இலங்கைக் குடியரசுத் தலைவர் தேர்தலில் இனப்படுகொலைக் குற்றவாளி இராசபட்சே படுதோல்வி அடைந்தது வரவேற்கத்தக்கது. ஆனால், இத்தேர்தல் முடிவு தமிழீழத்தில் இராணுவ முற்றுகைக்குள் பணையக் கைதிகள் போல் வைக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்களுக்கு குடியியல் உரிமைகள் – அரசியல் உரிமைகள் ஆகியவற்றை பெற்றுத்தருமா என்பது மிகப் பெரியக் கேள்விக்குறியாக உள்ளது.

ஏனெனில், வெற்றுபெற்றுக் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மைத்ரிபால சிறிசேனா தமது தேர்தல் அறிக்கையிலும் தேர்தல் பரப்புரையிலும் வடக்கு – கிழக்கு மாநிலங்களிலிருந்து இராணுவத்தை விலக்கிக் கொள்ள முடியாது என்றும் தமிழர்கள் அழிக்கப்பட்ட “போர்க் குற்றங்கள்” குறித்து ஐ.நா. மனித உரிமை மன்றம் அமைத்துள்ள பன்னாட்டுப் புலனாய்வுக் குழுவை இலங்கைக்குள் அனுமதிக்க முடியாது என்றும் இராசபட்சேயோ அல்லது அவரது குடும்பத்தையோ எந்த விசாரணைக்கும் உட்படுத்த மாட்டேன் என்றும் இராசபக்சேவுக்கு பாதுகாப்பு அளிப்பேன் என்றும் கூறியுள்ளார்.

maniyarasan
இராசபட்சேக்கும் சிறிசேனாவுக்கும் இடையிலான வாக்கு வேறுபாடு 4,49,072. இந்த வாக்குகள் முழுக்க முழுக்க தமிழர்கள் மற்றும் தமிழ் பேசும் முஸ்லிம்கள் வாக்குகள் ஆகும். இதன் பொருள் சிங்களர்கள் பெரும்பான்மையாக வாக்களித்து சிறிசேனாவைத் தேர்ந்தெடுக்கவில்லை என்பதுதான்.

சிங்களர்களின் வாக்குகளை இழந்துவிடக் கூடாது என்ற முறையில்தான், தமிழர்களுக்கு செய்ய வேண்டியக் கடமைகள் பற்றி எந்த அறிவிப்பும் தேர்தல் காலத்தில் சிறிசேனா செய்யவில்லை. அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்னை ஆதரிக்கிறது, ஆனால் நான் அக்கூட்டமைப்புக்கு எந்த வாக்குறுதியும் அளிக்கவில்லை என அவர் அறிவித்தார். யாழ்ப்பாணம் சென்று வாக்கு கேட்ட இராசபட்சேயும், போலியாகவேனும் தன்னைத் தமிழர்களின் நண்பன் என்று கூறிக் கொண்டால் சிங்களர்கள் வாக்களிக்க மாட்டார்கள் எனக் கருதி, ஏற்கெனவே உங்களுக்குத் தெரிந்த பிசாசு என்று தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

தமிழினத்திற்கு எதிரான சிங்கள இனவெறி என்பது, ஒரு காலத்தில் சிங்களத் தலைவர்களிடமிருந்து தோன்றியிருந்தாலும், இன்றைக்கு அது மிகப்பெரும்பான்மையான சிங்கள மக்களின் குருதியோடு கலந்த சிங்கள பௌத்த இனவெறிக் கொள்கையாகிவிட்டது. அங்கு, சிங்கள இனவெறிக்கு மாற்றாக, தமிழினத்திற்கும் சில குடியியல் உரிமைகள் வழங்குவது என்று எந்தத் தலைவராகப் பேசினால், அவர் சிங்கள அரசியலில் தனிமைப்படுத்தப்படுவார். எனவே, இன்று, சிங்கள இனவெறி என்பது மக்கள்மயமாகியுள்ள பாசிச இனவெறியாகும்.

