பிரித்தானியவை பெரிய பிரித்தானியா என அழைப்பதா அல்லது பிரித்தானியா என அழைப்பதா என்பது குறித்த விவாதத்திற்கான முடிவு எதிர்வரும் வெள்ளிக்கிழமை (19) தெரிந்துவிடும். ஏனெனில் ஸ்கொட்லாந்து பிரிந்து சென்றால் பெரிய பிரித்தானியா என ஐக்கிய இராட்சியத்தை அழைக்கமுடியாது என்பது பிரித்தானியா பிரதமர் டேவிட் கமரனின் கவலை.

எதிர்வரும் வியாழக்கிழமை (18) இடம்பெறவுள்ள தேர்தலுக்கான பிரச்சாரங்களை இரு தரப்பும் மிகவும் தீவிரமாக மேற்கொண்டுவருகின்றன. பிரிந்து செல்வதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதாக அண்மைய கருத்துக்கணிப்பு ஒன்று தெரிவித்துள்ளநிலையில் வெஸ்ட்மினிஸ்ரர் வளாகத்தை அச்சம் சூழ்ந்துவிட்டது.
இதனைத்தொடர்ந்து, பிரித்தானியா பிரதமர் (கொன்சவேட்டிவ் கட்சி), எதிர்கட்சித்தலைவர் எட் மில்லபான்ட் (தொழிற்கட்சி), அரச கூட்டணிக் கட்சியும் பிரதி பிரதமருமான நிக் கிளெக் (லிபரல் டெமோகிரட்டிக் கட்சி) ஆகியோர் இந்த வாரம் கூட்டாக ஸ்கொட்லாந்து சென்று “இல்லை” என வாக்களிக்கும் பிரச்சாரத்தை மேற்கொண்டிருந்தனர்.

scotland-yes
ஸ்கொட்லாந்து தனிநாடாக பிரிந்து செல்லவேண்டுமா? என்ற கேள்விக்கு ஆம் அல்லது இல்லை என்று வாக்களிக்கவேண்டும்.

பிரிந்து செல்வதற்கான “ஆம்” என வாக்களிக்கும் பிரச்சாரக் குழுவிற்கு ஸ்கொட்லாந்தின் முதலமைச்சர் அலெக்ஸ் சல்மொன்ட் தலைமை தாங்குகின்றார். இரு தரப்பும் தம்மிடம் உள்ள அனைத்து வளங்களையும் பிரச்சாரத்திற்கு பயன்படுத்துகின்றன.

பொருளாதாத்தை முன்னிறுத்திய பயமுறுத்தல்களையும், மக்களிடம் அனுதாபங்களைத் தேடும் முயற்சிகளையும் ஆங்கிலேய தேசம் மேற்கொண்டுள்ளது. Royal Bank of Scotland உட்பட ஐந்து வங்கிகளும், நிதி நிறுவனங்களும் ஸ்கொட்லாந்தில் இருந்து வெளியேறும் எனவும், ஸ்கொட்லாந்து ஸ்ரேலிங் பவுண்ஸ் இனை வைத்திருக்கமுடியாது எனவும் எச்சரிக்;கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஸ்கொட்லாந்து மக்கள் ஒரு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடலாம் என்ற அச்சுறுத்தல்கள் மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது. தொழில் நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், வங்கிகள் என்பவற்றை தனது பிரச்சாரத்திற்கு பிரித்தானியா அரசு பயன்படுத்திவருவதாகவும், நிதி நிலமை தொடர்பான இரகசியத் தகவல்களைக்கூட அவர்கள் வெளியிடுவதாக சல்மொன்ட் தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த வாக்கெடுப்பில் வெற்றியீட்டி தாம் தனிநாடாக செல்லவேண்டும் என்பதில் ஸ்கொட்லாந்து நாடாளுமன்றம் உறுதியாக இருக்கின்றது. அதற்கு அமைவாக வாக்களிக்கும் வயது எல்லையை 18 இல் இருந்து 16 ஆக அது குறைத்துள்ளது. அதாவது மாணவர்களின் கைகளில் தனிநாட்டுக்கான தீர்மானம் கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப்போரையும் இளைய சமூகத்திடமும், மாணவர்களிடமும் கையழிப்பதாகவே விடுதலைப்புலிகளும் தெரிவித்திருந்தனர். இளையசமுதாயம் என்பது தம்மை மற்றவர்கள் ஆட்சிபுரிவதை ஒருபோதும் விரும்புவதில்லை. விடுதலைப்புலிகளின் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் விடுதலைப்போராட்டத்தில் தன்னை இணைத்தபோது அவரும் ஒரு பள்ளி மாணவரே.

