தமிழ்தேசிய ஆசான்களில் ஒருவரும் பிரபல பொருளியல் ஆசிரியரும் ஈழம்ஈநியூஸ் ஊடகத்தின் ஸ்தாபர்களில் ஒருவருமாகிய ஆசிரியர் வரதராஜன் அவர்கள் காலமாகிவிட்டதை மிகுந்த மன வருத்தத்துடன் பகிர்ந்து கொள்கிறோம்.

Varatharajan
தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் இவரது பங்களிப்பு தனித்துவமானது. ஒரு ஆசிரியராக தமிழ்தேசிய சிந்தனையாளராக ஒரு போராட்ட தலைமுறையை உருவாக்கியதில் இவரது பங்களிப்பை யாரும் மறுக்க முடியாது.

மே 18 இற்கு பிறகு தமிழ்த்தேசியம் பேசியவர்கள் பலர் தடம் மாறியபோதும், தமிழ்த்தேசியத்தை இறுகப்பிடித்துக்கொண்டு ஒரு வழிகாட்டியாக முன்நின்றார்.

ஊடகங்கள் பல திசைமாறியது கண்டு ஒரு தனித்துவமான தமிழ்த்தேசிய ஊடகம் ஒன்றை கட்டியெழுப்ப வேண்டும் என்று ஈழம்ஈநியூஸ் உருவாக்கத்திற்கு வழிகோலியவர்களில் முதன்மையானவர் ஆசிரியர் வரதராஜன்.

எமது இணையத்தில் பல புனை பெயர்களில் குறிப்பாக “தேனுப்பிரியன்” என்ற பெயரில் அவர் 2009 இற்கு பின்னான காலப்பகுதியில் எழுதிய தொடர் கட்டுரைகள் பலரை தமிழ்த்தேசியத்தின் பால் மீள திருப்பியதென்றால் அது மிகையல்ல.

பின்நாளில் “தமிழ் அரசியல்வாதிகள்” என்ற பெயரில் உலாவிய பலதமிழ்த்தேசிய போலிகளை இனங்கணடு ஒரு வித விரக்திக்குட்பட்டு கொஞ்சம் விலகியே நின்றார்.

இதைப் பயன்படுத்தி அவரது கனதியை உணர்ந்த தமிழ்த்தேசிய விரோதிகள் அவரை தம்பக்கம் இழுக்க வலைவிரித்தபடியே திரிந்தனர்.

அதன் விளைவான அவரது நடத்தை பலரது விமர்சனத்திற்குள்ளாகியது. ஆனாலும் அவரிடம் மாறாத ஒன்றாக தமிழ்த்தேசியம் அவருடனேயே பயணித்ததை எம் போன்றவர்கள் மட்டுமே அறிவோம்.

விளைவாக மீண்டும் எமது தளத்தில் இனஅழிப்பு குறித்தும் தமிழ்தேசிய அரசியலின் புதிய பரிமாணம் குறித்தும் ஒரு தொடரை எழுத சம்மதித்தார்.

ஆனால் அதை எழுத இன்று அவர் எம்முடன் இல்லை.

இந்த வகையில் ஆசான் வரதராஜனின் இழப்பு தமிழீழ மக்களுக்கு தமிழ்த்தேசத்திற்கு தமிழ்த்தேசியத்திற்கு பேரிழப்பாகும்.

எமது மண்ணுக்காக மரணித்த ஆயிரமாயிரம் மாவீரர்கள் வரிசையில் ஆசான் வரதராஜனும் நினைவு கொள்ளப்படுவார்.

தமிழீழ விடுதலையை வென்றெடுப்பதனூடாகவே ஆசான் வரதராஜனுக்கு உண்மையான அஞ்சலியை செலுத்த முடியும் என்ற ஆழமான புரிதலுடன் ஆசானின் பணியை தொடர தமிழ் மக்களாகிய நாம் உறுதி எடுத்துக்கொள்வோம்.

ஆசிரியர் குழு

ஈழம்ஈநியூஸ்.