத்தின் வரலாறாகவும் வழிகாட்டியாகவும் அது இயங்கிக் கொண்டேயிருக்கும். வரலாறு என்பது அதன் போக்கில் எழுதப்படும் என்பது ஒரு இயங்கியல் விதி. தமிழினத்தின் இயங்கியலும் வரலாறும் யார் என்பதை சொல்லவும் வேண்டுமா?

கால நீரோட்டத்தில் தமிழினத்தின் இயங்கியலையும் வரலாற்றையும் இனங்கண்டு அதனோடு இணைந்து இசைந்து அந்த வரலாற்றினது ‘குரல்” ஆக பரிமாண மாற்றமடைந்தவர்தான் அன்ரன் பாலசிங்கம் அவர்கள். ஒரு வகையில் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் அந்த இயங்கியல் வரலாற்றினுள் வெடித்துக் கிளம்பியவர் என்றுதான் தற்போது தோன்றுகிறது.

பனானை உலகிற்கு அறிமுகம் செய்த பெருமை சர்த்தாரையே சாரும். இருவரும் இணைந்து பணியாற்றியது மட்டுமல்ல பனான் இறந்த பிற்பாடும் அவரது கோட்பாடுகளை – கொள்கைகளை உலகிற்கு கொண்டு சேர்த்த பெருமையும் சர்த்தாரையே சாரும். அதன் அடையாளம் தான் இந்நூல்.

கால வெளியில் வைத்து யோசித்துப் பார்க்கும் போது ஒரு கோணத்தில் பனானுக்கு ஒரு சர்த்தார் போல் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனுக்கு ஒரு அன்ரன் பாலசிங்கம் என்று இப்போது புரிகிறது. வரலாறு என்பது எவ்வளவு அற்புதமானது. சும்மாவா சொன்னான் ஜெர்மானிய தத்துவக் கிழவன் கேகல் (Hegal) ‘வரலாறு என்பது அதன் போக்கில் எழுதப்படும்” என்று…

“war and terror ” என்ற பெருங்கதையாடல்களுடன் ‘பயங்கரவாதத்திற்கெதிரான போர்” புரியக் கிளம்பியிருக்கும் மேற்குலக வல்லரசுகளின் ஒற்றை அறத்தையும் நீதியையும் இன்று எதிர்கொள்ள எம்முடன் பனானும், சர்த்தாரும் இல்லாமல் போனது ஒரு வகையில் துரதிர்ஸ்டவசமானதுதான். இதை ஒரு வகையான காலக்குழப்பம் என்றுதான் கூற வேண்டும். அன்ரன் பாலசிங்கம் அவர்கள் தன் வாழ்நாள் பணியாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மீது விழத் தொடங்கியிருந்த ‘பயங்கரவாத” சாயத்தை தொடர்ந்து ஏதோ ஒரு வகையில் எதிர்கொண்ட வண்ணமிருந்தார். அவருடைய அந்த பணியின் ஆழத்தைத்தான் இன்று நாம் சர்த்தரினதும் பனானினதும் கோட்பாடுகளுடன் ஒப்பிட்டு சற்று ஆராய்ந்து பார்ப்போம்.

விடுதலைப் போராட்டங்களுக்கு பயங்கரவாத முத்திரை குத்தி ‘அழகு” பார்க்கும் அரச பயங்கரவாதத்திற்கு எதிராக நாம் சர்த்தாரின் மீள் வருகை ஒன்றை உறுதி செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம். ஒரு போராடும் இனம் என்ற அடிப்படையில் ஈழச்சூழலின் உச்சத்தில் நிறுத்தப்பட வேண்டிய சர்த்தார், பனான் போன்றவர்கள் தமிழ்த் தேசிய ஊடகப்பரப்பின் தட்டடையான ஒற்றையான வழிநடத்தலினால் மறக்கடிக்கப்பட்டதும் காணாமல் போனதும் துரதிர்ஸ்டவசமானது.

இவர்களின் பரிச்சயம் ஈழச்சூழலுக்கு பழக்கப்பட்டிருந்தால் இன்றுள்ளது போல் தற்போதைய மோசமான களநிலவரங்களை முன்வைத்து ஒரு ஈழத்தமிழன் பிதற்றிக் கொண்டிருக்கமாட்டான். தமிழ்த் தேசிய ஊடகங்கள் இனியாவது தமது வரலாற்றுப் பொறுப்பை உணர்ந்து தமது பன்முகத் தன்மையை கட்டிக்காக்க முன்வரவேண்டும்.