அலக்ஸ் சல்மொன்டின் இந்த திட்டம் பிரித்தானியா ஆட்சியாளர்களை கலங்கடித்துள்ளது. தனது பிரச்சாரத்திற்கு ஆதரவாக கனடாவையும், அமெரிக்காவையும் பிரித்தானியா அழைத்துள்ளது. இருபது வருடங்களுக்கு முன்னர் கியூபெக் மாநிலம் கனடாவில் இருந்து பிரிந்து செல்வதற்கான வாக்கெடுப்பைச் சந்தித்தபோது முதலாவது கருத்துக்கணிப்பில் பிரிந்து செல்வதற்கான நிலையே அதிகம் காணப்பட்டதால், பதற்றமடைந்த கனேடிய அரசு அன்றைய அமெரிக்க அதிபர் பில் கிளிங்டனை தனக்கு துணையாக அழைத்திருந்தது.

பிரிவினை வேண்டாம் என பில் கிளிங்டனும் வேண்டுகோள்விடுத்திருந்தார். அதன் பின்னர் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட மக்களை ஒன்றுதிரட்டி பிரிவினைக்கு எதிராக கனேடிய அரசு மிகப்பெரும் பேரணியையும் நடத்தியிருந்தது. அதன்பின்னர் தேர்தலின் முடிவு மாற்றமடைந்துவிட்டது.

இந்த நம்பிக்கை பிரித்தானியா அரசுக்கு உள்ளதாக பிரித்தானியா அரச ஊடகமான பி.பி.சி தெரிவித்துள்ளது. பிரிவினைக்கு எதிராக பராக் ஒபாமாவும், ஸ்ரீபன் ஹாப்பரும் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

அதாவது சுதந்திரம் வேண்டும் என்ற போராட்டத்தை ஸ்கொட்லாந்து மக்கள் மட்டுமே மேற்கொள்ளவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அது மட்டுமல்லாது ஸ்கொட்லாந்தில் குடியேறியுள்ள ஆங்கிலோயர்கள் மற்றும் அவர்களின் நிறுவனங்களுடன் போட்டியிட்டு தேர்தலில் வெற்றியீட்டவேண்டிய நிலையில் அவர்கள் உள்ளனர். எனவே மிகவும் குறைந்த விகித வாக்கு எண்ணிக்கையே வெற்றி தோல்வியை தீர்மானிக்கப்போகின்றது.

scotland-2
இந்த நிலையில் தான் பிரச்சாரம் கடுமையாக உள்ளது. பல்கலைக்கழகங்களுக்கான ஆய்வு நிதி, சுகாதார நிதி, கல்வி நிதி என பல நிதிக்கொடுப்பனவுகள் பாதிக்கப்படும் எனவும் பிரித்தானியா ஊடகங்கள் மிரட்டுகின்றன.

ஸ்கொட்லாந்து மாநிலமும், அங்குள்ள உலகப்பிரசித்திபெற்ற 5 பல்கலைக்கழகங்களும் பெருமளவான விஞ்ஞானிகளை இந்த உலகத்திற்கு தந்துள்ளன. “தக்கன பிழைக்கும் தகாதன அழியும்” என்ற கூர்ப்புக் கொள்ளையை முன்வைத்த சார்ஸ் டாவினும் ஸ்கொட்லாந்தின் தலைநகரில் உள்ள பிரசித்திபெற்ற எடின்பரே பல்கலைக்கழகத்திலேயே கல்வி பயின்றிருந்தார். அந்த பல்கலைக்கழகத்தில் நானும் இரு வருடங்கள் இராசாயணவியல் துறையில் பணியாற்றியிருந்தேன்.

ஒரு விலங்கில் உள்ள எந்த ஒரு கலத்தின் கருவையும், கரு அகற்றப்பட்ட முட்டையுடன் இணைப்பதன் மூலம் புதிய ஒரு விலங்கை உருவாக்கமுடியும் என்ற தத்துவத்திற்கு அடிப்படையாக டொலி என்ற ஆட்டுக்குட்டியை செயற்கையாக உருவாக்கிய விஞ்ஞான ஆய்வு மையத்தை கொண்ட பெருமையும் ஸ்கொட்லாந்தையே சாரும்.

ஸ்கொட்லாந்தின் பிரிவினை என்பது இரு நாடுகளினதும் பொருளாதரத்தையும் பாதிக்கும் என்ற கருத்துக்கள் பொதுவாக உள்ளன. இதுவே பிரித்தானியாவின் பிரதான கவலையாக இருக்கலாம், ஆனால் தம்மிடம் நிறைய எண்ணைவளம் உள்ளதால் தமது பொருளாதாரம் பாதிக்கப்படாது என ஸ்கொட்லாந்து மக்கள் கூறுகின்றனர். தற்போது கூட இங்கிலாந்து பல்கலைக்கழகங்கள் மாணவர்களிடம் இருந்து வருடத்திற்கு 9,000 பவுண்ஸ்களை அறவிடும்போது, ஸ்கொட்லாந்து பல்கலைக்கழக மாணவர்கள் இலவசக்கல்வியையே பெற்றுவருகின்றனர்.

