எமது உயிர் உடலில் இருக்கும்போது அது தொடர்பில் நாம் சிந்திப்பதில்லை, ஆனால் அது எம்மைவிட்டு பிரியும்போது தான் அதன் பெறுமதியை நாம் உணர்கின்றோம். அதனைப்போன்றது தான் தமிழீழத்தின் பொருளியல் ஆசிரியரும், தமிழத் தேசிய செயற்பாட்டாளருமான நாட்டுப்பற்றாளர் திரு சி. வரதராஜன் அவர்களின் மறைவு.

2009 ஆம் ஆண்டு மே மாதம் எமது ஆயுதப்போராட்டம் தற்காலிகமான முடிவுக்கு வந்தபோது அடுத்தகட்டமாக அரசியல் பாதையை பலப்படுத்தவேண்டிய சூழ்நிலைக்கு நாம் தள்ளப்பட்டபோது, பலமான ஒரு அரசியல் கட்சியை உருவக்கவேண்டிய தேவை தமிழீழ மக்களுக்கு ஏற்பட்டிருந்தது.

ஆனால் சிறீலங்கா அரசு எமது ஆயுதப்போரை மட்டும் சிதைக்கும் நோக்கத்தில் செயற்படவில்லை, எமது ஆயுதபலம், அரசியல் பலம், புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழ் மக்கள் மற்றும் தமிழக மக்களின் ஊடாக நாம் கட்டி எழுப்ப முற்பட்ட அனைத்துலக இராஜதந்திர மற்றும் ஆதரவுபலம் என எல்லாவற்றையும் வேரோடும், வேரடி மண்ணோடும் சிதைத்துவிடும் திட்டங்களையே சிறீலங்கா வகுத்திருந்தது.

vartah22
சிறீலங்கா அரசின் இந்த திட்டத்தின் முக்கிய பங்காளி இந்தியா. இந்தியாவின் இந்த தமிழ் இனவிரோதப் போக்கிற்கு மிகவும் காரணமாக இருந்த அதிகாரிகளில் பலர் கேரளா மாநிலத்தையும் வடஇந்தியாவையும் சேர்ந்தவர்கள். சிறீலங்கா அரசுக்கும் கேரளா மானிலத்திற்கும் உள்ள வலுவான பிணைப்புக்கள் நாம் அறிந்தவையே. இந்த வலையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வீழ்ந்தபோது அதில் இருந்த பல தேசிய இனஉணர்வாளர்கள் இந்தியாவின் கட்டளைக்கிணங்க 2010 ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்டனர்.

இந்திய அரசு கையளித்த நிகழ்ச்சி நிரலில் இருந்த பலரும், முன்னர் இந்தியாவுடன் இணைந்து செயற்பட்ட விடுதலைப்போராட்ட அமைப்புக்களைச் சேர்ந்தவர்களையும் கொண்ட புதிய குழு ஒன்று இந்தியாவுக்கு விசுவாசமான தலைமையின் கீழ் உருவாக்கப்பட்டது.

அரசியல் தளம் சிதைக்கப்படுவதை நாம் உணர்ந்தபோது அதனை தக்கவைக்கும் நோக்கத்துடன், தமிழத் தேசிய மக்கள் முன்னனி என்ற அமைப்பு ஒன்று உதையமானது. தமிழத் தேசியக் கூட்டமைப்பினால் வெளியேற்றப்படவர்களும், தமிழத்தேசிய உணர்வாளர்களும் இணைந்து உருவாக்கிய இந்த அமைப்பில் திரு வரதராஜனும் தன்னை இணைத்துக்கொண்டிருந்தார்.

எளிமை, நேர்மை, தேசிய உணர்வு இவைமட்டுமே அவரிடம் இருந்த சொத்துக்கள் ஆனால் இந்தியாவினால் உருவாக்கப்பட்ட அணியின் பணபலம் மற்றும் பிரச்சார பலத்துடன் ஒப்பிடும்போது மலைக்கும் மடுவுக்குமான இடைவெளியே தேர்தலின்போது காணப்பட்டது. புலம்பெயர் நாட்டிலும், தாயக்திலும் இருந்த முக்கிய ஊடகங்கள் இந்திய அரசின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக பணியாற்றிக்கொண்டிருந்தபோது தமிழத் தேசியம் என்ற உணர்வு மீண்டும் அரசியல் ரீதியாக தோல்வி கண்டது.

