தமிழ் மக்களின் விடிவிற்காக, தமிழ் தேசமொன்றின் மீள்வருகைக்குமாக உழைத்த ஒரு உன்னத மனிதரை தமிழினம் 18.08.2014 அன்று இழந்துவிட்டது. தனது தேசம் விடுதலை அடைய வேண்டும் என்று அமரர் சின்னத்துரை வரதராஜன் அவர்கள் எந்த சூல்நிலையிலும் அற்புதமான இலட்சியவாதியாகத் திகழ்ந்தார். தான் அணைத்துக்கொண்ட இலட்சியத்திற்காக தனது வாழ்வை அர்ப்பணித்தார்.

varatha-6
சுயநல வாழ்வு எனும் குறுகிய வட்டத்திற்குள் தனது நீண்ட வாழ்வை சிறைப்படுத்திக் கொள்ளாமல் உயர்ந்த வாழ்வு வாழ்ந்தார். தனது இனப்பற்றாலும் தேசப்பற்றாலும் தமிழ்ச் சமூக மேன்மைக்காக இறுதிவரை சேவையாற்றினார். தனது மக்கள் விடுதலை அடையவேண்டுமென்ற உயரிய எண்ணத்திற்கு தனது அறிவாற்றல், செயலாற்றல் அனைத்தையுமே ஒருங்கிணைத்து தேசப் பணிபுரிந்தார்.

ஒடுக்குமுறைக்குள்ளாக்கப்பட்ட தனது இனத்தின் விடியலிற்காக தனது தேசப்பணியை உறுதியோடு முன்னெடுத்தார் . அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை 2012 ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தில் நடாத்திய மாநாட்டிலும் கலந்துகொண்டு தமிழின விடியலுக்காய் குரல் கொடுத்தார் .

கொடிய நோயினால் இவரது உடல் தளர்ந்து போயிருந்தாலும் உள்ளத்தில் சுதந்திர உணர்வு நிரம்ப இளமை மிடுக்குடன் மிளிர்ந்த இவர் இறுதிவரை தமிழ் மண்ணிலும், மக்களிலும் பற்று மிகுதியுடன் வாழ்ந்தார்.

அமரர் வரதராஜன் அவர்களின் இழப்பு தமிழினத்துக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு .தமிழருக்கு நிரந்தர தமிழீழ தாயகம் விரைவிலே மலரும் என்ற உறுதியோடு தேசத்தின் விடுதலை மீதும், எமது இனத்தின் பற்றோடும் உறுதியோடும் இறுதி மூச்சு வரை செயற்பட்டு வந்த அமரர் வரதராஜன் அவர்களுக்கு உலகத் தமிழினத்தின் சார்பில் எமது ஆழ்ந்த இரங்கலையும் அக வணக்கத்தையும் இத்துடன் தெரிவிக்கின்றோம் .

அமரர் வரதராஜன் அவர்களின் பிரிவாற் துயருறும் அவரது குடும்பத்தினரோடும், உறவினர்களோடும், நண்பர்களோடும் இவ்வாறன துயர நாட்களில் எமது அன்பையும் ஆதரவையும் அனைத்துலக ஈழத்தமிழர்கள் ஆகிய நாம் தெரிவித்து நிற்கின்றோம்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

நன்றி
அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை (ICET)