எனவே தமது வளங்களில் அதிகமானவற்றை பிரித்தானியாவே கையகப்படுத்துவதாக ஸ்கொட்லாந்து மக்கள் கருதுகின்றனர்.

golden brown
இதனிடையே பிரித்தானியாவின் முன்னாள் பிரதமரும், ஸ்கொட்லாந்துவாசியுமான கோல்டன் பிரவுண் அவர்கள் புதியதொரு கோணத்;தில் பிரிவினையை தடுக்க முற்பட்டுள்ளார். அதாவது வெளிவிவகாரம், வரி அறவிடுதல் உட்பட பெருமளவான அதிகாரங்களை ஸ்கொட்லாந்து நாடாளுமன்றத்திற்கு வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

ஆனால் ஸ்கொட்லாந்து சுதந்திர நாடாக தனது எதிர்காலத்தை உறுதியான பொருளாதாரக் கட்டமைப்புடன் ஆரம்பிக்கும் என ஸ்கொட்லாந்தின் நிதிச் செயலாளர் ஜோன் ஸ்வின்னி தெரிவித்துள்ளார். இந்த வார இறுதியில் இடம்பெறும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் சல்மொன்ட் உலங்குவானூர்தி சுற்றுபயண பிரச்சாரத்தை மேற்கொள்ளவுள்ளார்.

எதிர்ப்பிரச்சாத்தில் பிரித்தானியா தொழிற்கட்சியைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் கோடொன் பிரவுண், நாடாளுமன்ற உறுப்பினர் ஜிம் மோர்பி ஆகியோர் தீவிரமாகச் செயற்படுகின்றனர். மோர்பி 100 நகரங்களுக்கு பயணம் மேற்கொள்கின்றார். எடின்பரே நகரில் ஆயிரக்கணக்கானவர்கள் கூடி பிரித்தானியா அரசுக்கு ஆதரவான ஒறேஞ் பேரணியையும் மேற்கொள்ளவுள்ளனர்.

இல்லை என வாக்களித்தால், தேர்தலுக்கு மறுதினமே அதாவது வெள்ளிக்கிழமையே (19) புதிய அதிகாரங்கள் வரையப்படும் எனவும், சில மாதங்களில் அது நடைமுறைக்கு வரும் எனவும் பிரவுண் தெரிவித்துள்ளார். எனவே தனிநாட்டு வாக்கெடுப்பில் தோல்வி கண்டாலும் ஸ்கொட்லாந்துக்கு அதிக இழப்பு இருக்கப்போவதில்லை. இந்த வாக்கெடுப்பு ஒரு பேரம்பேசும் வல்லமையை அவர்களுக்கு வழங்கியுள்ளது.

ஆம் என்ற பிரச்சாரத்தின் வலு அதிகரித்துச் செல்லும் போது பிரித்தானியா வழங்குவதாக தெரிவிக்கும் அதிகாரங்களின் அளவுகளும் அதிகரித்துச் செல்கின்றன. அவற்றை உடனடிhக நடைமுறைப்படுத்துவதாகவும் அது தெரிவித்துவருகின்றது. அதாவது அங்கு ஒரு பேரம்பேசும் அரசியலும் திரைமறைவில் நிகழ்கின்றது.

தற்போது தமிழீழத்திலும் எமது அரசியல் தீர்வு தொடர்பில்; அனைத்துலக சமூகத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்கான பாதை ஒன்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு அமைத்துள்ள விசாரணைக்குழு என்ற பெயரில் திறக்கபட்டுள்ளது. அதற்கான உதவிகளை ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் நவநீதம்பிள்ளை அவர்களே வழங்கியுள்ளார். அதனை சரியாக பயன்படுத்த வேண்டியது எமது கைகளில் தான் உள்ளது.

தீவிர பிரச்சாரம், அதிக முயற்சி, அனைத்துலக சமூகத்துடனான உறவுகள் இவை எமக்கு உதவியாக இருக்கும் அதனை தான் கடந்த வாரங்களில் ஸ்கொட்லாந்தில் இடம்பெறும் சம்பவங்கள் எமக்கு புலப்படுத்துகின்றன.

ஈழம்ஈநியூஸ்இற்காக வேல்ஸ் இல் இருந்து அருஷ்.