இந்த வரலாற்றுப் பின் புலத்திலிருந்து துதி பாடலாக இல்லாமல், மிகையுணர்ச்சி சார்ந்து இயங்காமல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் தோற்றுவாயை நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். அது தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் தோற்றுவாயுடன் பொருத்தப்படுவதை ஒரு கட்டத்தில் அவதானிக்கலாம்.

praba-mathi
வெற்றியின் விளிம்பில் நின்று ஆரவாரங்களுடன் ஒரு ஆய்வை முன்வைப்பதை விட தற்போதுள்ள இந்த இக்கட்டான சூழலில் ஒரு தேடலை நிகழ்த்துவதுதான் பொருத்தமாக இருக்கும். அதுதான் உண்மையானதாகவும் இருக்கும்.

போராட்டத்தின் தேவை என்பதே அழிவிலும் துயரத்திலும் இருந்துதான் பிறக்கிறது. எனவே ஒரு போராட்டத்தின் முடிவை- வீழ்ச்சியை ஒரு நிலப்பரப்பைக் கைப்பற்றுவதனூடாக, அழிவை ஏற்படுத்துவதனூடாக அந்த இனத்தின் துயரத்தை முன்னிறுத்தி வரையறுப்பதை கோமாளித்தனம் என்பதைவிட வேறு வார்த்தைகளில் விபரிக்க முடியவில்லை.

பனானின் மொழியில் கூறினால் ‘இந்த நிலைக்கு அஞ்சத் தேவையில்லை. அடக்குமுறையாளனின் இந்த வழிமுறைகள் வழக்கொழிந்தவை. சில சமயங்களில் அவை விடுதலையைத் தாமதப்படுத்த இயலும், ஆனால் தடுக்க முடியாது.” இதை நாம் எமக்கு தெரிந்த வேறு ஒரு மலினமான சொல்லாடலில் தமிழக நகைச்சுவை நடிகர் வடிவேல் பாணியில் குறிப்பிட்டால் ‘சின்னப்புள்ளத்தனமா இல்லை”.

சர்த்தார் இன்னும் அழகாகக் குறிப்பிடுகிறார், ‘தொடங்குவதற்கு முன்பே தோல்வியைத் தழுவி விட்ட ஒரு போரில் தங்கள் முழுப் படைபலத்தையும் பிரயோகித்து எதிரி நிலத்தை ஆக்கிரமித்து வெற்றுக்கூச்சலிடுகிறான். இந்த செயல் முழுவதும் வரலாற்றை எழுதப்புகுந்து விட்ட சுதேசிகளின் விடுதலை நிறைவேற்றத்தை தாமதப்படுத்துவதே ஒழிய. முற்றாகத் தடுப்பதல்ல.” எத்தகைய தீர்க்கதரிசனமான வார்த்தைகள்.

இந்த தீர்க்கதரிசனங்களை தின்று செரித்து வரலாற்றினுள் வெடித்தெழுந்தவர்தான் அன்ரன் பாலசிங்கம். அதுதான் அவரால் இறுதிவரை ‘பயங்கரவாத” பூச்சாண்டிகளுக்கு அஞ்சாமல் தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தை உலக அரங்கில் துணிச்சலுடன் முன்மொழிய முடிந்தது. அன்ரன் பாலசிங்கத்தின் வழி ஒவ்வொரு தமிழனும் வரலாற்றினுள் வெடித்தெழுவோம். நமது தாக்குதலால் அவ் வரலாற்றை உலகளாவியதாக மாற்றுவோம். நாம் போராடுவோம். நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டாலும் பிரச்சினையில்லை- ஆயுதங்கள் இல்லையென்றாலும் பிரச்சினையில்லை – காத்திருக்கும் கத்திகளின் பொறுமை போதும். அன்ரன் பாலசிங்கத்திற்கான நிஜமான அஞ்சலிக்குரிய வார்த்தைகள் அவை. ஏனெனில் சர்த்தார் குறிப்பிடுவது போல் தொடங்குவதற்கு முன்பே தோல்வியைத் தழுவி விட்டான் எதிரி.

