rathikaசிறிலங்காவில் தாம் அரசியல் ரீதியான மிரட்டல்களுக்கு உள்ளாகியுள்ளதாக, கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று கனேடிய ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில், தான் கைது செய்யப்பட்டு, நாடு கடத்தப்படுவேன் என்று எச்சரிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

தாம் பிறந்த நாட்டை அறிந்து கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் ராதிகா சிற்சபேசன் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, ராதிகா சிற்சபேசனுடன் தொலைபேசியில் உரையாடிய அவரது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் போல் டேவர், ராதிகாவை சிறிலங்கா அதிகாரிகள் பின்தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளார். ராதிகா சிற்சபேசன் யாழ்ப்பாணத்தில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகள், கனடாவின் மூத்த அரசியல் தலைவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

இலங்கைக்கு சுற்றுலா விசாவில் வந்துள்ள தமிழரான கனடா நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் வடக்கே பலதரப்பினரை சந்தித்து பேசியுள்ளார். போரினால் பாதிக்கப்பட்டவர்கள், காணாமல் போயுள்ளோரின் குடும்பங்கள் உட்பட பலரை சந்தித்துள்ள அவர், அம்மக்களின் பிரச்சினைகள் கனடா அரசு மற்றும் இதர சர்வதேச சமூகத்தின் பார்வைக்கு கொண்டு செல்வதாக உறுதியளித்தார் என்று அவரை சந்தித்தவர்கள் கூறுகிறார்கள்.

மன்னார்ப் பகுதியில் காணாமல் போனவர்களின் பெற்றோர்களை ராதிகா சந்தித்து பேசவும் தாங்கள் ஏற்பாடுகளை செய்து கொடுத்ததாக பிபிசி தமிழோசையிடம் கூறினார் மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவர் பங்குத் தந்தை இமானுவேல் ஜெபமாலை. இலங்கையில் யுத்தம் முடிந்து பல ஆண்டுகளாகியும் இன்னும் எந்தத் தீர்வும் கிட்டவில்லை, உள்நாட்டில் தீர்வு கிடைக்கும் என்று எதிர்பாக்க முடியாது என அவரிடம் தாங்கள் தெரிவித்ததாகவும் ஜெபமாலை கூறினார். “அழுத்தம் தொடரும்” ராதிகா சிற்சபேசன் போன்றோர் இலங்கையிலுள்ள பிரச்சினைகளை சர்வதேச சமூகத்துக்கு கொண்டு சென்று அதன் மூலம் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என தாங்கள் கோரியதாகவும் அவர் மேலும் கூறினார்.

கனடா கடந்த ஆண்டு இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் கூட்டம் தொடர்பில் எடுத்த நிலைப்பாட்டுக்கு தங்களைப் போன்றோர் கொடுத்த அழுத்தமும் ஒரு காரணம் என ராதிகா கூறியதாகவும் பங்குத் தந்தை ஜெபமாலை தெரிவித்தார். தான் கனடாவுக்குத் திரும்பிச் சென்ற பிறகு அங்குள்ள அரசுக்கு மீண்டும் இலங்கை விஷயம் குறித்து அழுத்தம் கொடுப்பதாக உறுதியளித்துள்ளார் என்றும் அவர் கூறினார்..
02 01 2014