World2முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பிற்குப் பின்னரான சூழமைவில் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்ட அசைவியக்கத்தைத் தக்க வைப்பதில் காத்திரமான பாத்திரத்தை புலம்பெயர் தமிழ்ச் சமூகம் வகித்து வருகிறது.

 

தமிழீழ மண்ணில் ஆயுதப் போராட்டம் இடைநிறுத்தம் பெற்றுள்ள நிலையிலும், தமிழீழத் தனியரசுக்கான தமது வேணவாவை வெளிப்படுத்த முடியாது சட்டகச் சிறைக்குள் தமிழீழ தாயகச் சமூகம் குரல்வளை நெரியுண்டு கிடக்கும் பின்புலத்திலும், தமிழீழ தேசத்தின் தனியரசு வேட்கையை உலகெங்கும் ஓங்கியொலிக்கக் கூடியவர்களாகப் புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களே உள்ளனர். அதிலும் தாராண்மைச் சனநாயக அரசியலமைப்பைக் கொண்ட மேலைத்தேய நாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழீழ உறவுகளுக்கு இதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

 

இது இன்று நேற்று கிடைத்த வாய்ப்பு அல்ல. ஆயுத எதிர்ப்பியக்கமாகத் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டம் முகிழ்த்த 1970களுக்கு முன்னர் இருந்தே இந்த வாய்ப்பு இருந்து வந்துள்ளது.

 

ஆனால் அன்றைய காலகட்டத்தில் புலம்பெயர் தமிழ்ச் சமூகம் என்பது ஒரு சிறியதொரு மக்கள் கூட்டமாகவே இருந்தது. இவர்களில் ஒரு பிரிவினர் தமது கல்வித் தகமையின் அடிப்படையில் வேலை வாய்ப்புக்கள் தேடி வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்தவர்கள். இன்னுமொரு பிரிவினர் தாயக மண்ணில் தாம் வாழ்ந்த வசதியான வாழ்வை வெளிநாடுகளில் மேலும் செழுமைப்படுத்திக் கொள்ளும் நோக்குடன் புலம்பெயர்ந்தவர்கள். மூன்றாவது பிரிவினரோ, சிங்களம் கொண்டுவந்த தரப்படுத்தல் சட்டத்தால் தமது உயர்கல்வி வாய்ப்புக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்களை வெளிநாடுகளில் சீர்செய்து கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் தாயகத்தை விட்டு வெளியேறியவர்கள். இவ்வாறு வெவ்வேறுவேறு காரணங்களுக்காகத் மேற்குலக நாடுகளில் இவர்கள் குடியேறினாலும், தம்மையொரு அலைந்து உழலும் சமூகமாக இவர்களில் பலர் உணர்ந்து கொண்டது கிடையாது.

 

மாறாக நுனிநாக்கில் தமிழ் பேசி, முள்ளுக்கரண்டியால் சோற்றைக் குத்தியுண்டு, தம்மையும் மேலைத்தேயத்தவர்களாகக் காட்டிக் கொள்வதற்கே இவர்களில் பலர் முற்பட்டார்கள். மேலைத்தேய நாடுகளில் அன்று நிறவெறி தலைவிரித்தாடிய பொழுதும், அதனையிட்டு இவர்களில் பலர் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. ஒட்டுமொத்தத்தில் தமிழர்கள் என்ற பிரக்ஞையற்றவர்களாகவே புலம்பெயர்ந்தோரில் பலர் அன்று வாழ்ந்தார்கள்.

 

இதற்காக அன்றைய புலம்பெயர் தமிழ்ச் சமூகம் முழுவதும் இன உணர்வும், தாயகப் பற்றும் அற்ற மக்கள் கூட்டமாகத் திகழ்ந்தது என்று நாம் கூற முடியாது. அன்றைய புலம்பெயர் சமூகத்தில் இருந்துதான் தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம், மாவீரன் பகீன், மூத்த தளபதி சங்கர் போன்ற சுதந்திரப் போராளிகளும் வெளிப்பட்டார்கள். ஆனாலும் தமிழினப் பிரக்ஞை நலிவுற்றிருந்த அன்றைய புலம்பெயர் சமூகம் ஒருவகையில் வலிமையற்ற மக்கள் கூட்டமாகவே விளங்கியது.

