தமிழகத்திற்குரிய கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தங்கச்சி மடம் மீனவர்களான எமர்சன், வில்சன், அகஸ்டன், லாங்லெட், பிரசாந்த் ஆகிய ஐந்து பேரையும் 2011ஆம் ஆண்டு சிங்களக் கடற்படையினர் சட்டவிரோதமாக கடத்திக் கொண்டு போய் அந்த ஐந்து தமிழர் மீது போதைப் பொருள் கடத்தியதாக பொய் வழக்குப் போட்டு சிறையில் அடைத்து வைத்திருந்தனர். இப்பொழுது அவர்களது உயர் நீதிமன்றம் இந்த ஐந்து பேருக்கும் தூக்கு தண்டனை விதித்திருக்கிறது.

சிங்கள இனவெறியுட் செயல்படும் இலங்கை அரசு தமிழ்நாட்டு மீனவர்கள் மீது பொய்வழக்கு போட்டு மரணதண்டனை விதித்திருப்பது தமிழ் நாட்டு மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகமெங்கும் இலங்கை அரசுக்கும், இந்திய அரசுக்கும் எதிராக போராட்டங்கள் வலுத்து வருகின்றன.

fisher-tamil-periyak2
மீன் பிடிக்கச் சென்ற அப்பாவி மீனவர்களைத் தாக்கி சிறை பிடித்தும், அவர்களுடைய படகு உள்ளிட்ட உடமைகளை பறிமுதல் செய்து, சிறைக் கொட்டடியில் அடைத்து வைக்கும் சிங்கள அரசுடன், இந்திய அரசு தொடர்ந்து ‘நட்புறவு’ வளர்த்து வருகின்றது. அண்மையில், சிங்களக் கடற்படைத் தளபதிக்கு இந்திய அரசு விருதி வழங்கியதும், சிங்கள இனவெறியைத் தூண்டிய புத்த பிக்கு அனாரிகா தர்மபாலாவுக்கு அஞ்சல் தலை வெளியிட்டதும், 2 போர் கப்பல்களை இலங்கைக்கு வழங்குவோம் என இந்திய அரசு அறிவித்திருப்பதும் இதற்குச் சான்றுகள்!

இலங்கை அரசின் தமிழினப் பகையையும், இந்திய அரசின் சிங்கள ஆதரவுப் போக்கையும் கண்டித்து, இன்று(31.10.2014) மாலை, சிதம்பரத்தில் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர்கள் இனவெறியன் இராசபட்சே கொடும்பாவியை எரித்தனர். “விடுதலை செய்! விடுதலை செய்! அப்பாவி மீனவர்களை விடுதலை செய்!”, “மோடி அரசே இனவெறி இலங்கையுடன் கைக்குலுக்காதே!” என்பன உள்ளிட்ட பல்வேறு முழக்கங்களை போராட்டத் தோழர்கள் எழுப்பினர்.

சிதம்பரம் மேலவீதி – வடக்குவீதி சந்திப்பு பெரியார் சிலை அருகில் நடைபெற்ற இப் போராட்டத்திற்கு, தமிழ்த் தேசியப் பேரியக்க பொதுக்குழு உறுப்பினர் தோழர். ஆ.குபேரன் தலைமையேற்றார். தமிழ்த் தேசியப் பேரியக்க நகரச் செயலாளர் தோழர் கு.சிவப்பிரகாசம், மூத்தத் தோழர் மு.முருகவேள், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் விடுதலைச் செல்வன், தமிழக மாணவர் முன்னணி தமிழக அமைப்பாளர் தோழர் வே.சுப்ரமணிய சிவா உள்ளிட்ட திரளான தமிழின உணர்வாளர்களும், மாணவர்களும் இதில் கலந்து கொண்டனர்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த் தேசியப் பேரியக்கம்.
பேச: 7667077075, 9047162164
==========================