kokilavaaniஆறிப்போன காயங்களின் வலி- என் மனதில் நீறாகிப் பூத்திருந்த ரணங்கள் மீது மீளவும் காயங்களை உருவாக்கி விட்டது. இந்த நூல் ஆயுதம் தரித்துப் போரிட்ட போராளிகளுக்கு மட்டுமல்ல காலத்தின் தேவை கருதி அந்த நீரோட்டத்தில் கலந்து தங்களுக்கான கடமையினைச் செய்திருக்கின்றோம் என்ற ஆன்ம திருப்தியினைக் கொண்டுள்ள அனைத்து உறவுகளுக்கும் சமர்ப்பணமாகும் என நான் உணர்கின்றேன். என்னதான் முயன்றும் அந்த கசப்பான காலகட்டத்தை ஏழு வருடங்கள் கடந்த இன்றைய பொழுதிலும் எங்கள் மனங்களால் கடந்து போக முடியவில்லை.

 

ஒவ்வொரு வரலாற்றுக் கட்டங்களிலும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வரலாற்றுக் கடமையினை எதிர் நோக்கவேண்டிய கடப்பாடுகள் வருவதுண்டு. அந்தக் கடமை சமூகம் சார்ந்ததாக எப்போதும் அமைந்து வந்திருக்கின்றது. அந்த வகையில் அத்தகைய வரலாற்றுக் கடமையினை நாங்கள் முன்னெடுத்திருக்கின்றோம் என்ற பெருமை இப்போராட்டத்தில் பங்களித்த அனைத்து போராளிகளுக்கும் உண்டு. “காலா! உனை நான் சிறு புல்லென மதிக்கின்றேன் எந்தன் காலருகே வாடா” என்ற பாரதியின் வரிகள் எங்கள் போராளிகளது தியாகம் நிறைந்த வீரம் செறிந்த வாழ்விற்கே சாலப் பொருத்தமாக இருந்திருக்கிறது.

 

முன்னணிப் போர்க்களங்களிலும் பின் தளப் பணிகளிலிலும் மிகத் திறமை வாய்ந்த எத்தனையோ பெண் போராளிகளை நான் சந்தித்திருக்கின்றேன். அதே பெண்களில் பலரை பின்னாளில் புனர்வாழ்வு முகாம் என அழைக்கப்பட்ட பம்பைமடு தடுப்பு முகாமில் தொழிற்பயிற்சி வகுப்புகளில் தையல் ஊசி, துணிகளுடனும், அழகுக் கலை ஒப்பனைப் பொருட்களுடனும் பயிற்சி பெறுபவர்களாகவும் சந்திக்க நேர்ந்தபொழுது என்னால் அந்த முரணை உடனடியாக ஒப்புக் கொள்ள முடியாமல் போய் விட்டது.

 

பம்பைமடு!

 

நாஸிக்களின் கொலைக்களமான சொபிபோர் வதைமுகாமோ என ஆரம்பத்தில் எம்மை எண்ண வைத்த தடுப்புமுகாம். தோற்கடிக்கப்பட்ட போராட்ட சக்திகளின் எஞ்சிய உளவுரனையும் பல்வேறுபட்ட விசாரித்தல்கள் மூலம் சிதைக்க எண்ணம் கொண்ட ஒரு திறந்த வெளிச் சிறைச்சாலை. பல்கலைக்கழக மாணவர் நால்வரிற்கென வடிவமைக்கப்பட்ட அறைகளில் இருபது பேரை அடைத்து வைத்த மிருகத்தனத்தின் அடையாளம். இத்தகைய பம்பைமடு எங்களுக்கு உணர்த்திய பாடங்கள் பல. பலருக்கு பம்பைமடு ஒரு போதி மரம் என்றே கூறலாம்.

 

அட்டாலும் பால்சுவையிற் குன்றா தளவளாய்
நட்டாலும் நணபல்லார் நண்பல்லர் எட்டுணையும்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு
சுட்டாலும் வெண்மை தரும்.

 

என்று மூதுரையில் சொல்லப்படுவது போல், எத்துணை துன்பம் வரினும் தமது இயல்பிலும் பண்பிலும் எச்சிறிதும் தவறாத எத்தனையோ பலர் அங்கிருந்தார்கள். அவர்களில் ஒருவரே இன் நூலாசிரியர். வெற்றிச் செல்வியக்கா, பம்பைமடுவிற்கும் முற்பட்ட காலத்திலேயே எனக்கு அறிமுகமான ஒரு சகோதரி. எனக்கு அவர் அறிமுகமான காலத்தில் இருந்தே அவரது அவரது எழுத்தாற்றலை நான் அறிந்திருந்தேன்.

 

அவரது படைப்புகளை நான் படித்திருக்கின்றேன். அந்தவகையில் அவரது எழுத்துக்களின் வரிசையில் ஒரு நிதர்சனமான படைப்பாக, ஒரு வரலாற்று அம்சமாக இந்த நூல் அமையும் என்பதில் ஐயமில்லை.