அன்ரன் பாலசிங்கம் அவர்களை ஈழ விடுதலைப் போராட்டத்தின் மதியுரைஞர், கோட்பாட்டாளர் என்று நாம் கூறிக்கொண்டாலும் அவர் குறித்து ஒரு தட்டையான வாசிப்பே ஈழத்தமிழ்ச் சூழலில் இருக்கிறது. நாம் அவருடைய தோற்றுவாயை ஆராயத் தவறிவிட்டோம். பிரித்தானியாவிலிருந்து புறப்பட்டு வந்த அவர் எப்படி ஆயுதம் தரித்த குழுக்களை ஆதரித்து அதன் பின் நின்றார் என்ற யதார்த்த புறநிலையை ஆராயவும் அடையாளங் காணவும் தவறி விட்டோம்.

இத்தவறுகள்தான் இன்றைய போராட்டம் குறித்த தவறான புரிதலுக்கு நம்மை கொண்டு சென்று நிறுத்தியிருக்கிறது. மேற்குறிப்பிட்ட புறநிலைகளின் தோற்றுவாய்களை பிரக்ஞை பூர்வமாக நாம் தேடத் தொடங்கினால் அத் தேடல் எம்மை சர்த்தாரிலும் பனானிலும் கொண்டு போய் நிறுத்தும். ஏனெனில் அவர்களின் தொடர்ச்சியே அன்ரன் பாலசிங்கம்.

அன்ரன் பாலசிங்கம் குறித்து இன்னும் ஒரு தவறான புரிதல் இருக்கிறது. அவர் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதப் போராட்டம் இல்லை என்று நிறுவ முயன்றார் என்பதுதான் அது. இதைத்தான் நாம் தவறு என்கிறோம். ஏனெனில் அவர் அவ்வாறு செய்ய முற்படவில்லை என்பதுதான் உண்மை.

மேற்கண்ட வரிகளை முன்வைத்து ஒருவர் அப்படியென்றால் ‘புலிகள் என்ன பயங்கரவாதிகளா? பாலசிங்கம் அதை முன்மொழிந்தாரா?” என்று கேட்டு வாதாட முன்வரலாம். இது ஒரு ஒற்றைப் பார்வை. பன்முகக் கோணத்தில் அது உண்மையல்ல. இதன் அடிப்படையில்தான் பாலசிங்கம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தவிர்க்க முடியாமல் போன பயங்கரவாத கூறுகளை ஒரு அறவியல் வடிவமாக இனங்கண்டு அதை நியாயப்படுத்தினார் – கொண்டாடினார்.

ஏனெனில் நிராயுதபாணிகளாக – நிர்க்கதியாக நின்ற தமிழினத்தின் ஒரே ஆயுதமும் தீர்வும் அதன் மித மிஞ்சிய வன்முறையிலேயே அடையாளம் காணப்பட்டது. இதை அவர் துணிச்சலுடனும் நேர்மையுடனும் உலகத்துடன் பேச முற்பட்டார். எந்தக் கட்டத்திலும் அவர் இதிலிருந்து இறங்கவேயில்லை.

அன்ரன் பாலசிங்கம் பேசிய – கொண்டாடிய ‘பயங்கரவாதம்” இதுதான். ஆனால் இந்த அறத்தையும் நீதியையும் தவற விட்டுவிட்டு கேடுகெட்ட சர்வதேச சமூகம் ஒடுக்கப்பட்ட இனங்களின் விடுதலைப் போராட்டங்களின் மீது நியாயத் தீர்ப்புக்களை வழங்குவதற்கு முண்டியடிப்பது காலத்தின் விசித்திரம் என்று கூறாமல் வேறு எப்படிக் கூறுவது. பிரச்சினையின் மூலத்தையும் வேரையும் விட்டுவிட்டு அதற்கு தீர்வை முன்வைக்காமல் ‘பயங்கரவாத” பட்டியலிடும் சர்வதேச்தின் மனச்சாட்சிகளோடு நாம் தொடர்ந்து போராடுவோம். பாலசிங்கத்திற்கான அஞ்சலி அதில்தான் தங்கியுள்ளது. அவர் முன்னெடுத்த பணியும் அதுதான்.

அவர்களின் கதவு இறுகச் சாத்தப்பட்டிருக்கிறது என்பது எமக்குத் தெரியும். அவர்கள் திறக்கவில்லை என்பதற்காக நாம் தட்டுவதை நிறுத்த வேண்டாம். நாம் தொடர்ந்து தட்டுவோம். என்றாவது ஒரு நாள் அது திறந்தே தீரும்.

பரணி கிருஸ்ணரஜனி.