us-assistant-secஇந்தப் புகைப்படத்தில் இருக்கும் நபர்களுக்கும் இந்த ஆண்டு அமெரிக்கா முன்வைக்கும் தீர்மானத்திற்கும் என்ன தொடர்பு? இந்தப் புகைப்படத்தில் கண்ணாடி அணிந்திருக்கும் நபர் பற்றி ஏற்கனவே அறிந்திருப்பீர்கள். அமெரிக்காவின் உள்துறை அமைச்சகத்தின் ‘மத்திய, தெற்காசிய’ விவகாரங்களுக்கான துணைச் செயலர் நிஷா பிஸ்வால் (Nisha Biswal – Assistant Secretary of State).

அவர் பிப்ரவரி 2ம் தேதி அன்று கொழும்புவில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தாம் எதற்காக தீர்மானம் கொண்டு வருகிறோம் என்று கூறினார். தாம் கொண்டு வரும் தீர்மானம் இலங்கையுடனான நட்பின் அடிப்படையில் கொண்டு வரப்படுவது என்று கூறினார். நட்பின் அடிப்படையில் கொண்டு வரப்படும் தீர்மானம் நிச்சயமாக சர்வதேச நடவடிக்கைகளை கோரும் தீர்மானமாக இருக்காது என்று கூறியதோடு மட்டுமின்றி, தமிழர்களை மதச் சிறுபான்மையினர் என்றும் கூறினார்.

நட்பின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் இந்த நகர்வு இலங்கை அரசிற்கு சாதகமான இரண்டு விஷயங்களை மேற்கொள்கின்றது. இலங்கை அரசிற்கு எதிராக சர்வதேச நடவடிக்கைகள் எதுவும் நடைபெற்று விடாமல் தடுக்கின்றது. இரண்டாவதாக, இலங்கை அரசு மேற்கொள்ளும் தமிழின அழிப்பு நடவடிக்கைகளை, சர்வதேசத் தீர்மானத்தின் வாயிலாக தமிழர் என்றொரு தேசிய இனம் இல்லை என்று நிறுவ முயல்கின்றது.

இந்த நட்பு, எதன் அடிப்படையில் அரங்கேறுகிறது என்பதை இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் சிசன் (Sison) 2013ம் ஆண்டு ஏப்ரல் 8ம் தேதி நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கூறுகின்றார். இலங்கையுடனான நட்பினை வலுப்படுத்துவதற்காக மின்சாரம், போக்குவரத்து, வான்வெளித்துறை மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளில் அமெரிக்க நிறுவனங்கள் பெருமளவில் முதலீடு செய்ய உள்ளன என்று கூறினார்.

இந்த வணிக நலன்களே, நட்பு என்னும் ரீதியில் இலங்கைக்கு ஆதரவாக அமெரிக்காவை செயல்பட வைக்கின்றது. இதன் ஒரு அங்கமாகத்தான், இந்தப் புகைப்படத்தில் இருக்கும் சந்திப்பு நடைபெறுகின்றது. நிஷா பிஸ்வால், இந்த ஆண்டு மார்ச் 4 அன்று பெங்களுரு வந்திருந்தார். அப்பொழுது அவர் சந்தித்த பல்வேறு நபர்களுள் இந்தப் புகைப்படத்தில் இருக்கும் ஷர்மிளா பரதனும், சுக்லா சந்திராவும் GE India நிறுவனத்தின் அதிகாரிகள். சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியிலும், சென்னை பல்கலைக் கழகத்திலும் பயின்ற பின்பு, அமெரிக்காவின் சில பல்கலைக்கழகங்களில் பயின்ற ஷர்மிளா பரதன் தற்பொழுது GE நிறுவனத்தின் இயக்குனராக பணிபுரிகின்றார். அவரது பணிகளுள் இந்தியா, இலங்கை, மாலத்தீவுகளில் மின்சார வர்த்தகம் சார்ந்த கொள்கைகள் மற்றும் அரசுகளுடான உறவுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை.

முதற்கட்டமாக இலங்கை மற்றும் இந்தியாவில் GE நிறுவனத்தின் வாயிலாக மேற்கொள்ளப்படும் முதலீடுகள் குறித்த ஆலோசனைகள் இடம்பெற்றுள்ளன. அதே தினத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசிய நிஷா பிஸ்வால், உலகம் அறிந்திருந்த சந்தைகளிலேயே மின்துறை சந்தைதான் மிகப்பெரியது என்றும் இதில் Civil Nuclear துறை குறித்த விவாதங்களும் இந்திய அரசுடன் மேற்கொள்ளப்படும் என்று கூறினார். (Civil Nuclear துறை என்பது தனியார் நிறுவனங்களுக்கு அணு உலை அமைக்கும் அனுமதி வழங்குவது குறித்தது.) இது தொடர்பாக அடுத்தக்கட்டமாக அமெரிக்காவின் மின்துறை அமைச்சர் மோனிஸ் (Moniz), மார்ச் 11 அன்று டெல்லியில் அடுத்தக் கட்ட பேச்சினை முடித்துள்ளார்.

தெற்காசியப் பகுதியில் தனது வர்த்தக நலன்களை மேம்படுத்தவேண்டும் என்பதற்காக, ஒரு இனத்தின் விடுதலைப் போராட்டத்தை முற்றுமுழுதாக சிதைக்க வேண்டும் என்னும் நோக்கில், தமிழர்கள் என்னும் தேசிய இனத்தை மறுத்து, அவர்களை மதச் சிறுபான்மையினர் என்று வரையறுத்து ஒரு அயோக்கியத் தீர்மானம் கொண்டு வரும் அமெரிக்கா உண்மையிலேயே கில்லாடிதான். இல்லாவிட்டால், பாதிப்புக்குள்ளாகியிருக்கும் தமிழினத்திலிருந்தே, தனது அயோக்கியத் தீர்மானத்திற்கு ஆதரவாக லாபி செய்ய ஆட்களை களமிறக்கியிருக்கமுடியுமா என்ன?

நன்றி
தோழர் உமர்