2007-2009 மே மாதம் வரை இலங்கையில் தமிழீழ மண்ணில் நடந்த மிகப்பெரிய தமிழின அழிப்பு போரின்போது தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் கருணாநிதியால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில் தலைப்பு தான் அது. சொந்த இனத்தை முற்றாக அழித்து விட சிங்கள பேரினவாத அரசு இந்திய அரசின் முழு உதவியுடன் போரை நடத்திக் கொண்டிருந்த நேரத்தில்தான் இந்த கையாலாகாத கோழைத்தனமான துரோக தீர்மானம் தாய் தமிழகத்தில் கொண்டுவரப்பட்டது.

 

டெல்லி ஏகாதிபத்திய அரசில் முக்கிய பங்காளியாகவும் அரசின் முடிவுகளில் செல்வாக்கு செலுத்தக் கூடிய நிலையில் கருணாநிதியின் கட்சி இருந்தபோதுதான் இந்த கபட நாடக தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ஈழத்தில் தமிழினம் பேரழிக்கு உள்ளாகிய இந்த சமயத்தில் கருணாநிதி நடத்திய பாசாங்கு, பாவனை, ஒப்பாரிக்கண்ணீர் டெல்லி அரசிடம் மன்றாடுவதாக கூறிய நடிப்பு இவைகள் ஒருபுறம்.

 

மறுபுறம் ஈழப் போருக்கும் படுகொலைகளுக்கும் ஆளாகிக் கொண்டிருந்த தமிழர்களுக்கு ஆதரவான மக்கள் திரள் போராட்டங்கள் வீரியம் பெற்று விடாமல் கவனமாக பார்த்துக் கொள்வதும் போராடும் மாணவர்களையும், இளைஞர்களையும், வழக்கறிஞர்களையும் தீவிரமாக அடித்து ஒடுக்குவது போன்ற கயமைத்தனமான செயலை கருணாநிதியின் அரசு செய்து கொண்டிருந்தது. அது மட்டுமல்ல ஈரோடு, சேலம், சென்னை, மதுரை போன்ற இடங்களில் நடைபெற்ற போராட்டத்தை அழிக்க உளவுத்துறை உயர்மட்ட அதிகாரி ஜாபார் சேட்டுடன் இணைந்து தொடர் வண்டிப்பாதைகளிலே பாறாங்கற்களை அவர்களே வைத்து ‘ரயிலை கவிழ்க்க சதி’ என்று கூறி முன்னணியில் நின்று போராடுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்வது இப்படிப்பட்ட நூற்றுக்கணக்கான துரோகங்களை செய்து தமிழின அழிப்பு முழு உதவியாக செயல்பட்டவரே கருணாநிதியாவார்.

 

போரின்போது சிங்களர்களின் குண்டுவீச்சில் தங்களது பெற்றோர்களையும் உறவினர்களையும் இழந்து முற்றாக அனாதையாகிப் போன தமிழ் குழந்தைகள் தங்க வைக்கப்பட்டிருந்த இடம் ‘செஞ்சோலை’ ஆகும். 2 வயது முதல் 10 வயது வரை உள்ள அந்த இடத்தை திட்டமிட்டு குறிவைத்து சிங்களப் படை விமானம் குண்டுகளை வீசி 65 குழந்தைகள் உடல் சிதறி செத்துப்போயின. உலகமே இக்கொடுமைக்கு கண்டனம் தெரிவித்த சமயம் இதே கருணாநிதி இரங்கல்பா கவிதை பாடி தானும் வருந்துவதாக ஒப்பாரிவைத்து பாசாங்கு காட்டினார். இந்திய அரசின் உளவாளிகளான எம்.கே. நாராயணன், சிவசங்கரமேனன் இவர்கள் சென்னை வந்து கருணாநிதியிடம் ஆலோசனை செய்த பின் கொழும்புக்குச் சென்று ராஜபக்சேவையும், ராணுவ அதிகாரிகளையும் சந்தித்து போரைத் தீவிரப்படுத்திய நிகழ்ச்சிகளை மறந்துவிட முடியுமா?

 

போரின் போது தமிழ்நாட்டில் சோனியாவின் காங்கிரஸ் அரசு இருந்திருந்தால் கூட கருணாநிதியின் இந்த நயவஞ்சக நாடகத்தை நிறைவேற்றி இருக்க வாய்ப்பில்லை. கச்சிதமாக தனது துரோகத்தை திறமையாக நடத்திக் காட்டியவர் கருணாநிதி.

 

40 எம்.பி.க்கள் நாடகமும், மூன்று மணி நேர உண்ணாவிரத நாடகமும் ‘கோத்தபய ராஜபக்ஷே வால் பாராட்டப்பட்டதை மறக்க முடியுமா? அப்பாவி பொதுமக்கள் மீது கனரக ஆயுதங்களைப் பிரயோகிக்க வேண்டாம், தற்காலிக போர் நிறுத்தம் செய்யும்படி தமிழீழத் தலைவர்கள் கருணாநிதியிடம் வேண்டியபோது அவர்களிடம் கனிமொழி கூறினார். ‘நீங்கள் எதுவாக இருந்தாலும் டெல்லியிடம் பேசும்படி சொல்லிவிட்டு அப்பா படுக்கச் சென்று விட்டார்’ என்று கூறும்படி செய்தார் கருணாநிதி.

 

சாவின் விளிம்பில் கருணாநிதி இருக்கும்போது அவரை மனிதாபிமான அடிப்படையில் விமர்சிக்க வேண்டாம் என்று கூறும் நாகரீக அதிமேதாவிகளே எங்கள் தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்ட போது கல் மனம் கொண்டு உதவி செய்ய மறுத்து இனத்தை அழிக்க துணை போன ஒருவருக்கு மனிதாபிமானம் காட்ட முடியுமா?

 

ஒரு மனிதன் தான் வாழும் காலத்தில் தான் வாழ்ந்த சமுதாயத்திற்கும் அம்மக்களுக்கும் செய்த சேவை என்ன என்பதை நேர்மையாக வரலாற்றில் பதிவு செய்ய வேண்டும், அவன் மரணத்தின் விளிம்பில் நிற்கிறான் என்பதற்காக வரலாற்றை பிழையாக எழுதி விடக்கூடாது..

 

முகநூல் பதிவர் –
வைகை கருப்பையா