தமிழத்தேசிய அரசியலை சிதைக்கும் திட்டத்தில் இந்தியாவும் சிறீலங்காவும் பெரும் வெற்றிகண்டன. முள்ளிவாய்க்காலில் ஏற்றபட்ட படைத்துறை அழிவுக்கு பின்னர் தமிழீழம் கண்ட மிகப்பெரும் அரசியல் தோல்வி அதுவாகும்.

வெற்றிபெற்றவனுக்கே வரலாறு சொந்தம் என்பதற்கு அமைவாக தோல்வியடைந்த அமைப்பில் இருந்தவர்களை நோக்கி வெற்றிபெற்ற அமைப்பு வலைவீசியது. அவர்களுடன் இணைந்து அரசியல் செய்து எமது அரசியல் அடித்தளத்தை மீட்டெடுப்பதா அல்லது வெளியில் இருந்து செயற்படுவதா என்ற ஒரு நிலை.

இப்படியான ஒரு நிலையில் தான் திரு வரதராஜன் அவர்கள் எனது கருத்தையும் அறிய முற்பட்டிருந்தார். சிறீலங்கா அரசின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக இயங்கும் ஒரு அமைப்பில் இருந்து செயற்படுவதைவிட வெளியில் இருந்து மக்கள்பணியாற்றலாம் என்பதுடன், கட்சியின் ஏனையவர்களின் கருத்துக்களும் முக்கியம் என்பதே எனது கருத்தாக இருந்தது.

அதன் பின்னர் அவர் வெளியில் இருந்தே தமிழ் மக்களுக்கான உதவிகளை த எயிட் என்ற அமைப்புடன் இணைந்து மேற்கொண்டதுடன், தமிழ் மக்களின் நில அபகரிப்பு, சிங்களக்குடியேற்றங்கள், தமிழ் மக்களின் பொருளாதாரம், தமிழர் தாயகம் மீதான ஆக்கிரமிப்பு போன்றன தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்டு அதனை ஈழம்ஈநியூஸ் இலும் தொடராக எழுதிவந்திருந்தார்.

ஒரு புத்தகத்தை வெளியிடுவதற்கு தேவையான தகவல்களை சேகரித்த அவர் அதனை வெளியிடுவது தொடர்பில் பலரை தொடர்புகொண்டபோதும் யாரும் அதற்கு முன்வரவில்லை என எனது நண்பரும், பெண்ணியல் ஆய்வாளருமான பரணி கிருஸ்ணரஜனியிடம் சில மாதங்களுக்கு முன்னர் மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்திருந்தார்.

எனினும் எமது தேசத்தின் துயரம்மிக்க வரலாற்று ஆய்வை வெளியிடுவதற்கான ஏற்பாடுகளை நாம் மேற்கொள்ளத்திட்டமிட்டோம். இது தொடர்பில் ஆசான் வரதராஜன் அவர்களும் தனது விருப்பத்தை தெரிவித்திருந்தார்.

varatharajan-4
அது மட்டுமல்லாது திட்டமிட்ட சிங்களமயமாக்கல் மற்றும் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனைகள் தொடர்பில் ஒரு தொடர் பத்தியை எழுதவும் அவர் சம்மதித்திருந்தார். ஆனால் திடீரென அவரின் தொடர்புகள் குறைந்துபோனது. தனக்கு உடல்நிலை சரியில்லை என இறுதியாக மேற்கொண்ட தொடர்பில் தெரிவித்திருந்தார். ஆனால் இவ்வாறான ஒரு கொடிய நோயின் பிடியில் அவர் சிக்கியிருப்பார் என்பதை நாம் கனவிலும் நினைத்துப்பார்க்கவில்லை.

ஒரு தூய்மையான, இன உணர்வுள்ள மனிதனைக் காண்பது என்பது தற்போதைய சூழ்நிலையில் அரிதானது. பதவி, பணம், புகழ், அடிபணிவு அரசியல் என்ற காரணிகளை தன்னகத்தே கொண்டிராத விரல்விட்டு எண்ணக்கூடிய மனிதர்களில் திரு வரதராஜன் அவர்களும் ஒருவர். ஆனால் இன்று நாம் அவரையும் இழந்துவிட்டோம். அவருடன் சேர்த்து ஈழத்தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனைகள் தொடர்பான ஆழமான ஆய்வுத் தகவல்களையும் நாம் இழந்துவிட்டோம்.

ஈழம்ஈநியூஸ் இற்காக வேல்ஸ் இல் இருந்து அருஷ்.