 

படைப்பிற்கும் படைப்பாளிக்கும் இடையேயான உறவு தொடர்பாக கடந்த நூற்றாண்டு முழுவதும் வாதப் பிரதிவாதங்கள் நடந்திருக்கின்றன. இவ்வகையான உறவில் படைப்புத் தொடர்பான மதிப்பீடு என்பது படைப்பாளியின் சமூகம் சார்ந்த செயற்பாட்டிலிருந்தே முன்வைக்கப்பட வேண்டும் என்பதே எனது கருத்து.

 

அந்த வகையில் தன்னை ஒடுக்கப்பட்ட சமூகத்தின் போராட்டத்தோடு முழுமையாக இணைத்துக்கொண்ட படைப்பாளியின் எழுத்தாற்றல் இந்த நூலை உருவாக்கியிருக்கிறது. சமூகம் சார்ந்து, ஒடுக்கப்பட்ட மக்களின் உணர்வு நிலை சார்ந்து ஒரு படைப்பு உருப்பெற வேண்டுமானால் அதன் படைப்பாளி ஒடுக்குமுறைக்கு எதிரான செயற்பாட்டாளனாக இருந்தால் மட்டுமே சாத்தியமாகும். வரலாற்றின் ஒரு முக்கிய கட்டத்தில் தேசிய விடுதலைக்கான போராட்டத்தில் தனது வாழ் நாள் முழுவதையும் அர்ப்பணித்த வெற்றிச்செல்வியின் நோக்கம் சமூகம் சார்ந்ததாக மட்டுமே இருக்கமுடியும் என்பதை நூல் முழுவதிலும் காணக்கூடியதாக இருக்கின்றது.

 

தனது வரலாற்றுக்கடமையை உணர்ந்த ஒவ்வொரு மனிதனும் எங்காவது ஒரு மூலையில் போராடிக்கொண்டே இருப்பான் என்பதன் வாழும் உதாரணம் வெற்றிச்செல்வி.
அவரது எழுத்தாற்றல் சமூகத்தைக் கற்றுக்கொள்ளத் தூண்டும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
கலை இலக்கியம் என்பது காலத்தின் கண்ணாடிகள். ஒரு வரலாற்றுக் கட்டத்தையும் அந்தக் காலப்பகுதிக்குரிய மக்கள் கூட்டத்தையும் புரிந்துகொள்வதற்கு சமூகம் சார்ந்த படைப்புக்களே துணைவருகின்றன.

 

நாம் எமது தேசிய இனத்தின் முக்கிய காலகட்டத்தை வலிகளோடும் சுமைகளோடும் கடந்து சென்றிருக்கிறோம். அந்த வலிகளையும் சுமைகளையும் மக்களுக்காகவே அனுபவித்திருக்கிறோம் என்பதில் நாம் பெருமையடையலாம். அவ்வாறான ஒரு வரலாற்றுக் கட்டத்தின் தவிர்க்க முடியாத குறியீடாக வெற்றிச் செல்வியின் நூல்பேசப்படும் எனபதில் எனக்கு சந்தேகங்கள் இல்லை. பேசப்படாதவற்றைத் துணிந்து பேசும் விரல்விட்டெண்ணக்கூடிய மிகச் சொற்ப நூல்களுக்குள் பம்பைமடுவும் ஒன்று. சமகால போராட்ட இலக்கியங்களுக்குள் பம்பைமடு சுடர் விட்டு ஒளிர்வதற்குப் பின்புலத்தில் பல காரணங்கள் உண்டு.

 

நூலின் குறித்துக்காட்டத்தக்க இயல்புகள்: : அது அதிகாரவர்க்கம் சார்ந்ததல்ல, அழிப்பிற்குப் பின்னான பேரினவாதத்தைக் கோடிட்டுக் காட்டுகிறது, சமூகத்தின் உச்சத்தில் நிறுத்தி மதிக்கப்பட்ட பெண் போராளிகள் அனுபவித்த அவமானங்களை சமூகத்தின்முன் வைக்கின்றது. சமூக ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் பெண்களின் கண்ணீரின் மீது சிங்கள இராணுவப் பெண்களின் குறைந்த பட்ச அனுதாபத்தை தொட்டுச் செல்கிறது. நம்பிக்கைகளைத் தொலைத்த ஒரு சமூகத்தின் முன்னணிப் போராளிகளின் உணர்வுகளை படம்போட்டுக் காட்டுகின்றது.

