எமது இணையத்தில் பல புனை பெயர்களில் குறிப்பாக “தேனுப்பிரியன்” என்ற பெயரில் ஆசிரியர் வரதராஜன் அவர்கள் 2009 இற்கு பின்னான காலப்பகுதியில் எழுதிய தொடர் கட்டுரைகள் பலரை தமிழ்த்தேசியத்தின் பால் மீள திருப்பியிருந்தது. அவ்வாறான ஆக்கங்களில் ஒன்றை ஆசான் வரதராஜன் அவர்கள் நினைவாக ஈழம்ஈநியூஸ் இங்கு பிரசுரம் செய்கின்றது.

கடந்த வார ஈழமுரசு வாரஏட்டில் வெளியாகிய ஆய்வாளர் அருஷ் எழுதிய “இரகசியமாய் சிதைக்கப்படும் தமிழர் தாயகம் தடுப்பதற்கு வழி என்ன?” என்ற கட்டுரையை வாசித்தேன் மிக நன்றாக இருந்தது. இன்று தாயகத்தில் நடைபெறுவதை நிதர்சனமாகக் காட்டியிருக்கிறார்.

அருஷ் இன் நண்பர் ஒருவருக்கு பஸ்சில் ஏற்பட்ட அனுபவத்தை எழுதியிருந்தார்.. வெளிநாடுகளிலிருந்து இங்கு வருபவர்கள், தனக்கு அருகில் இருப்பவர்கள் தமிழர்களாகத்தான் இருப்பார்கள் என்ற பழைய நினைவில் பேசியது ஆச்சரியமில்லை.

land-grab
இவ்விடத்தில் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தைக் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். அண்மையில் நான் வவுனியா செல்லும் பஸ்சில் சென்றுகொண்டிருக்கும்போது ஒருவர் சாவகச்சேரியில் ஏறி கிளிநொச்சிக்கு டிக்கட் எடுத்தவிட்டு எனக்கு அருகில் அமர்ந்தார். சிறிது நேரத்தில் ‘வெலாவ கீயத’ என்று சிங்களத்தில் நேரத்தைக் கேட்டார். அவர் தமிழர் என்று எனக்குத் தெரியும். எனவே தமிழிலேயே நேரத்தைக் கூறினேன். அவர் நீங்கள் தமிழா என்று வினாவிவிட்டு என்னுடன் உரையாடினார்.

வெளிநாடுகளிலிருந்து இங்கு வருபவர்கள், தனக்கு அருகில் இருப்பவர்கள் தமிழர்களாகத்தான் இருப்பார்கள் என்று நினைக்கின்றார்கள். ஆனால் இங்கிருப்பவர்கள் தனக்கு அருகில் இருப்பவர்கள் சிங்களவராக இருப்பார் என நினைக்கின்றனர். இதுதான் இன்றைய தாயகத்தின் நிலை.

தமிழர்கள் தென்னிலங்கைக்குச் செல்லும்போது ஏதேனும் தகவல் அறியவேண்டுமாயின், சிங்களத்தில்தான் விசாரிக்க வேண்டும். எதிர்வருங்காலங்களில் யாழ்ப்பாணத்திலும் இதேநிலைதான். யாழ்ப்பாணம் � வவுனியா செல்லும் பஸ்களில் சிலவற்றில் மட்டுமே தமிழ்ப் பாட்டுக்கள் போடப்படுகின்றன. அனேகமான பஸ்களில் சிங்களப் பாட்டுக்கள்தான் ஒலிக்கின்றன.

தென்னிலங்கை பஸ்களில் எங்கேயாவது தமிழ்ப் பாட்டுக்கள் ஒலிப்பது உண்டா?

ஒரு காலத்தில் எங்கும் தமிழ் எதிலும் தமிழ். சாகும்போதும் தமிழ் மொழிந்து சாகவேண்டும். எந்தன் சாம்பலும் தமிழ் மணந்து வேகவேண்டும் என்று கவிஞன் பாடினான். ஆனால் இன்று எங்கும் சிங்களம் எதிலும் சிங்களம். இதுதான் மகிந்த சிந்தனையின் ஒரே இனம், ஒரே நாடு என்ற தத்துவம். அன்று அபிவிருத்தித் திட்டங்கள் என்ற பெயரில் கிழக்கை இழந்தோம். இன்று அதேபாணியில் வடக்கையும் இழக்கப் போகின்றோம். 50களிலும் 60களிலும் நீர்ப்பாசன அபிவிருத்தித் திட்டங்கள் என்ற பெயரில் கிழக்கில்சிங்களவர் குடியமர்த்தப்பட்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் தென்பகுதியில் (இன்றைய அம்பாறை மாவட்டம்) பின்வரும் குடியேற்றத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.

