அவுஸ்திரேலியா மெல்பேணில் “தமிழர் இனவழிப்பு நினைவுநாள் – 2014” நினைவு நிகழ்வுகள் 18-05-2013 ஞாயிற்றுக்கிழமை பெரும் தொகையான மக்களின் பங்களிப்புடன் உணர்வுபூர்வமாக நடந்தேறின.

மெல்பேண் ஸ்பிறிங்வேலில் அமைந்துள்ள ஸ்பிறிங்வேல் நகர மண்டபத்தில் சரியாக மாலை 5.00 மணிக்கு பொதுச்சுடரேற்றலுடன் தொடங்கிய இந்நினைவு நிகழ்வு இரவு 7 மணியளவில் நிறைவடைந்தது. முதன்மைச் சுடரை அண்ணாவியார் திரு. இளைய பத்மநாதன் அவர்கள் ஏற்றி மலர் வணக்கம் செலுத்தி வைக்க, முள்ளிவாய்க்கால் பேரவலத்தை நேரிலிருந்து எதிர்கொண்ட சிறுவனுட்பட முன்று தலைமுறைகளைச் சேர்ந்த மூவர் சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தினர்.

May 18 Rememberance Event_MELB 05
அதனைத் தொடர்ந்து அவுஸ்திரேலியக் கொடியை அகதிகள் விடயங்களில் போராடி வரும் Balarat ஐச் சேர்ந்த Kath Morton அவர்களும், தமிழீழத் தேசியக்கொடியை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சர் திரு. மாணிக்கவாசகர் அவர்களும் ஏற்றினார்கள். அதனைத் தொடர்ந்து அகவணக்கம் இடம்பெற்றது. அதன்பின்னர் உயிர்நீத்த மக்களுக்கான மூன்று மதத் தலைவர்களின் மத வழிபாடு இடம்பெற்றது.

அடுத்த நிகழ்வாக முள்ளிவாய்க்கால் பேரழிவை நினைவுகொள்ளும் காணொலி அகலத்திரையில் திரையிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து விக்ரோரிய தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பிலிருந்து திரு. சிவகுமார் அவர்களால் இந்நிகழ்வு பற்றிய முன்னோட்டமும் இந்நிகழ்வின் தேவையும் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. விக்ரோறிய மாநிலத்தில் செயற்பட்டுவரும் அனைத்துத் தமிழ் அமைப்புக்களின் ஒருங்கிணைந்த முயற்சியாக இந்நிகழ்வு நடைபெறுவதையும் இனிவருங் காலங்களில் இம்முயற்சி தொடரப்படுமென்ற செய்தியையும் இவ்வுரை சுட்டிநின்றது. அடுத்து இளம் இசைக்கலைஞர் கோகுலன் அவர்களால் மனித அவலங்களின் தாக்கத்தை உணர்த்தும் ஆங்கிலப்பாடல் ஒன்று இசைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தமிழர் இனவழிப்பு நினைவுநாள் தொடர்பாக உலகத் தமிழர் பேரவையின் தலைவர் வணக்கத்துக்குரிய இம்மானுவேல் அடிகளாரினதும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் திரு. உருத்திரகுமாரன் அவர்களும் வழங்கிய செய்திகள் காணொலிகளாகக் அகலத் திரையில் காண்பிக்கப்பட்டன. தொடர்ந்து அவுஸ்திரேலியாவில் புகழ்பெற்ற பாடகரான Les Thomas அவர்களால் தமிழ்மக்களின் இன்னல்களை வெளிப்படுத்தும் பாடலொன்று பாலச்சந்திரன் பிரபாகன் என்ற சிறுவனின் படுகொலையை பாடுபொருளாககொண்டு பாடப்பட்டது.

May 18 Rememberance Event_MELB 10
தொடர்ந்து அவுஸ்திரேலியாவின் கிறீன் கட்சியைச் சேர்ந்த Colleen Hartland அவர்களின் உரை இடம்பெற்றது. இந்நாளில் தமிழ் மக்களின் வலியைத் தான் உணர்வதாகவும், தமிழ்மக்கள் எதிர்கொண்ட துன்பங்களுக்கான நியாயம் நிச்சயம் ஒருநாள் கிடைத்தே தீரவேண்டும்; அதுவரை விடாது தொடர்ந்து போராட வேண்டியது அனைவரினதும் கடமை என்ற சாராம்சத்தில் அவ்வுரை அமைந்திருந்தது.

அதனைத் தொடர்ந்து நாட்டிய நாடகமொன்று மேடையேற்றப்பட்டது. நடனக்கலைஞர்களான நிக்சன் மற்றும் சிறிராம் ஆகியோருடன் எல்லாளன் விளையாட்டுக்கழக கலைஞர்களும் இணைந்து வழங்கிய இந்நாட்டிய நாடகம் பார்வையாளர் அனைவரினதும் உணர்வுகளைத் தொட்டது.

May 18 Rememberance Event_MELB 11
அதனைத் தொடர்ந்து நிகழ்வின் முதன்மைப் பேச்சாளரான திரு. மாணிக்கவாசகர் அவர்களின் உரை இடம்பெற்றது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சரும், பலதடவைகள் ஜெனீவா சென்று மனிதவுரிமைகள் கூட்டத்தொடரில் ஈழத் தமிழரின் சார்பில் பரப்புரைகள் செய்து தீவிரமாகச் செயற்பட்டுவரும் மாணிக்கவாசகர் தனது பட்டறிவுகளையும் அவரது உரையில் பகிர்ந்துகொண்டார். தற்போதைய உலகச்சூழல், தமிழ்மக்கள் எதிர்கொள்ளும் சிக்கல், தமிழ்மக்கள் செய்ய வேண்டிய பணிகள் என்பன குறித்து விரிவான உரையாக அவரது உரை அமைந்திருந்தது.

இறுதியாக கொடியிறக்கலுடனும் “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்” என அனைவரதும் உறுதியெடுப்புடன் நிகழ்வுகள் எழுச்சியுடன் மாலை 7 மணியளவில் நிறைவடைந்தன.