எம்மையறியாமலேயே ‘ஐக்கிய’ இலங்கைக்குள் வாழ எம்மை ஒப்புக்கொடுத்துக் கொண்டிருக்கிறோம் என்பது மட்டுமல்ல இன அழிப்பு அரசு தனது இறுதி வெற்றியை நோக்கி அணியமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது என்பதன் அதிர்ச்சியூட்டும் ஒரு சில சம்பவங்கள் அவ்வப்போது நடந்து ஒரு வித கிலியை
ஏற்படுத்துகின்றன.

 

பல மாதங்களுக்கு முன்பு நீதிபதி இளஞ்செழியனின் பாதுகாவலன் என்ற போர்வையில் இன அழிப்பு அரசின் நீதியைக் காப்பாற்ற நின்ற சிங்கள காவலாளிக்கு அந்த நீதிக்குப் பலியாகிக் கொண்டே நாம் கதறியழுதது ஒரு உதாரணம்.

 

தற்போது பாலித தெவரப் பெரும என்ற சிங்கள அரசியல்வாதிக்கு மாமனிதர் பட்டம் கொடுக்காததுதான் மிச்சம்.

 

அரசியல் மொண்ணைத்தனமான ஒரு இனம் அழிந்து போவதற்குரிய முழுத் தகுதியும் கொண்டது என்கிறது நந்திக்கடல்.

 

பாலித தெவரப் பெரும வின் கொலை,கொள்ளை, கட்டப் பஞ்சாயத்து, ரவுடிசத்திற்குள் சிக்குண்டு சின்னாபின்னமான தமிழர்களின் பட்டியல் பெரிது.

 

இதற்கெல்லாம் பெரிய ஆய்வு தேவையில்லை.. கூகுளில் தேடினாலே இதெல்லாம் கிடைக்கும்.

 

இது கூடப் பரவாயில்லை. கட்டமைக்கப்பட்ட இன அழிப்பில் தீவிரமாக இயங்கும் வன ஜீவராசிகள் திணைக்கள பிரதி அமைச்சராக வேறு பதவி வகித்தவர்.

 

இதெல்லாம் தெரியாமல் நாலு கிணற்று தூர் வாரியவுடன் கவிழ்ந்து விட்டோம்.

 

நமது அரசியல்வாதிகள் தப்பானவர்கள்தான், அதற்காக இன அழிப்பு நோக்கங்களுடன் உள்ளே வரும் சிங்கள சதிக்கு இடம் கொடுக்கக் கூடாது.

 

ஒரு போராடும் இனம் படைத்துறை ரீதியாக வீழ்த்தப்படுவதோ, அரசியல் ரீதியாக தோற்கடிக்கப்படுவதோ அது அந்த இனத்தின் தோல்வியல்ல என்கிறது ‘நந்திக்கடல்’.

 

ஆனால் தமது அழிவுக்குக் காரணமான இன அழிப்பு அரசின் மூலக் கருத்தியலுக்குள் உள்மடிந்து எப்போது.
ஒத்திசையத் தொடங்குகிறதோ அப்போதுதான் அந்த இனம் தோல்வியை நோக்கி நகரத் தொடங்குகிறது என்கிறது ‘ நந்திக்கடல்’.

 

‘நந்திக்கடல்’ போராடும் இனங்களிடம் மிகுந்த எச்சரிக்கையுடனும், பதட்டத்துடனும் கவனத்தையும், விழிப்புணர்வையும் கோரி நிற்கின்ற இடம் இது.

நன்றி: பரணி கிருஸ்ணரஜனி