 

இன்று நிலைமை அவ்வாறு இல்லை. இன்று தமிழீழவர்கள் வேரூன்றி வாழாத மேலைத்தேய நாடென்று எதுவுமே இல்லை. எங்கு சென்றாலும் தமிழ் முகங்களைக் காணலாம். எங்கு சென்றாலும் தமிழ்க் குரல்களைக் கேட்கலாம். எங்கு சென்றாலும் தமிழ் உணவைக் கொள்வனவு செய்யலாம். அந்த அளவிற்கு எங்கும் தமிழ் பரப்பி நிற்கின்றார்கள் தமிழீழவர்கள். தமிழர்கள் என்ற பிரக்ஞையோடு வாழ்கின்றார்கள். தாம் வாழும் நாடுகளின் குடியுரிமையை பெற்றிருந்தாலும் தமது வேர் தமிழீழ தாயக பூமியிலேயே ஆழப்பதிந்து கிடக்கின்றது என்ற உணர்வு இவர்களை ஆட்கொண்டுள்ளது.

 

தாயக பூமியை விட்டுப் புலம்பெயர்ந்த தமிழீழவர்கள் மட்டும் தமிழர்கள் என்ற பிரக்ஞையோடு வாழவில்லை. இவர்களின் வழித்தோன்றல்களான புலம்பெயர் தேசங்களில் பிறந்த இளைய தலைமுறையினரில் பலரையும் இப்பிரக்ஞை பற்றிக் கொண்டுள்ளது.

 

‘சிறீலங்கன்’ என்ற அருவருப்பான அடையாளத்தை அகற்றுவதற்குப் புலம்பெயர்ந்த தமிழீழவர்களில் பலர் திண்டாடுகின்றார்கள் என்றால், இந்தப் பிரச்சினை இவர்களின் வழித்தோன்றல்களுக்குக் கிடையாது. ஏனென்றால் இவர்களின் கடவுச்சீட்டில் பிறப்பிடம் என்ற பகுதியில் ‘சிறீலங்கா’ என்பதற்குப் பதிலாக அவர்கள் பிறந்த மேலைத்தேய நகரங்களே உள்ளன.

 

அத்தோடு சிங்கள-பௌத்த மேலாதிக்கத்தின் சின்னமாகத் திகழும் வாளேந்திய சிங்கக் கொடியைத் தமது தேசியக் கொடியாக இந்த இளைய தலைமுறையினர் கருதுவது கிடையாது. இவர்களில் ஒரு சாரார் தாம் வாழும் நாட்டின் கொடியைத் தமது தேசியக் கொடியாகக் கருதுகின்றார்கள். மற்றைய சாரார் தாம் வாழும் நாட்டின் கொடியை மதிக்கும் அதேவேளை தமிழீழ தேசியக் கொடியாகிய பாயும் புலிக்கொடியையே தமது தேசியக் கொடியாக வரித்துள்ளார்கள்.

 

இவையெல்லாம் ஏதேச்சையாக நிகழ்ந்தவையல்ல. இன்று வலிமை வாய்ந்ததொரு சமூகமாகப் புலம்பெயர் தமிழர்கள் உருவெடுத்திருப்பதன் பின்னணியில் பிரபாகரன் என்ற பெரும் தீர்க்கதரிசனம் இருக்கின்றது. 1970களில் விரல்விட்டு எண்ணக்கூடிய தமிழ்ப் பிரக்ஞையாளர்களைக் கொண்டதாகத் திகழ்ந்த புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தை வலிமை வாய்ந்த தமிழ்ப் பிரக்ஞையுடைய மக்கள் கூட்டமாக மாற்றியமைத்த பெருமை தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களையே சாரும்.

