‘அமெரிக்க பிரேரணை’ சதிவலை பின்னியது யார்?

0
645

viki-samமுள்ளிவாய்க்காலில் ஈழவிடுதலைக்கான ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டபோது ஏற்பட்ட உணர்விற்கு அண்மித்த ஒரு வலியினை உலகத்தமிழினம் இன்று சந்தித்திருக்கிறது. ஜெனீவா கூட்டத் தொடர் சிங்களப் பேரினவாத அரசுக்கு மிகப் பெரும் சவாலாக அமையும் என்ற ஒரு எதிர்பார்ப்பு உலகெங்கிலும் பரந்து வாழும் தமிழ் மக்கள் மனங்களில் சிறு நம்பிக்கை தருவதாக அமைந்திருந்தாலும் இறுதி நேரத்தில் இலங்கை அரசாங்கத்துக்கு மீண்டுமொரு அவகாசத்தைக் கொடுக்கும் ஒரு வரைபு அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்டமை பலத்த ஏமாற்றத்தினை கொடுத்திருக்கிறது.

ஆனால் அமெரிக்கா அண்மையில் தெரிவித்து வந்த கருத்துக்களுக்கும் தற்போது முன்வைத்திருக்கின்ற வரைபுக்கும் இடையில் பலத்த முரண் நிலை காணப்படுவதற்கான பிரதான காரணம் என்ன என்பது தொடர்பிலான அதிர்ச்சி தரும் தகவல்கள் அம்பலமாகியிருக்கின்றன.

நம்ப முடியாத ஆனால் நம்பியே ஆகவேண்டிய ஒரு தவிர்க்க முடியாத நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கின்றது. புலம் பெயர் தளத்தில் தமிழ் உணர்வாளர்கள் தமது அன்றாடக் கடமைகளை விட்டுவிட்டு வீதி வீதியாக இறங்கி எமது இனத்தின் விடுதலைக்காக முடிந்தவரை தம்மை அர்ப்பணித்துப் போராடுகின்றார்கள்.

ஜெனீவாக் களம் தமிழினத்துக்கு நீதி பெற்றுத்தரும் என்ற நம்பிக்கையுடன் அந்த மக்கள் பனியிலும் மழையிலும் கடினமாய்ப் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதேபோல மனித நேயத்தினை நேசிப்பவர்கள் ஈழத்தில் நிகழ்ந்தேறிய இனக்கொலைக்கு நீதி கிடைக்கவேண்டும் என்பதற்காக மொழி, மதம் கடந்து உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனாலும் தமிழ் மக்கள் தமது தலைமைகளாக தெரிவு செய்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானிக்கும் சக்திகள் தமிழினத்தின் தலையில் மண்ணை அள்ளி வீசியிருக்கின்ற விடயங்கள் தற்போது அம்பலத்துக்கு வந்திருக்கின்றன.

அமெரிக்கா முன்வைத்த இலங்கை தொடர்பிலான வரைபில் போர்க்குற்றம் தொடர்பிலான சர்வதேச விசாரணை குறித்த எந்த வித வார்த்தைப் பிரயோகங்களும் இடம்பெறாமைக்கு கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் அவருடைய பிரத்தியேக செயலாளரும் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரனுமே காரணம் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருக்கின்றது.

ஜெனீவாக் கூட்டத் தொடர் நெருங்கிவரும் நிலையில் கூட்டமைப்பு எதிர்பார்க்கும் விடயங்கள் என்ற சாரப்பட அமெரிக்காவிடம் கூட்டமைப்பின் பெயரால் அறிக்கை ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் சர்வதேச போர்க்குற்ற விசாரணை என்ற விடயத்தினை பயன்படுத்த வேண்டாம் என அமெரிக்காவிடம் வலியுறுத்தப்பட்டிருப்பதாக தெரியவருகிறது. தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக வடக்கு மாகாண சபைத் தேர்தல் மூலம் வெற்றி பெற்றிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தக் கோரிக்கையினை முன்வைத்திருப்பதால் அது தொடர்பில் அமெரிக்கா செவி சாய்த்திருப்பதாகவே தெரிகிறது.

