அமெரிக்காவின் நிறவெறிக்கு எதிராக அணி திரண்ட உலகம்

0
1357

அமெரிக்காவில் இடம்பெறும் சம்பவங்களை அச்சத்துடன் பார்க்கிறோம் – கனடா பிரதமர்

நாங்கள் எல்லோரும் அமெரிக்காவில் இடம்பெறும் சம்பவங்களை மிகுந்த அச்சத்துடன் அவதானித்து வருகின்றோம் என கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடந்த வாரம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் காவல்துறை அதிகாரிகளால் கறுப்பு இன அமெரிக்கரான ஜார்ச் பிளாய்ட் முழங்காலால் மிதித்து படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்காவில் பெரும் போராட்டங்கள் வெடித்துள்ளன. இந்த போராட்டம் அமெரிக்காவில் தொடரும் நிறவெறிக்கு எதிரான போராட்டமாக மாறியுள்ளது.

இதனைத்தொடர்ந்து போராட்டக்காரர்களுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தும் அமெரிக்க அதிபர் டொலாட் ரம்பிற்கு எதிராக அனைத்துல மட்டத்தில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்த நிலையில் கனடா பிரதமர் அமெரிக்க அதிபரின் நடவடிக்கையை கடுமையாக விமர்சித்துள்ளார். இது மக்களை ஒருங்கிணைப்பதற்கான நேரம். அவர்களின் குரல்களை கேட்பதற்கான நேரம் என ட்ரூடோ மேலும் தெரிவித்துள்ளார்.

நிறவெறியை நாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை: போப் ஆண்டவர் பிரான்சிஸ்

வெள்ளை நிறவெறியை நாம் எந்த காரணத்தைக் கொண்டும் சகித்துக்கொள்ள முடியாது என பிளாயிட்ன் மரணம் குறித்து கருத்து தெரிவித்துள்ள போப் ஆண்டவர் தெரிவித்துள்ளார்.

தற்போது அமெரிக்காவில் நிகழ்ந்துவரும் வன்முறைகள் சுயஅழிவு மற்றும் சுயதோல்வியாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிளாய்டின் மரணம் உலகில் உள்ள கருப்பின மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது: கானா அதிபர்

ஜார்ச் பிளாய்டின் மரணம் உலகம் முழுவதிலும் உள்ள கருப்பின மக்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக கானா நாட்டின் அதிபர் அகுபோ அடோ தெரிவித்துள்ளார்.

இது ஒரு மோசமான பக்கத்தை நினைவுபடுத்தியுள்ளது. இது சரியானது அல்ல. அமெரிக்காவில் உள்ள எங்கள் உறவுகளின் கடினமாக நேரத்தில் நாங்கள் துணை நிற்போம். கானா மக்களின் சார்பில் பிளாய்டின் குடும்பத்திற்கு என அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிளாய்டின் மரணத்திற்கு பிரித்தானியா பிரதமர் ஜோன்சன் கண்டனம்

அமெரிக்கா காவல்துறை அதிகாரிகளால் கறுப்பு இன அமெரிக்கரான ஜார்ச் பிளாய்ட் படுகொலை செய்யப்பட்டதற்கு பிரித்தானியா பிரதமர் பொரிஸ் ஜோன்சன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் காவல்துறையினரின் நடவடிக்கைக்கு எதிராக போரட்டங்கள் வெடித்துள்ள நிலையில் பிரித்தானியா பிரதமர் இந்த போராட்டம் குறித்து முதல் முதலாக கருத்து தெரிவித்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

நிறவெறி கொடுமையானது – ஜேர்மன் அதிபர்

நிறவெறி கொடுமையானது என அமெரிக்காவில் ஜார்ச் பிளாய்ட் படுகொலை செய்யப்பட்டது தொடர்பில் கருத்து தெரிவித்த ஜேர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல் தெரிவித்துள்ளார்.

பிளாய்டின் கொலை மிகவும் கொடுமையானது. நுpறவெறி என்பதும் கொடுமையானது. அமெரிக்க அதிபர்களின் அரசியல் அணுகுமுறை சர்ச்சையான ஒன்று என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் நிறவெறிக்கு எதிராக உலகம் முழுவதும் போராட்டங்கள்

அமெரிக்காவின் நிறவெறிக்கு எதிராக உலகம் முழுவதும் பல ஆயிரம் மக்கள் பேரணிகளை மேற்கொண்டு வருகின்றர். அமெரிக்க கறுப்பு இனத்தை சேர்ந்த ஜார்ச் பிளெய் என்பவரை கடந்த மாதம் 25 ஆம் நாள் அமெரிக்க காவல்துறையினர் நீதிக்கு புறம்பாக படுகொலை செய்ததற்கும், கறுப்பின மக்களுக்கு எதிராக தொடர்ந்து அமெரிக்க காவல்துறையினர் மே;றகொண்டுவரும் வன்முறைகளுக்கு எதிராகவும் உலகம் எங்கும் மக்கள் அணிதிரண்டுள்ளனர்.

அமெரிக்காவில் இடம்பெற்றுவரும் வன்முறைகளைத் தொடர்ந்து 23 மாநிலங்களில் தேசிய பாதுகாப்பு படையினரை அமெரிக்கா அரசு கடமையில் ஈடுபடுத்தியுள்ளது.

அமெரிக்காவுக்கு வெளியே பல நாடுகளில் உள்ள நகரங்களில் பேரணிகள் இடம்பெற்று வருகின்றது.

வடஅமெரிக்கா – கனடா, மெக்சிக்கோ ஆகிய நாடுகளில் பெருமளவில் மக்கள் கூடியதுடன், நீதி இல்லையேல் அமைதி இல்லை என்ற கோசத்தை அவர்கள் எழுப்பியிருந்தனர்.

தென்அமெரிக்கா – பிரேசில் மற்றும் ஆர்ஜன்ரீனா ஆகிய நாடுகளின் நகரங்களில் பெருமளவான மக்கள் கூடியிருந்தனர்.

ஐரோப்பா – ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகளின் நகரங்களான லண்டன், பேர்லின், அம்ஸ்ரடாம் ஆகியவற்றில் அணிதிரண்ட மக்கள் பிளாய்டின் மரணம் அதிகார துஸ்பிரயோகம் என்ற கோசங்களை எழுப்பியிருந்தனர்.

ஆபிரிக்கா – நையீரீயா, கென்யா ஆகிய நாடுகளில் பேரணிகள் இடம்பெற்றதுடன், கென்யா, தென்ஆபிரிக்கா, தன்சானியா, உகண்டா, சிம்பாபே மற்றும் கொங்கோ ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் அறிக்கைகளையும் வெளியிட்டிருந்தன.

மத்தியகிழக்கு – ரெல் அவிவ், கைபா மற்றும் கிழக்கு ஜெருசலம் ஆகிய நகரங்களில் பேரணிகள் இடம்பெற்றுள்ளன.

ஆசிய பசுபிக் – அவுஸ்திரேலியா, நியூசிலாந்து உட்பட பல நகரங்களில் பேரணிகள் இடம்பெற்றுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here