அரசியல் தீர்வு விடயத்தில் காலதாமதம் செய்யாமல் முன்னெடுக்கப்பட வேண்டுமென்பது கூட்டமைப்பின் முக்கியமானதும் உறுதியானதுமான நிலைப்பாடாகும் – சம்பந்தன்

0
689

mavai-1தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது வைத்திருக்கின்ற நம்பிக்கையையும் உறுதியையும் தமிழ்மக்கள் மீண்டும் நிரூபித்துள்ளனர். எமது செயற்பாட்டைப் பொறுத்தவரை அரசியல் தீர்வு விடயத்தில் காலதாமதம் செய்யாமல் முன்னெடுக்கப்பட வேண்டுமென்பது கூட்டமைப்பின் முக்கியமானதும் உறுதியானதுமான நிலைப்பாடாகும் என த.தே.கூவின் தலைவர் திரு சம்பந்தன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

அவரின் அறிக்கை வருமாறு:

 

வடக்கு கிழக்கு மக்கள் எம்மீது கொண்ட நம்பிக்கையை மீண்டும் உலகம் அறிய நிரூபித்துள்ளார்கள். அவர்களுக்கு நன்றி தெரிவிக்க நாம் கடமைப்பட்டவர்கள். அவர்களின் நம்பிக்கையை எப்பொழுதும் நாம் காப்பாற்றியே தீருவோம்.

 

வடக்கு கிழக்கில் போட்டியிட்ட மக்கள் செல்வாக்கற்ற சில கட்சிகளின் விஷமத்தனமான பிரசாரத்தினாலும் நடவடிக்கைளினாலும் நாம் அடையவிருந்த இன்னும் பெரிய பாரிய வெற்றி அக்கட்சிகளால் தடைப்பட்டுவிட்டது. நாம் அக்கட்சிகளை தமிழ்மக்களின் நன்மைகருதி தேர்தலில் இருந்து விலகுமாறு கோரினோம். அவர்கள் அதை செய்யவில்லை. இன்று அவர்கள் எமது மக்களால் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

 

நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிறந்த வெற்றியைப் பெற்றுள்ளது. பெறப்பட்ட ஆசனங்களின் எண்ணிக்கை எதிர்பார்த்ததிலும் பார்க்க சற்று குறைவாக இருந்த போதிலும் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது வைத்திருக்கின்ற நம்பிக்கையையும் உறுதியையும் மீண்டும் நிரூபித்துள்ளனர்.

 

தமிழ்க் கூட்டமைப்பை வடகிழக்கு மக்கள் தங்களுடைய நம்பிக்கைக்குரிய பிரதிநிதியாக இத்தேர்தலில் தெரிவுசெய்திருக்கின்றார்கள். இதில் எவ்வித சந்தேகத்துக்கும் இடமில்லை. துரதிஷ்டவசமாக தேர்தலுக்கு முன்பாக சில விஷமத்தனமான பிரசாரங்கள் எம்மீது மேற்கொள்ளப்பட்டன. துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. இது எமது வெற்றி வாய்ப்பில் தாக்கத்தை ஏற்படுத்தியது.

 

எமது செயற்பாட்டைப் பொறுத்தவரை அரசியல் தீர்வு விடயத்தில் காலதாமதம் செய்யாமல் முன்னெடுக்கப்பட வேண்டுமென்பது கூட்டமைப்பின் முக்கியமானதும் உறுதியானதுமான நிலைப்பாடாகும்.

 

இது விடயம் குறித்து எடுக்கவேண்டிய முயற்சிகளை இனி வேகமாக மேற்கொள்வோம்.

 

எம்மை பொறுத்தவரையில் ஜனாதிபதித் தேர்தலில் மக்களால் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு ஆதரவாக புதிதாக அமையவிருக்கும் அரசாங்கம் இருக்கவேண்டும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு மக்களால் வழங்கப்பட்ட ஆணையை தொடரும் வகையில் அமையவிருக்கும் அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

 

அவ்விதமான நிலைமைக்கு நாங்கள் ஆதரவாக இருப்போமென்று கூறமுடியும். அமையவிருக்கும் புதிய அரசாங்கமானது தமிழ்மக்களின் நீண்டகாலப் பிரச்சினைக்குத் தீர்க்கமான ஒரு அரசியல்தீர்வை கொண்டுவருவதற்கு கடுமையான காத்திரமான முயற்சிகளை காலதாமதம் இன்றி மேற்கொள்ளவேண்டுமென்பது எமது எதிர்பார்ப்பாகும்.

 

யாழ். மாவட்டத்தில் தமிழ்க் கூட்டமைப்பு 5 ஆசனங்களைப் பெற்று பாரிய சாதனை படைத்திருக்கின்ற போதும் 6 ஆசனங்களை பெறுவதற்குரிய வாய்ப்பை மிக மிக சொற்பளவு வாக்கான 6வாக்குகளால் இழந்துள்ளது என்பது கவலைதருகின்ற விடயமாகும்.

 

நாம் இவ்விடயம் சம்பந்தமாக தேர்தலுக்கு முன்பே கூறியுள்ளோம். சிறு கட்சிகள் அதாவது ஒரு ஆசனத்தைக்கூட பெறதகுதியற்ற கட்சிகள் மக்களுடைய செல்வாக்கைப்பெறாத கட்சிகள் இவ்வாறானதொரு நிலைக்கு மக்களைத் தள்ளலாமென முன்பே கூறியிருந்தோம்.