கல்லோயாக் குடியேற்றத்திட்டம்

எக்கலாறு நீர்ப்பாசனத் திட்டம்

நாமல் ஓயா நீர்ப்பாசனத் திட்டம்

ஜயந்திவீவ நீர்ப்பாசனத் திட்டம்

அம்பலம் ஓயா நீர்ப்பாசனத் திட்டம்

பனலகம நீர்ப்பாசனத் திட்டம்

மகாக்கண்டிய படித்த வாலிபர் குடியேற்றத்திட்டம்

வெலிக்கண்டிய குடியேற்றத்திட்டம்

கித்துள்வௌ குடியேற்றத்திட்டம்

பிம்புரட்டாவ குடியேற்றத்திட்டம்

நவக்கிரி குடியேற்றத்திட்டம்

இக் குடியேற்றத்திட்டங்களின் மூலம் கிழக்குமாகாணத்தின் தென்பகுதி சிங்களமயப்படுத்தப்பட்டது. திருகோணமலை மாவட்டத்தில் பின்வரும் குடியேற்றத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.

கந்தளாய்க் குடியேற்றத் திட்டம்

அல்லைக் குடியேற்றத் திட்டம்

மொறவேவ (முதலிக்குளம்) குடியேற்றத் திட்டம்

வான்எல குடியேற்றத்திட்டம்

மகாதிவுல்வௌ (பெரிய விளாங்குளம்) குடியேற்றத் திட்டம்

பதவியா (பதிவில்குளம்) குடியேற்றத் திட்டம்

கல்மெட்டியாவக் குடியேற்றத் திட்டம்

இக் குடியேற்றத்திட்டங்களின் மூலம் திருகோணமலை மாவட்டத்தின் பெரும்பான்மையினராக சிங்களவர் மாற்றப்பட்டனர். இதன்படி கிழக்குமாகாணத்தின் வடபகுதி சிங்களமயப்படுத்தப்பட்டது. கிழக்கு மாகாணத்தின் எஞ்சிய பகுதியாக இருந்தது அதன் மத்திய பகுதியான மட்டக்களப்பு மாவட்டம் மட்டுமே. அதனையும் சிங்களமயப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துக் கொண்டிருந்த காலகட்டத்தில்தான் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் ஆயுதப் போராட்டமாக உருவெடுத்தது. அரசாங்கம் தனது சிங்களக் குடியேற்றத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதை இப் போராட்டம் தடுத்து வைத்திருந்தது.

இதனால் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டம் மற்றும் வன்னி, யாழ் மாவட்டங்கள் இதுவரை காலமும் சிங்களக் குடியேற்றங்களிலிருந்த தப்பிப் பிழைத்திருந்தது. ஆனால் இன்று தடுப்பார் யாரும் இல்லை என்ற மமதையில் சிங்களக் குடியேற்றங்களை அரசாங்கம் முழுவீச்சில் மேற்கொண்டு வருகின்றது.

varatharajan-4
அபிவிருத்தி என்ற மாயமானைக் காட்டி தமிழ் மண்ணை அரசாங்கம் சிங்களமயமாக்குகின்றது. மானின் கவர்ச்சியில் மயங்கிய சீதையினால் தூண்டப்பட்டு மானின் பின்னால் இராமன் ஓட, மானை நெருங்கிய பின்னரே அது மான் அல்ல தம்மை அழிக்கவந்த இராட்சதன் என்னபதை இராமன் உணர, அதற்குள் சீதை இராவணனால் கவரப்பட்டாள். இது இராமாயணம் கூறும் கதை.