கத்தோலிக்க மதகுருமார் மற்றும் இலங்கையின் 22 சிவில் சமூக அமைப்புக்கள் கூட சர்வதேச விசாரணை தொடர்பில் வலியுறுத்தி ஐ.நாவுக்கு கடிதங்களை அனுப்பியிருந்த போதிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரையில் ஒரு கடிதத்தினையோ ஒரு அறிக்கையினையோ ஐ.நாவிடமோ ஐ.நாவின் மனித உரிமைப் பேரவை உறுப்பு நாடுகளிடமோ முன்வைக்கவில்லை. ஆனாலும் கூட்டமைப்பினர் மேடைக்கு மேடை சர்வதேச போர்க்குற்ற விசாரணை தொடர்பிலான வலியுறுத்தல்களை மேற்கொண்டு வந்திருந்த போதிலும் உண்மையில் என்ன நடந்திருக்கின்றது என்பது கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலருக்கே நேற்றுத்தான் தெரியவே வந்திருக்கிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான திடீர் ஒன்று கூடல் ஒன்று கொழும்பில் நேற்று பிற்பகல் (05.03-2014) நடைபெற்றிருந்தது. அந்தச் சந்திப்பில் அமெரிக்கா முன்வைத்துள்ள தீர்மானம் தொடர்பில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடுமையான அதிர்ப்தியினையும் கவலையினையும் வெளியிட்டிருக்கின்றனர்.

காணாமல் போனோர் தொடர்பில் விசாணை மேற்கொள்ளல், இனப்பிரச்சினைத் தீர்வுக்கான வழிமுறைகள், நில அபகரிப்பு உட்பட்ட போரால் மிகவும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கென்று எதுவும் குறிப்பிடப்படாத நிலையில் வெலவெரியாவில் இராணுவத்தினரின் தாக்குதலில் சிங்களவர்கள் மூவர் கொல்லப்பட்டமை, வடக்கு மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டமைக்கு பாராட்டு மற்றும் அரசாங்கம் முன்னெடுக்கும் அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து வரவேற்பு தெரிவிக்கப்பட்டிருக்கின்றமை உட்பட்ட அரசாங்கத்திற்கு சாதகமான விடயங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனவே தவிர அரசாங்கத்துக்கு ஒரு நெருக்கடியை ஏற்படுத்தி அதன் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நன்மை ஏற்படுத்தும் எந்தவித சரத்துக்களும் குறித்த பிரேரணையில் முன்வைக்கப்பட்டிருக்கவில்லை. இந்த விடயங்களை கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியதுடன் இதன் மூலம் மீண்டுமொரு கால அவகாசம் வழங்கப்படுவதால் தமிழர் தாயகம் எதிர்நோக்கவுள்ள நெருக்கடிகள் குறித்தும் விவாதித்திருந்தனர்.

இதனிடையே அமெரிக்கா தீர்மானம் கொண்டுவந்திருந்தாலும் கூட்டமைப்பினராகிய நாம் இது தொடர்பில் என்ன செய்தோம்? என்ற கேள்வியை கூட்டமைப்பு உறுப்பிர்கள் எழுப்பிய போது, பதிலளித்த சம்பந்தன், இது தொடர்பில் சர்வதேச பிரதிநிதிகளிடம் வலியுறுத்திவருகிறோம் என்று தெரிவித்திருக்கின்றார்.

இந்த நிலையில் குறுக்கிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமெரிக்காவிடம் கூட்டமைப்பினால் ஒரு தீர்மான வரைபு கையளிக்கப்பட்டதாக தெரியவந்திருக்கிறது. அதில் குறிப்பிட்ட விடயம் தொடர்பில் தெளிவுறுத்துமாறும் அறிக்கையின் பிரதியினை தமக்கு காட்டுமாறும் கோரியிருக்கின்றனர். இறுதிவரையில் அதனை காட்டுவதற்கோ, அதில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் குறித்து வாய் திறப்பதற்கோ சம்பந்தன் மறுத்திருக்கின்றார். கூட்டமைப்பின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிறேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் உட்பட்ட எவருக்கும் அமெரிக்காவிடம் கையளிக்கப்பட்ட மனுவில் என்ன குறிப்பிடப்பட்டிருந்தது? என்பதற்கு பதில் வழங்கப்படவில்லை.