 

இந்த நூல் பம்மைமடு வாழ்க்கையினை மட்டும் சொல்லவில்லை. பஞ்ச பூதங்களைத் தவிர வேறெதுவற்ற ஒரு அமானுஷ்ய வெளியில் நடந்து முடிந்த 21ம் நூற்றாண்டியின் துயரைத்தையும் தொட்டுச் செல்கிறது. இந்த நூலின் 55ம் பக்கத்தின் இறுதியில் நூலாசிரியர் இவ்வாறு கூறுகிறார் “அடுத்தடுத்த வலயங்களில் யார் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்றெல்லாம் அறிய முடியாத கம்பித்தடைகளுக்குள் வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட எங்களால் பம்பைமடு கடந்து யாரைத் தேடிக் கண்டு பிடிக்க முடியும்?

 

சேற்றுக் குழிகளில் அம்மணமாய்க் கிடக்கின்ற எங்கள் தோழர் தோழியரைப் பற்றி எள்ளளவும் தெரியாமல் அடைப்புக்குள் கிடந்தோம்”. எத்தனை ஆண்டுகள் கடந்தென்ன? நடந்து முடிந்த கொடூரம் மனங்களை விட்டு அகலப் போவதில்லை. நினைக்கும் பொழுதில் கசியும் கண்ணீர் நிற்கப் போவதில்லை. மனம் நடுங்கிப் போகிறது எங்களுக்கு.

 

எங்களுக்குத்தான் மனம் நடுங்கிப் போகிறது. எங்கள் துயரத்துள் நாங்கள் ஒடுங்கிப் போய் இருக்க எங்கள் துயரம் வியாபாரப் பண்டமாயிற்று பலருக்கு. கடல் தாண்டிப் போயும் இன்னமும் முடியவில்லை எங்களவர்களின் வியாபாரம். அந்த விடயத்தை விட்டுவிடுவோம் இப்போது.

 

 

மூடிய அறைகளுக்குள் முடக்கப்பட்ட அழுகுரலை, வேதனையை, வலியை, துணிவோடு வெளிக்கொண்டு வருவதே மீண்டும் ஒரு சமூகத்தின் நம்பிக்கையை வெல்வதற்குரிய முதலாவது படிக்கல். அதற்கான முதல் பணியைத் நூல் செவ்வனே செய்து முடித்திருக்கிறது.

 

தமிழ்த் தேசிய இனத்தின் ஆணிவேரை அசைத்துப் பிடுங்கி, போராளிகளை மண்ணோடு மண்ணாக்கிவிட்டு நாம் வெற்றிபெற்றுவிட்டதாக மார்தட்டிக்கொள்ளும் பேரினவாதத்தின் முகத்திரையைக் கிழிக்கும் இந்த நூல் வரலாறுகடந்தும் வாழும்.

 

படைப்பு என்ற சுமை மிகுந்த பணியினை வெற்றிச்செல்வி முடித்திருக்கிறார். சமூகம் சார்ந்த அவரது நூலை மக்கள் மத்தியில் கொண்டுசெல்வது நமது எல்லோரதும் கடமை. இந்த வேளையில் இறுதியாக ஒரு விடயத்தை இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.

 

எமது இனத்தின் விடியலுக்காக தங்களை அர்ப்பணித்துப் போரிட்ட எங்கள் சகோதர சகோதரிகள் இன்று தமது முகவரிகளைத் தொலைத்தவர்களாக எங்கோ மூலைகளில் தம்மை ஒடுக்கிக் கொண்டு வாழ்ந்து வருகின்றமை மிகவும் வருந்தத் தக்கது. தோற்கடிக்கப்பட்ட போராட்டத்தின் குறியீடுகளாக அவர்கள் நடாத்தப்படுகின்ற நிலை வேதனைக்குரியது. காலத்தின் கட்டளையேற்று நீங்கள் நடாத்திய யாகம் மௌனித்துப் போய்விட்டது. போகட்டும். ஆனால் அநீதிகளைக் கண்டு பொங்கியெழுகின்ற உங்கள் போர்க்குணம் மௌனித்துப் போக வேண்டாம்.

 

போராட்ட நிழலே பட்டிருக்காத தலைமைகளால் நாங்கள் தலைமை தாங்கப்படும் துயரம் இனி வேண்டாம். எங்கள் அவலங்கள் மேல் நடாத்தப்படும் அரசியல் எங்களுக்கு வேண்டாம்.

 

எங்களிற்கான உரிமைகளை வென்றெடுப்பதற்காக உங்கள் ஆற்றல்களை ஒருங்கிணைத்து முன்னே செல்வதற்கு ஜன நாயகப் பெருவெளி முன்னே விரிந்து கிடக்கின்றது. அதனைப் பற்றிக் கொண்டு ஆரோக்கியமானதோர் எதிர்ப்பரசியலை முன்னெடுக்க உங்களை நீங்கள் வெளிப்படுத்தி முன்னோக்கி வரவேண்டும் எனக் கேட்டுக் கொண்டு இவ்வுரையினை நிறைவு செய்கின்றேன்.

 

நன்றி,
வணக்கம்.