சீதையாக தமிழ் மக்களையும் இராமனாக தமிழ் அரசியல்வாதிகளையும், மற்றும் சில புலம் பெயர் தமிழர்களையும் இராவணானாக மகிந்தாவையும் கற்பனைசெய்து பாருங்கள். எதிர்காலத்தில் நடைபெறப்போவது விளங்கும். இன்று அபிவிருத்தியைக் காட்டி மகிந்தா தமிழ் மக்களை மயக்க, தமது ஆற்றாமை காரணமாக மக்களும் அபிவிருத்தி மாயையில் மயங்கிக் கிடக்கின்றனர். இது மக்களின் தவறல்ல. ஆனால் மக்களை சரியானமுறையில் வழிநடத்தவேண்டிய கூட்டமைப்பினரும் அரசாங்கத்தின் இச் சதித்திட்டத்திற்குள் உள்வாங்கப்பட்டிருப்பதுதான் துரதிஸ்டவசமானதும் அபாயகரமானதுமாகும்.

அபிவிருத்தியும் மக்களின் புனர்வாழ்வும் மிகவும் அவசியமானதொன்றுதான். ஆனால் அபிவிருத்தி என்ற பெயரில் எமது மக்களும் மண்ணும் சிங்கள தேசத்தினால் கவரப்படுமாயின் அபிவிருத்தியின் நன்மைகளை அனுபவிக்கப்போவது யார்? இன்று அன்று மானைப் பின்தொடர்ந்ததனால் சீதையைப் பறிகொடுத்த இராமன் சீதையை மீட்டெடுப்பதற்கு உதவ அனுமான் இருந்தார்.

இன்று அபிவிருத்தியைக் காட்டி எமது மண்ணை பறித்த, பறிக்கின்ற சிங்கள அரசாங்கத்திடமிருந்து எமது மண்ணை மீட்டெடுக்க உதவப்போகும் அனுமான் யார்? இன்று நிலத்திலும் புலத்திலும் வாழும் புத்திஜீவிகள் பலர் அரசாங்கத்தோடு இணைந்து செயற்படுவதன்மூலம்தான் தமிழ் மக்களை வாழவைக்கமுடியும் என்றவொரு கருத்தை உருவாக்கிக்கொண்டு வருகின்றனர். ஆனால் தமிழ் மக்களின் வாழ்விடங்களைப் பறிப்பதை நோக்கமாகக்கொண்டு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் சதித் திட்டங்களுக்கு அறிந்தோ அறியாமலோ அவர்கள் துணைபோகின்றார்கள்.

இன்று யாழ்ப்பாணத்திலும் வன்னியிலும்; மிகவேகமாக வளர்ந்து வருகின்ற தொழில் வங்கித் தொழில் ஆகும். இலங்கையில் இயங்கும் அனைத்து வணிக வங்கிகளும் நிதிக் கம்பனிகளும் காப்புறுதி நிறுவனங்களும் குத்தகைக் கம்பனிகளும் கடந்த ஒரு வருடகாலத்தில் வன்னியிலும் யாழ்ப்பாணத்திலும் தமது கிளைகளைப் பரப்பி வருகின்றன.

சாதாரண பெட்டிக்கடைகள் போல் இன்று வங்கிக் கிளைகள் திறக்கப்படுகின்றன. கப்பல் கொள்கலன்கள்தான் வன்னியில் வங்கிக் கிளைகளாக செயற்படுகின்றன. இவ்வளவு அவசரமாக வங்கிக் கிளைகள் திறக்கப்படவேண்டிய அவசியம் என்ன? தமிழ் மக்களின்

சேமிப்பைக் கொள்ளையடிப்பதில் வங்கிகளுக்கடையில் காணப்படும் போட்டியின் விளைவே இந்த அவசரம். இவ்வாறு தமிழ்ப் பிரதேசங்களில் திரட்டப்படும் சேமிப்பு இங்கேயே முதலீடாக மாறும் என்றால் அது வரவேற்கத்தக்க விடயம்.

ஆனால் உண்மைநிலை அவ்வாறு இல்லையே. கடந்த காலங்களைப் போல தற்போதும் வடக்கில் சேமிப்பைத் திரட்டி தெற்கில் முதலீடு செய்யும் நடவடிக்கையைத்தான் வங்கிகள் தொடர்ந்து செய்கின்றன. வடக்கில் இயங்கும் வங்கிகள் இன்று வரை தாம் திரட்டிய வைப்புக்களையும் வடக்கில் தாம் வழங்கிய கடன்களையும் பற்றிய தகவல்களை வெளியிடுமா?