இச்சமூகச் சூழ்நிலையில், இலங்கையில் தமிழர்களுக்கான அரசியல் – குடியியல் உரிமைகளை வழங்குவதற்கு எந்தத் தலைவரும் முன்வர மாட்டார். சிங்களிர்களிடம் பெரும்பான்மை வாக்குப் பெறமுடியாத மைத்ரி பால சிறிசேனா தேர்தல் வெற்றியும் இதைத்தான் காட்டுகிறது. சிங்கள மக்களிடம் சிறிசேனா தோல்வி அடைந்திருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

திரு. இரா. சம்பந்தன் தலைமையிலுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது தமிழ்நாட்டின் தி.மு.க. போன்றது. இந்தியாவிலிருந்து விடுதலை பெறுவதற்காக தனிநாடு கோரி கட்சி தொடங்கி, பின்னர் அதைக் கைவிட்டு இந்தியத் தேசிய வெறிக் கட்சிகளோடு மாறி மாறி கூட்டணி சேர்ந்து தமிழினத்தை தில்லி ஏகாதிபத்தியத்திற்கு அடமானம் வைத்த தி.மு.க.வின் வரலாற்றை நன்கு புரிந்து கொண்ட தமிழ் மக்கள், சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் போக்கையும் புரிந்து கொள்ள முடியும். அடுத்து வரும் தேர்தல்களில் ஏதாவதொரு சிங்களக் கட்சியுடன் சம்பந்தன் தேர்தல் கூட்டணி சேர்ந்தாலும் வியப்பதற்கில்லை.

இந்நிலையில், வடக்கு – கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களுக்கு, தமிழ் பேசும் முஸ்லிம் மக்களுக்கு குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் இப்பொழுதுள்ள சிங்களக் கட்சிகளாலோ குறிப்பாக சிறிசேனா ஆட்சியினாலோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினாலோ கிடைப்பதற்கு வாய்ப்பில்லை.

ஆனால், குடும்ப ஆட்சி நடத்திய கொடுங்கோலன் இராசபட்சே தோற்கடிக்கப்பட்டு புதியக் கருத்துகள் விவாதத்திற்கு வந்திருக்கும் இந்தக் காலத்தில் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்கள், தங்களுக்கான குடியியல் மற்றும் அரசியல் உரிமைகளைப் பெற அறவழியில் போராடும் மக்கள் திரள் இயக்கம் ஒன்றை தொடங்க வேண்டிய தருணம் இது.

இராணுவத்தை வெளியேற்றக் கோருதல், இராணுவம் பறித்துக் கொண்ட நிலங்களை திரும்பத் தரக் கோருதல், தமிழ் மக்கள் கூட்டம் கூடவும் – அறவழியில் போராட்டம் நடத்தவும் உரிமை கோருதல், ஐ.நா. புலனாய்வு மன்றத்தை இலங்கைக்குள் அனுமதிக்கக் கோருதல், தங்களைத் தாங்களே ஆண்டு கொள்ளும் அதிகாரத்தைக் கோருதல் போன்றவற்றை உடனடிக் கோரிக்கைகளை முன்வைத்து, பதவி – பணம் – விளம்பரம் மூன்றுக்கும் ஆசைப்படாத தேர்தலில் போட்டியிடாத புதிய தலைமையின் கீழ் அறவழிப் போராட்டத்திற்கான மக்கள் திரள் அமைப்பைத் தமிழர்கள் உருவாக்க வேண்டும்.
சிறிதாகத் தொடங்கினாலும் தனது செயல்பாட்டின் மூலம் அது வளரும். பன்னாட்டுச் சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும்.

அதற்காக செய்ய வேண்டிய ஈகங்களையும் செய்தாக வேண்டும். இவ்வாறான ஓர் இயக்கம் தமிழீழத்தில் தோன்றி செயல்படாதவரை, தமிழ்நாட்டிலும் புலம்பெயர்ந்த நாடுகளிலும் தமிழீழ மக்களுக்காக நடத்தப்படும் போராட்டங்கள் நாம் எதிர்பார்க்கும் முழுப்பலனை அளிக்காது என்பது தான், கடந்த ஐந்தாண்டுகால பட்டறிவு!

எனவே, இவர் செய்வார் – அவர் செய்வார் என எதிர்பார்த்துக் கொண்டிருக்காமல், ஈழத்தமிழர்களில் அறிவாற்றலும் செயல்துடிப்பும் உள்ள இளைஞர்கள், ஆண்களும் பெண்களும் முன்வந்து, தங்களுக்கான அரசியல் உரிமைக்கான அறவழி இயக்கத்தைத் தொடங்குவதே சாலச் சிறந்தது என்று, தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் உரிமையுடனும் உண்மையான அக்கறையுடனும் கேட்டுக் கொள்கிறேன்.

இன்னணம்,
பெ.மணியரசன்
தலைவர், தமிழ்த் தேசியப் பேரியக்கம்