 

தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் தாங்கு சக்தியாகத் தமிழகம் தொடர்ந்தும் இருப்பதற்கான வாய்ப்புக்கள் அருகிச் செல்வதை இந்திய-புலிகள் போரின் ஊடாகப் பட்டறிந்து கொண்ட தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள், முதுபெரும் தளபதி கிட்டு அவர்களை புலம்பெயர் தேசங்களுக்கு அனுப்பி வைத்துப் புலம்பெயர் தமிழ்ச் சமூகத்திடையே தமிழ்ப் பிரக்ஞையைக் கட்டியெழுப்பும் பணிகளை விரைவுபடுத்தினார்.

 

ltte-1984இதுதான் 05.12.1995 அன்று யாழ்ப்பாணம் சிங்களப் படைகளின் வசம் வீழ்ச்சியடைந்தமைக்குப் பின்னரான சூழமைவில் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் நிதி மூலம் தக்கவைக்கப்பட்டதற்குக் காலாக அமைந்தது. அத்தோடு தலைவரின் சிந்தனையின் வீச்சு நின்றுவிடவில்லை.

 

2002ஆம் ஆண்டு நோர்வேயின் அனுசரணையுடன் போர்நிறுத்த உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டதை அடுத்து தமிழீழ தாயகத்திற்கு வருகை தந்த பல தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களும், உணர்வாளர்களும் தமிழீழ தேசியத் தலைவரைச் சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றார்கள்.

 

தேசத்தின் தலைவனைச் சந்தித்த மகிழ்ச்சியில் பலர் மூழ்கியிருக்க, தலைவர் அவர்களோ புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின் எதிர்காலம் பற்றிய சிந்தனையில் மூழ்கினார். தலைவர் அவர்களைச் சந்தித்தவர்களில் தமது அகவையின் நாற்பதுகளின் இறுதிக் கட்டத்தை எட்டியவர்களும், ஐம்பதுகளின் முற்பகுதியில் காலடி வைத்தவர்களுமாகப் பலர் இருந்தார்கள். இன்னும் ஒரு தொகுதியினர் தமது அகவையின் அறுபதுகளில் காலடி பதித்தவர்களாக இருந்தார்கள். போதாக் குறைக்கு இவர்களில் பலர் நீரிழிவு நோய், குருதிக் கொழுப்பு போன்ற பல எண்ணிலடங்காத வியாதிகளால் பீடிக்கப்பட்டவர்களாகவும் இருந்தார்கள்.

 

தலைவர் அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு இளைய தலைமுறையைச் சேர்ந்த புலம்பெயர்ந்தோருக்கும் கிட்டியிருந்தாலும்கூட, இவர்கள் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவினராகவே இருந்தார்கள்.

 

அச்சந்தர்ப்பதில் எவருமே சிந்திக்காத ஒரு விடயத்தைப் பற்றித் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் ஆழமாகச் சிந்தித்தார். இன்னும் சில தசாப்தங்களுக்குத் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டம் இழுபட்டுச் செல்லும் பட்சத்தில், புலம்பெயர் மண்ணில் தமிழீழ தேசிய விடுதலைக்காகக் குரல்கொடுத்து வரும் மூத்த தலைமுறையைச் சேர்ந்த பலர் உயிரோடு இருக்க மாட்டார்கள் என்பதுதான் அது.

 

தலைவரின் தீர்க்கதரிசனப் பார்வையின் விளைவாகப் புலம்பெயர் மண்ணில் தமிழ் பிரக்ஞையுடைய இளைய தலைமுறையொன்று வெளிப்பட்டது. தமிழீழ தேசியத் தலைவருடனான தொடர்பைத் தமிழினம் இழந்திருக்கும் கடந்த ஆறாண்டு காலச் சூழமைவில் புலம்பெயர் தேசங்களில் முன்னெடுக்கப்படும் பல தமிழ்த் தேசியப் பணிகளில் காத்திரமான பாத்திரத்தை இந்த இளைய தலைமுறையே வகிக்கின்றது.

