rudrakumarஆர்மேனிய இன அழிப்புக்கும் இலங்கையில் நிகழ்த்தப்பட்ட முள்ளிவாய்க்கால் இனஅழிப்புக்கும் இடையில் பல ஒற்றுமைகள் உள்ளன. இரண்டும் இன அடிப்படையிலான குரோதம் முக்கிய பங்கு வகித்துள்ளது என ஆர்மேனிய இனப்படுகொலையின் நூற்றாண்டு நினைவு வணக்கச் செய்தியில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் வெளியிட்டுள்ள ஆர்மேனிய இனப்படுகொலையின் நூற்றாண்டு நினைவு வணக்கம்
செய்தியின் முழுவிபரம்:

 

ஆர்மேனிய மக்கள் மீது நடந்தேறிய இனஅழிப்பின் நூற்றாண்டு நினைவு நிகழ்வுகள் இடம்பெற்று வரும் இவ்வேளையில், இக்கொடூரச் செயலால் தம் உயிர்களை இழந்த அனைத்து ஆர்மேனிய மக்களுக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது மரியாதை வணக்கத்தினை தெரிவித்துக் கொள்கின்றது.

 

உலககெங்கும் பரந்து வாழும் ஆர்மேனிய மக்களுக்கு ஈழத்தமிழ் மக்களினது தோழமையினையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

 

ஆர்மேனிய இனஅழிப்பைப் பின்னோக்கிப் பார்க்கின்றபோது, 1915ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24ஆம் நாளன்று ஒட்டமன் துருக்கியர்கள், அர்மேனியர் குழுவொன்றைச் சுற்றி வளைத்துக் மேற்கொள்ளப்பட்ட படுகொலையோடு தொடங்கிய இனஅழிப்பு, ஒட்டு மொத்தமாக 15 இலட்சம் ஆர்மேனிய மக்களைக் கொன்று குவித்த, இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் இனப்படுகொலையாக நடந்தேறிய ஓர் வரலாற்று துன்பியலாகும்.

 

இன்று 100 ஆண்டுகள் கடந்து விட்ட பின்னரும், இற்றைவரை துருக்கி இந்த பாதகத்திற்கு பொறுப்புக் கூறவும் இல்லை;, அதனை ஏற்றுக் கொள்ளவும் இல்லை என்பதே மிகவும் வருத்தம் தரும் நிலையாகும்.

 

ஒரு கொடுமையை மறைப்பது அல்லது மறுப்பது என்பது, காயம் ஒன்றிலிருந்து இரத்தம் ஓடுவதைத் தடுப்பதற்கு கட்டுப்போடாமல் இருப்பதை ஒத்தது’ என இது தொடர்பில் மதிப்புக்குரிய புனித பாப்பரசர் பிரான்சிஸ் அவர்கள் கூறிய இக்கூற்று மிகவும் பொருத்தமாகும்.

 

ஆர்மேனிய இனஅழிப்புக்கும் இலங்கையில் நிகழ்த்தப்பட்ட முள்ளிவாய்க்கால் இன அழிப்புக்கும் இடையில் பல ஒற்றுமைகள் உள்ளன. இந்த இரு நிகழ்வுகளிலும் இன அடிப்படையிலான குரோதம் முக்கிய பங்கு வகித்துள்ளது.

 

இரு இடங்களிலும் இக்குற்றங்களை புரிந்தவர்கள், போரினால்தான் இக்கொலைகள் இடம்பெற்றன எனக் கூறித் தப்பித்துக்கொள்ளப் பார்க்கின்றார்கள். அத்துடன், பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் இவை தவிர்க்க முடியாதவை எனக் கூறி நியாயப படுத்துகின்றார்கள்.

 

மேலும், பாதிக்கப்பட்டவர்கள் உண்மையாகவோ அன்றிக் கற்பனையாகவோ நாட்டுக்கு விசுவாசமாக இல்லை எனவும் கருதப்படுகின்றது. இரு இடங்களிலும் இனஅழிப்பானது கூட்டுத் தண்டனையாக பாரிய அளவில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

அதுமட்டுமன்றி, இப்பெரும் இனஅழிப்பினை புரிந்தவர்கள் இதனால் பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்டு புலம்பெயர்ந்து வாழுகின்ற மக்களை பயங்கரவாதிகளாக சித்தரித்து, அவர்களுக்கு எதிராக வெறுப்பையும் ஏற்படுத்தி வருகின்றார்கள்.

 

ஆர்மேனியாவிலிருந்து இடம்பெயர்ந்து வாழும் மக்களிடமிருந்து நாங்களும் நல்ல பாடம் படிக்க வேண்டும். ஆர்மேனிய புலம்பெயர் மக்களின் மன உறுதியினாலும் இடைவிடா முனைப்புக்களினாலும் இன்று அவர்களிடத்தில் பல நிறுவனங்கள், பல்கலைக் கழகங்கள், ஆலோசனைக் கூடங்கள், ஊடகங்கள் எனப பலவும் இயங்கி வருகின்றன்.

 

ஆர்மேனிய மக்களுக்கு துருக்கியர்களால் இழைக்கப்பட்டது இனஅழிப்பு என்பதை இன்று உலகில் 20 நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளன.

 

மேலும், அங்கு நிகழ்ந்தது இனப் படுகொலை என்பதை ஏற்றுக் கொள்ளுமாறு துருக்கி நாட்டைக் கோரும் தீர்மானம் ஒன்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இலங்கைத்தீவில் தமிழினத்தின் மீது நடபெற்றது இனஅழிப்பு அல்ல என்பதனை நிலைநாட்ட சில சக்திகள் முனைந்து வருகின்றன. இதற்கு மாறாக, ஈழத் தமிழ் மக்களாகிய நாங்கள் தமிழீழத்தில் நடந்தது இனஅழிப்பே என்பதில் உறுதியாக உள்ளோம். எம் மக்களுக்கு நீதி கிடைப்பதற்கும், பரிகாரநீதியினை நிலை நாட்டுவதற்கும் செயலாற்றுகின்றோம்.

 

இதேவே அக்கொடிய அநீதி இனி ஒரு போதும் நடைபெறாமல் தடுப்பதற்கும் வழி வகுக்கும் என்பதே எமது உறுதியான நிலைப்பாடாகும். நிகழ்ந்த கொடுமைகள் எத்தன்மையானவை என்பதைத் தீர்மானிப்பதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் பங்குண்டு எனபதையும் நாம் இங்கு வலியுறுத்துகின்றோம்..

 

‘அனைத்துலக சமூகமானது கசப்பான விளைவுகள் எனும் முகமூடியில் தன்னை மறைத்து விட முடியாது. ‘இன அழிப்பு’ எனும் செயலுக்குப் பின்னால் மறைந்துதுள்ள பயங்கர விளைவுகளையும், அதனால் ஏற்படப் போகும் தலியீடுகலையும் கருத்தில் கொண்டு களத்தில் நிகழ்ந்த கொடுமைகளை மறுத்தலாகாது’ என நியுயோர்க் சஞ்சிகை தனது ஆசிரியத் தலையங்கத்தில் ஒரு தடவை குறிப்பிட்டது வாக்கியத்தினை இத்தருணத்தில் பதிவிட்டுக் கொள்கின்றோம். உண்மை நிச்சயம் விடுதலைக்கு வழி காட்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.