 

இதன் காரணமாக மக்களுடைய உரிமைக்கு பாதகம் ஏற்படுமெனக் கூறினோம். இக்கட்சிகளை தேர்தலில் இருந்து விலகும்படி கோரிக்கை விடுத்தோம். அவர்கள் விலகவில்லை. அடம்பிடித்து போட்டியிட்டார்கள். தற்பொழுது மக்களால் நிராகரிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் பெற்ற சிறியளவு வாக்குகள் காரணமாக கூட்டமைப்பின் பெரிய வெற்றி பாதிக்கப்பட்டிருக்கிறது.

 

யாழ்.மாவட்டத்தில் 6ஆசனங்களை பெறுவதற்கு 6வாக்குகள் தான் போதாமல் இருந்துள்ளன. இந்நிலைக்கு பொறுப்பானவர்கள் அந்தக் கட்சிகள் மக்களுக்கு பதில் கூறவேண்டும். தமது பொறுப்பை அவர்கள் முழுமையாக ஏற்கவேண்டும்.

 

திரு இராஜவரோதயம் சம்பந்தன்

 

தலைவர் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

 

 

இதனிடையே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கையை எம் மக்கள் ஏற்று வாக்களித்துள்ளனர் என இலங்கை தமிழ் அரசு கட்சி தலைவர் திரு சோமசுந்தரம் சேனாதிராசா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

அவரின் அறிக்கை வருமாறு:

 

பொதுத்தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வடக்குகிழக்கு மாநிலமெங்கும் அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றிபெறச் செய்த எம் தமிழ்மக்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பின் எம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

 

இத்தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தோற்கடிக்க வேண்டும். அதன் தலைமையை மாற்றவேண்டும் என்று அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் உள்ளிட்ட சில உதிரிக் கட்சிகள் தமது இலக்கு அதுதான் எனப் பிரசாரஞ்செய்தனர்.

 

தீவிரவாதச் சிங்களக் கட்சிகளையோ அல்லது கொழும்பு அரசியற் தலைமைகளையோ ஒருவார்த்தையால் கூட எதிர்த்திருக்கமாட்டார்கள். பத்திரிகைகளில் செய்திகள், கட்டுரைகள், இணையத்தளங்களில், முகநூலில் எதிராகத் தீவிரபிரசாரஞ் செய்தனர். உண்மைக்குமாறான பலசெய்திகள் கடந்தஓராண்டாகவே எம்மில் சிலரைக் குறிவைத்து கட்டியெழுப்பினர். உண்மைகளைப் பொய் என்றனர்; பொய்யை உண்மைஎன்றனர்.

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் அவற்றிற்கு உண்மை விளக்கமளித்துப் பதில் அளித்தனர். மக்கள் அவ்வாறு பொய்யுரைத்தவர்களை, அர்ப்பணமற்றவர்களைத் தெளிவாக அறிந்து முற்றுமுழுதாக இத்தேர்தலில் தோற்கடித்து அரசியல் அரங்கிலிருந்து அகற்றியுள்ளனர்.

 

மொத்தவாக்குகளில் ஐந்துவீதத்தை எட்டியவர்கள் மற்றும் உதிரிகள் மக்கள் வாக்குகளைப் பிளவுபடுத்தாமலிருந்திருந்தால் ஏழு இடங்களையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே வென்றிருக்கும்.

 

பொறுப்புள்ளவர்களாக மக்கள் நம்பியவர்களின் கூட்டமைப்புக்கெதிரானதும், குழப்பமானதும் தொடர்ச்சியானதுமான அறிக்கைகள் மக்களை ஓரளவுகுழப்பியிருந்தன. வீட்டுச்சின்னத்திற்குப் போட்டுபழுதாகிப் போன இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வீணாகிப்போயின.

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது நம்பிக்கைகொண்ட மக்கள் தமிழர் வாழும் மாநிலத்தில் மிகப்பெரும் வெற்றியை வழங்கியுள்ளனர். நாமும் அம்மக்கள் மீது நம்பிக்கையும் விசுவாசமும் கொண்டவர்களாய் முழுமையாக அர்ப்பணிக்கின்றோம்.

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கையை எம் மக்கள் ஏற்று வாக்களித்துள்ளனர். அவ்வறிக்கையில் கூறப்பட்டவாறு தமிழ்த் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணல் மற்றும் நிலமீட்பு, மீள்குடியேற்றம், சிறையிலிருப்போர் விடுதலை, வாழ்விழந்தோர், வாழ்வாதரமற்றோர் மற்றும் அனாதைச்சிறார்களுக்கு நலத்திட்டங்கள் உருவாக்கி நடைமுறைப்படுத்தல், புதிய நிபுணத்துவத்துடன் தொழில்துறைகளைக் கட்டியெழுப்பி வேலையில்லாப் பிரச்சினையைத் தீர்க்கவும் நடவடிக்கைகள் எடுப்போம்.

 

எனவே இத் தேர்தல் வெற்றிக்கு தம்மை அர்ப்பணித்து தீவிரமாக உழைத்தமக்கள் கல்வியாளர்தொண்டர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் புலம்பெயர் தமிழர்களுக்கும் எம் இதயம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம். தொடர்ந்தும் நாம் அணிதிரண்டு எம் தமிழர்தேசத்தினதும், தமிழ்த் தேசிய இனத்தினதும் விடுதலைக்கும், விடிவுக்குமாக அர்ப்பணித்து உழைப்போம்.

 

திரு சோமசுந்தரம் சேனாதிராசா
தலைவர் – இலங்கை தமிழ் அரசு கட்சி