ஆக, சுமந்திரனும் சம்பந்தனும் இணைந்து தயாரித்த ஒரு அறிக்கை அமெரிக்காவிடம் கையளிக்கப்பட்டிருக்கின்றது என்பது மட்டுமே நேற்றைய கூட்டத்தில் நிரூபணமாகியிருக்கின்றது. இதனிடையே அமெரிக்கா கொண்டுவந்துள்ள பிரேரணையில் திருத்தம் மேற்கொள்ளுமாறு கூட்டமைப்பின் சார்பில் ஒரு மனுவினைக் கையளிப்போம் என்று கூட்டமைப்பு உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தபோது முற்றாக மறுத்துரைத்த சம்பந்தன், அடுத்த தீர்மானத்தின் பின்னர் அது குறித்து பரிசீலிக்கலாம் என உறுதியாகத் தெரிவித்ததாக தெரியவந்திருக்கின்றது.

பல மாதங்களுக்கு முன்னரே போர்க்குற்றம் தொடர்பிலான சர்வதேச விசாரணைக்கு எதிரான நிலைப்பாட்டினை சுமந்திரன் எடுத்துவிட்டிருந்ததாக தற்போது அறிய முடிகிறது, அவர் தனது கருத்துக்கு துணையாக இலங்கைக்கான தென்னாபிரிக்கத் தூதரை குறிப்பிட்டு, போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்துவது மஹிந்த அரசு தமிழ் மக்களுக்கு தீர்வு வழங்கும் நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கச் செய்துவிடும் என்பதால் அதனைக் கைவிடவேண்டும் என்று தென்னாபிரிக்கத் தூதர் தன்னிடம் வலியுறுத்தியதாகவும் அந்த முடிவினை ஏற்கவேண்டும் என்று சக நாடாளுமன்ற உறுப்பினர்களை அவர் அழுத்ததிற்கு உட்படுத்தியதாவும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆக, அமெரிக்காவிடம் சம்ந்தன் – சுமந்திரன் கையளித்த பிரேரணையில் சர்வதேச விசாரணையை கைவிடவேண்டும் என்பதே வலியுறுத்தப்பட்டிருப்பதாக நம்ப முடிகிறது.

இதேவேளை கூட்டமைப்பின் சார்பில் சுமந்திரன் – சம்பந்தன் கொடுத்த பிரேரணையை கவனத்தில் எடுத்துக்கொண்டு அமெரிக்கா தன்னுடைய நடவடிக்கையினை முன்னெடுக்குமா? என்ற கேள்வி கூட எழலாம். சர்வதேசத்தினைப் பொறுத்தவரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஏகோபித்த தெரிவு என்ற விடயம் மட்டுமே முன்னுக்குத் தெரியும் என்பதால் கூட்டமைப்பின் பெயரால் கையளிக்கப்பட்ட அறிக்கையினை சர்வதேசம் தமிழ் மக்களின் குரலாகவே பார்த்திருக்கலாம். அதனால் அவ்வாறான ஒரு முடிவினை நோக்கி அமெரிக்கா நகர்ந்திருக்கலாம் என்றும் கருதலாம்.

இதனிடையே,

நேற்றைய கூட்டத்தில் சுமந்திரன் பங்குகொள்ளாத நிலையில் சம்பந்தன் தவிர செல்வராசா தொடக்கம் சிறிதரன் வரையில் போர்க்குற்றவிசாரணைக்கான முன்மொழிவு இடம்பெற்றிருக்காத பிரேரணை தொடர்பில் விசனம் வெளியிட்டிருந்த நிலையில், அன்றிரவே, சம்பந்தன் மற்றொரு நாடகத்தினை அரங்கேற்றியிருக்கின்றார். கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் நடைபெற்ற விடயங்களை தலைகீழாகப் புரட்டிப் போடும் செய்தி ஒன்றினை மாவை சேனாதிராஜா ஊடாக புனைந்திருக்கிறார் சம்பந்தன்.

குறிப்பாக, “பல நாடுகளுடன் கூட்டமைப்பு பேச்சு நடத்தும்” என்ற தலைப்பில் சில இணையத்தளங்களில் செய்திகள் வெளியாகியிருந்தமையை வாசகர்கள் அறிந்திருப்பார்கள்.

சில நாட்களுக்கு முன்னர் இன அழிப்பாளர் மஹிந்தவின் தொலைபேசி ஊடான ஆசீர்வாதத்துடன் தமிழின அழிப்பில் முக்கிய பங்குவகித்த ஈபிடிபி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் மனம் நெகிழ்ந்த வாழ்த்துக்களுடன் புதிதாக ‘மலர்ந்த’ இணையத்தளம் சம்பந்தனின் பொய்ப் பித்தலாட்டத்தினை முழுமையாக மூடி மறைக்கும் செய்தியை வெளியிட்டிருக்கின்றது. குறித்த இணையம் வெளியிட்ட செய்தியை சடுதியாக கொப்பி செய்து பழகிய இணையங்கள் மீள் பிரசுரம் செய்திருந்தன.

அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளமை வருமாறு,

mahi-suma-samp
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 25 ஆவது கூட்டத் தொடரில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளினால் இலங்கைக்கு எதிராக சமர்ப்பிக்கவுள்ள பிரேரணையின் நகல் வடிவம் மிகவும் வலுவானதாக இறுதி வடிவம் பெற சம்பந்தப்பட்ட நாடுகளின் முக்கியஸ்தர்களுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேரில் பேச்சு நடத்தவுள்ளது. அத்துடன் குறித்த பிரேரணையில் தமிழர் தாயகப் பகுதிகளில் தொடரும் காணி சுவீகரிப்பு உட்பட இராணுவ ஆக்கிரமிப்புகளும் உள்ளடக்கப்படவேண்டும் என்றும் கூட்டமைப்பு கோரிக்கை விடுக்கவுள்ளது.

நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெற்ற கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழுக் கூட்டத்திலேயே மேற்படி முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. பிற்பகல் 2.30 மணி தொடக்கம் மாலை 6 மணி வரை நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், எஸ். வினோநோகராதலிங்கம் ஆகியோரைத் தவிர கூட்டமைப்பின் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

ஜெனீவாப் பிரேரணை தொடர்பில் வெளிநாடுகளுடன் பேச்சு நடத்த நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் சென்றபடியால் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை எனத் தெரியவருகின்றது. ஐ.நா. விசாரணையைக் கோரும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் பிரேரணையின் நகல் வடிவத்தை ஆரம்பத்திலேயே குழப்பகரமானது என்று சொல்லி இதனை ஈழத் தமிழர் நலனில் அக்கறை கொண்டோர் கண்டபடி விமர்சிப்பது வருந்தத்தக்கது என்றும் இந்தக் கூட்டத்தில் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்துத் தெரிவித்தனர். “ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 25 ஆவது கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உத்தியோகபூர்வ பிரேரணை சமர்ப்பிப்பதற்கு கால அவகாசம் இருக்கின்றது. தற்போது அங்கத்துவ நாடுகளிடம் வழங்கப்பட்டுள்ளது பிரேரணையின் நகல் வடிவமே. இந்த நகல் வடிவம் கடந்த காலங்களை விட வலுவானதாக இருக்கிறது.

இதனை மேலும் வலுப்படுத்த அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் முக்கியஸ்தர்களுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேரில் பேச்சு நடத்தவுள்ளது” என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா ஆகியோர் இதன்போது தெரிவித்தனர். இந்தப் பிரேரணையில் இலங்கை மீது சர்வதேச விசாரணை என்ற சொல் வெளிப்படையாக இருக்கவேண்டும் என சம்பந்தப்பட்ட நாடுகளின் முக்கியஸ்தர்களிடம் கூட்டமைப்பு எடுத்துரைக்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். இதேவேளை, இலங்கையில் இடம்பெற்ற இடம்பெற்ற போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் சேர்ந்து சர்வதேச விசாரணையைக் கோரும் வலுவான பிரேரணையை இம்முறை கொண்டு வரவேண்டும். என்று கூட்டமைப்பு இந்தியாவிடம் நேரில் வலியுறுத்தத் தீர்மானித்துள்ளது என்றும், இந்தியாவின் உயர்மட்டக் குழுவினரை சந்திப்பதற்கு டில்லியிலிருந்து அழைப்புக் கிடைத்ததும் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் தலைமையில் குழுவொன்று அங்கு செல்லத் திட்டமிட்டுள்ளது என்று இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். அத்துடன் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் பிரேரணை நகல் வடிவத்தை நீர்த்துப் போகச் செய்ய இந்தியா முயற்சிக்கக்கூடாது என்றும் இந்திய உயர்மட்டக் குழுவினரை கூட்டமைப்பு நேரில் சந்தித்து கோரிக்கை விடுக்கும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஆக, ஐ.நாவில் தீர்மானத்தினை முன்வைக்கின்ற அமெரிக்காவிடம் கூட்டமைப்பு கையளித்த மனுவில் என்ன விடயத்தினை குறிப்பிட்டிருக்கின்றார்கள் என்பதை சக நாடாளுமன்ற உறுப்பினர்களிடமே வெளியிட மறுத்துள்ள நிலையில் இரண்டுங் கெட்டான் நிலையில் விளங்கி வருகின்ற, கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் காத்திரத்தன்மையை சிதைத்த சூத்திரதாரியாகிய இந்தியாவிடம் விசாரணை தொடர்பில் வலியுறுத்தப்போவதாகவும் ஒரு கதையினை மாவை சேனாதிராஜாவின் துணையுடன் சம்பந்தன் அவிழ்த்துவிட்டிருக்கின்றார்.