இன்று வடக்கிற்கு எத்தனையோ வங்கிகள் வந்துவிட்டன. ஆனால் ஒரேயொரு வங்கி மட்டும் தனது செயற்பாட்டை வடக்கில் ஆரம்பிக்கவில்லை. அதுதான் பிரதேச அபிவிருத்தி வங்கி. இலங்கை மத்திய வங்கியின் அனுசரனையோடு ஆரம்பிக்கப்பட்டு இயங்கிவரும் வங்கியாகும். இவ்வங்கியின் சிறப்பு அம்சம் என்னவெனில் ஒவ்வொரு மாகாணத்திற்கும் தனி வங்கியாக செயற்படுவதாகும்.

எனவே தான் இயங்கும் மாகாணத்திற்குள்ளேயே சேமிப்புக்களைத் திரட்டி அம் மாகாணத்திற்குள் மட்டுமே கடன்கள் முதலீடுகளை மேற்கொள்ளமுடியும். இதன்படி ஒரு மாகாணத்தின் சேமிப்பு பிறிதொரு மாகாணத்திற்கு எடுத்துச் செல்லப்படமாட்டாது.

இவ்வாறான பிரதேச அபிவிருத்தி வங்கி மத்திய, வடமத்திய, ஊவா, வடமேல், தென், சப்பிரகமுவ ஆகிய ஆறு மாகாணங்களில் இயங்குகின்றன. மேல் மாகாணம், வட மாகாணம், கிழக்கு மாகாணம் ஆகிய மூன்று மாகாணங்களில் மட்டுமே இவ் வங்கி இயங்கவில்லை. இதில் மேல் மாகாணம் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட கிராமியப் பொருளாதாரத்தைக் கொண்டிருக்கவில்லை. எனவே இவ் வங்கியின் தேவை இம் மாகாணத்திற்கு இல்லை.

ஆனால் தமிழ் மாகாணங்களான வடக்கு கிழக்கில் ஏன் இவை ஆரம்பிக்கப்படவில்லை? முன்னர் யுத்தம் தான் காரணம் என்றால் தற்போது என்ன தடை உள்ளது? வடக்கிற்கு இவ்வளவு வேகமாக அனைத்து வங்கிகளும் படையெடுத்துவரும்போது ஓர் அரச வங்கியான பிரதேச அபிவிருத்தி வங்கி மட்டும் ஏன் உருவாக்கப்படவில்லை? காரணம் வெளிப்படையானது. இவ் வங்கி இங்கு அமைக்கப்பட்டால் இங்கு திரட்டப்படும் சேமிப்பு முழுவதும் இங்கேயே முதலீடு செய்யப்படவேண்டும். தெற்கிற்கு அதனை எடுத்துச் செல்லமுடியாது. இந்த ஒரேயொரு காரணத்தினால் இவ் வங்கி இங்கு அமைக்கப்படவில்லை.

வங்கிகளை உருவாக்குவதிலேயே இவ்வளவு தந்திரத்தைப் பின்பற்றும் அரசாங்கம் தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்பும் என்று நம்புவது எவ்வளவு முட்டாள்தனம். எனவே அபிவிருத்தி என்ற மாயைக்குள் நாம் சிக்குவோமேயானால் எமது மக்களும் அழியப் போகின்றார்கள் வாழ்விடமும் பறிபோகப் போகின்றது. எனவே எமது மக்களையும் வாழ்விடத்தையும் பாதுகாத்துக் கொண்டு அபிவிருத்தியை மேற்கொள்ளக்கூடிய ஒரு பாதையை நாம் தெரிந்தெடுக்கவேண்டிய ஒரு இக்கட்டான நிலையில் உள்ளோம். நிலத்திலும் புலத்திலும் உள்ளவசர்கள் ஒருங்கிணைந்து இதற்கான ஒரு பொறிமுறையை உருவாக்குவோம். மண்ணையும் பாதுகாப்போம். மக்களையும் பாதுகாப்போம். அபிவிருத்தியையும் மேற்கொள்வோம்.

-ஈழம் ஈ நியூஸ் இற்காக தாயத்திலிருந்து தேனுப்பிரியன்.

21 Sep 2010 அன்று பிரசுரிக்கப்பட்டது.