 

இவ்வாறு இரண்டு தலைமுறைகளைக் கொண்ட தமிழ்த் தேசியப் பிரக்ஞையுடைய வலிமை மிக்க மக்கள் கூட்டமாகத் திகழும் புலம்பெயர் தமிழ்ச் சமூகத்திடையே பிளவுகளை ஏற்படுத்தி, அச்சமூகத்தின் அரசியல் வீரியத்தை மழுங்கடித்து, அதனை முற்றாகச் சிதைத்தழிப்பது எதிரியின் கடந்த ஆறாண்டு காலக் கனவாகும். கே.பியில் தொடங்கி உருத்திரகுமாரனுடன் தோல்வி கண்டுபோன இந்தக் கனவு இப்பொழுது மீண்டும் தூசிதட்டப்பட்டு, புதிய செயல்வடிவங்களைப் பெற முனைகின்றது.

 

அரசியல் தீர்வின் பெயரில் புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சுவார்த்தை நாடகமாடுதல், நல்லிணக்கத்தின் பெயரில் புலம்பெயர்ந்த தமிழர்கள் மீது ‘சிறீலங்கன்’ என்ற அருவருப்பான அடையாளத்தை மெல்ல மெல்லப் பூசிவிடுதல், ஒற்றுமையின் பெயரில் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள் மீது ஆயுத வன்முறையை ஏவிவிட்டுப் புகலிடத் தமிழ்க் கட்டமைப்புக்களை செயலிழக்க வைத்தல் எனப் பல வடிவங்களில் தனது ஆறாண்டு காலக் கனவைச் செயற்படுத்த சிங்களம் விளைகின்றது.

 

diasporaஇவை போதாதென்று கருத்தியல் ரீதியில் புலம்பெயர்ந்த தமிழர்களைப் பலவீனமான மக்கள் கூட்டமாக சித்தரிப்பதற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்படுகின்றன. ‘‘புலம்பெயர் தமிழர்களிடம் பண பலம் மட்டும்தான் உண்டு. அவர்களிடம் அரசியல் பலம் கிடையாது. எனவே சிறீலங்கா அரசாங்கத்துடன் நல்லிணக்கம் செய்து கொள்வதன் மூலமே இப்பலத்தை சரியான முறையில் புலம்பெயர்ந்த தமிழர்கள் பயன்படுத்தலாம்’’ என்று சில அந்நிய மேதாவிகளும், அவர்களுக்குப் பரிவட்டம் கட்டுவோரும் கூறும் கருத்திற்குப் பலம்சேர்க்கும் வகையிலேயே இவ்வாறான கருத்தியல் உருவகிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 

ஒரு காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு வலையமைப்பில் முக்கிய பங்கு வகித்து, பின்னர் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் கலாநிதிப் பட்டத்திற்கான ஆய்வின் போர்வையில் பல இரகசியங்களை விலைபேசி விற்ற நோர்வேயை வதிவிடமாகக் கொண்ட கே.பியின் மதிமந்திரியொருவரும் இக் கருத்தியல் உருவகிப்புக்களில் முக்கிய பாத்திரத்தை வகிப்பது இவற்றின் உள்நோக்கங்களை ஐயம்திரிபு இன்றிப் பட்டவர்த்தனமாக்கியுள்ளது.

 

இதனை முறியடித்துத் தமிழீழத் தனியரசுக்கான குரலை உலக அரங்கில் ஓங்கியொலிப்பதும், புலம்பெயர் தமிழ்ச் சமூகம் ஒரு வலிமையான சமூகம் என்பதை சிங்களத்திற்கும், உலக சமூகத்திற்கும் இடித்துரைக்க வேண்டியவர்களாக நாம் அனைவரும் இருக்கின்றோம்.

 

‘‘பூமிப்பந்திலே ஈழத்தமிழினம் ஒரு சிறிய தேசமாக இருக்கின்ற போதும் நாம் ஒரு பெரும் வலிமை வாய்ந்த ஒரு சக்தி மிக்க இனம்’’ என்று 2008ஆம் ஆண்டுக்கான மாவீரர் நாள் உரையில் தமிழீழ தேசியத் தலைவர் குறிப்பிட்டது இவ்விடத்தில் நினைவூட்டப்பட வேண்டியதாகும்.