இதனிடையே, ஜெனீவா கூட்டத் தொடருக்கு முன்பாக அங்கு நடைபெறும் ஆலோசனைக் கருத்தாடல்களில் பங்கேற்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தராக சர்வதேச தளத்தில் அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்ற திருவாளர் சுமந்திரன் சென்றிருக்கிறார். கடந்த மாதம் ஜெனீவா சென்ற கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிறேமச்சந்திரனை எந்த ஒரு வெளிநாட்டுப் பிரதிநிதிகளையும் சந்திக்க அனுமதிக்கவிடாது ஒதுக்கி அவர் மனம் நொந்து அங்கிருந்து திரும்பியதாகவும் இதற்கு முன்னர் நடைபெற்ற நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் சுமந்திரனை சுரேஷ் பிறேமச்சந்திரன் கடுமையாக சுமந்திரனை திட்டித்தீர்த்ததாகவும் தெரியவந்தது.

இதேவேளை, சுமந்திரனின் உண்மை முகத்தினை அனந்தி சசிதரன் யாழ்ப்பாண ஊடகவியலாளர்கள் முன்னிலையில் இன்று போட்டுடைத்திருக்கின்றார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த, அனந்தி சசிதரன் ஜெனீவாவிற்கு சென்று அங்கு எதனையும் கதைக்கவில்லை என சில ஊடகங்கள் முன்வைத்த குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்கும் வகையில் இன்றைய அனந்தியின் கருத்துவெளிப்பாடு அமைந்திருக்கிறது,

ஜெனீவாவில் சர்வதேச பிரநிதிகளைச் சந்தித்து காணாமல் போனோர் தொடர்பிலும், தாயகத்தில் எமது மக்கள் எதிர்கொண்டு வருகின்ற நெருக்கடி நிலை மற்றும் இறுதிப்போரின் போது நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் கதைப்பதற்காகச் சென்றிருந்தேன்.

ஆனாலும் சந்திப்புக்களை மேற்கொள்ளச் சென்றபோது, எங்களை அழைத்துச் சென்ற சுமந்திரன், ‘உங்களை விடுதலைப்புலிகளாகவே சர்வதேச பிரதிநிதிகள் பார்க்கிறார்கள். எனவே, நீங்கள் ஒன்றும் கதைக்கவேண்டாம்’ என்று தன்னை கட்டுப்படுத்தியதாக தெரிவித்த அனந்தி, தான் ஜெனீவா செல்லும் வரையில் தனக்கு இவ்வாறான ஒரு நிலை ஏற்படும் என்பதை தான் அறிந்திருக்கவில்லை என்றும் தெரிவித்தார்” எனவே அனந்தி தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் வாய் திறந்துவிடக் கூடாது என்பதில் மிகச் சாமர்த்தியமாக சுமந்திரன் நடந்திருப்பதாகவே அனந்தியின் கருத்து வெளிப்பாடு அமைந்திருக்கிறது.

இதேவேளை பல வாரங்களாக வெளிநாடுகளின் பிரதிநிதிகளை தனியாகச் சந்தித்து கலந்துரையாடிவரும் சுமந்திரன் என்ன கதைக்கிறார்? எதனை வலியுறுத்துகிறார்? என்பதை யாரும் அறிய முடியாத நிலையே காணப்படுகின்றது. புலம்பெயர் தேசங்களில் பல்லாயிரம் மக்கள் போராடிக் குரல் கொடுத்தாலும் தாயகத்தில் தமிழ் மக்களால் பெரிதாக கொள்ளப்படுகின்ற ஒரு கட்சி என்ற அடையாளத்தை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தும் சுமந்திரன் அதன் ஊடாகவே தமிழினத்தின் கருவறுக்கத் துணிந்து செயற்படுகின்றார்.

இதனிடையே அவுஸ்திரேலியாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த சுமந்திரன் அமெரிக்கப் பிரேரணையை முன்மொழியுமாறு அவுஸ்திரேலிய அரசை வலியுறுத்தியதாக செய்திகளும் வெளியிடப்பட்டுள்ளன. எதுவுமே அற்ற சிங்கள அரசுக்கு சாதகமான ஒரு பிரேரணையை முன்மொழிதல் அல்லது ஆதரித்தல் என்பது தமிழ் மக்களுக்கு எந்த விதத்திலும் பயனாகப் போவதில்லை. ஒட்டுமொத்த தமிழினத்தின் எதிர்பார்ப்பையும் தமிழ் மக்களின் இரத்தத்தில் வியர்வையில் கண்ணீரில் ஏறி நின்று அந்த இனத்திற்கு குழி தோண்டும் மிக மோசமான தமிழ் அகராதியில் இடம்பெற்றிருக்காத ஒரு மிகப் பெரிய துரோகத்துக்கு வடிவம் கொடுக்கும் சுமந்திரன் – சம்பந்தனை வரலாறு எந்த வகைக்குள் அடக்கப்போகிறது என்பதை காலம் தான் வரையறுக்கவேண்டும்.

ஆக, கொழும்பில் பிறந்து, வளர்ந்து, சட்டம் பயின்று, ஜி.எல்.பீரிஸின் ஆஸ்தான சீடனாக தன்னை அடையாளப்படுத்தி, ஆங்கிலத்தில் யோசித்து தமிழுக்கு மொழிபெயர்த்து எழுதி வாசித்து, சிங்களப் பெண்களை தனது பிரத்தியேக செயலாளர்களாகவும் பணியாளர்களாகவும் வைத்துக் கொண்டு அரசியல் செய்யும் ஒரு நபருக்கு, இந்தப் போராட்டம் தோன்றியது எதனால்? தமிழீழப் பிரகடனம் செய்தது விடுதலைப்புலிகளா? அல்லது அதற்கு முன்னிருந்த தமிழர் விடுதலைக்கூட்டணியா? என்பது தெரிந்திருக்க வாய்ப்புள்ளதா?

அல்லது எண்ணிப்பார்க்க முடியாத நினைத்துப்பார்க்க முடியாத இதுவரை வெளித்தெரியாத பல்லாயிரம் தியாகங்கள் எல்லாம் எதற்காக நிகழ்ந்தன என்பது புரியுமா? இன்றுவரை தாயகம் திரும்பி தங்கள் சொந்த நிலத்தினை தங்கள் பெற்ற தாயை வாழ்ந்த சுற்றத்தை எவற்றையும் இன்றும் பார்க்க முடியாது புலம்பெயர் நாடுகளில் வாழ்ந்து வருகின்ற தமிழ்த் தேசிய உணர்வாளர்களின் உண்மையான அர்ப்பணிப்புக்கள் புரியுமா?

இன்று கூட்டமைப்பு என்ற ஒரு சக்தி, போராட்டத்தின் வாசனை எதுவுமே தெரியாத சுமந்திரனை தமிழ் மக்களின் பிரதிநிதியாக உலகம் சுற்றவைத்திருக்கிறது என்றாலோ, ஆன்மீகம், கம்பன்கழகம் என்று தனது இறுதிக்காலத்தை கழிக்க முற்பட்டவரை வடக்கு மாகாணத்தின் அதிபதியாக்கி அவர் தான் அரசியல்வாதியல்ல நிர்வாகி என்று சொல்ல வைத்திருக்கின்றது எது என்றாலோ எல்லாவற்றுக்கும் பின்னால் நிற்பது எமது மக்களும் எமது மாவீரர்களும் கொடுத்த உயிர்விலைகள் தான்.

ஆக, அரசாங்கம் நினைத்துப் பார்க்க முடியாத, எத்தனை ஆயிரம் கோடி பபணம் கொடுத்தும் சாதிக்க முடியாத பணிகளை செவ்வனே செய்துவருகின்ற தமிழ் மக்களுக்கான இலங்கை அரசின் தூதர்களாக விளங்குகின்ற சம்பந்தன், சுமந்திரனின் அரசியல் பயணங்கள் முடிவுக்கு வந்தால் மட்டுமே எங்கள் பிரச்சினைகளுக்கும் முடிவு வரலாம்..

– தமிழ்லீடர் ஆசியர்பீடம் –