இந்திய அரசியல் சட்டமுறையின் வடிவமானது மாநில அரசுகளுக்கு முழுமையான சுதந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதான தோற்றப்பாட்டை ஏற்படுத்திவிட்டு திரைமறைவில் ஆளுனர் ஆட்சிமுறை என்ற போர்வையில் மாநில அரசுகளின் முழுமையாக அதிகாரங்களையும் மத்திய அரசே தன்வசம் வைத்துள்ளது.

 
இது காலம் காலமாக உறுதிப்படுத்தப்பட்டு வந்திருந்தாலும், அண்மையில் ஏழு அப்பாவித் தமிழ் மக்களின் விடுதலை தொடர்பான சம்பவங்களை இதனை மீண்டும் உறுதி செய்துள்ளது.

 
அவர்கன் விடுதலை தொடர்பில் தமிழக அரசு முடிவுகளை எடுக்கலாம் என இந்திய உயர் நீதிமன்றமம் தெரிவித்திருந்தது.

 
ஆனால் ஏழு பேரையும் விடுதலை செய்வதற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்த பின்னர், அது தொடர்பில் வேற்று இனத்தவரான ஆளுனர் புரோகித்திடம் தமிழக அரசு அனுமதி கோரியிருந்தது. இதன்போது தான் தனது இனவெறியை காண்பித்துள்ளார் புரோகித்.

 
அதாவது மீண்டும் ஏழு தமிழர்களின் விடுதலையில் தடைகளை ஏற்படுத்த தன்னால் முடிந்த நாசவேலைகளை அவர் ஆரம்பித்துள்ளார், இது பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை தொடர்பில் மிகப்பெரும் அச்சங்களை தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

 
இங்கு என்ன பிழை நிகழ்ந்துள்ளது?

 
தமிழக அரசு தனது அடிமைப்புத்தியை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. தமிழ் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட அரசு இந்திய மத்திய அரசினால் நியமிக்கப்பட்ட ஆளுனரான வேற்று இன அதிகாரி ஒருவரிடம் அனுமதி கேட்டு கையேந்தி நிற்கின்றது.
தன்னிட்சையாக முடிவெடுக்கும் அதிகாரமற்ற தமிழக அரசு ஒட்டுமொத்த தமிழ் மக்களின் உரிமைகளை வேற்று இன அதிகாரி ஒருவரிடம் ஒப்படைத்துவிட்டு கையேந்தி நிற்பது ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் அவமானமாகும்.

 
அதாவது இந்திய மாநிலங்களுக்கு தனியாக ஆட்சி அதிகாரங்கள் உள்ளது போன்ற பாவனையை ஏற்படுத்திய பின்னர் ஆளுனர் என்ற அதிகாரிகள் மூலம் மாநில அரசுகளின் அதிகாரங்களை இந்திய மத்திய அரசு எவ்வாறு தனது பிடிக்குள் வைத்து ஏனைய இனமக்களின் உரிமைகளை அடக்கி ஒடுக்கி வருகின்றதோ அதனை ஒத்த அரசியல் வரைவு ஒன்றையே 1987 ஆம் ஆண்டு இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் சிறீலங்காவிலும் இந்தியா ஏற்படுத்தியிருந்தது.

 
இலங்கையில் உருவாக்கப்பட்ட 13 ஆவது திருத்தச்சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட மாகாண அரசுகளின் ஆளுனர்கள் இந்திய மாநில அரசுகளின் ஆளுனர்களை போன்றவர்களே. ஆனால் சிறீலங்கா அரசு அதனை மேலும் மெருகூட்டி இராணுவ ஆளுனர்களையே தமிழ் மக்கள் செறிந்துவாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் ஆளுனர்களாக நியமித்து வருகின்றது.

 
அதாவது தமிழ் மக்கள் இராணுவ ஆளுனர்களின் ஆட்சியின் கீழ் தான் அடிமைகாளாக வைக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தைப் பொறுத்தவரையில் வேற்று இன ஆளுனர்களின் ஆட்சியின் கீழ் தமிழக மக்கள் அடிமைகளாக உள்ளனர். இரண்டுக்கும் அதிக வேறுபாடுகள் கிடையாது.

 
எனவே தான் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தையும் அதன் மூலம் உருவாக்கப்பட்ட 13 ஆவது திருத்தச்சட்டத்தையும் விடுதலைப்புலிகள் பலமாக எதிர்த்திருந்தனர்.

 
அதாவது ஒரு இராணுவ ஆளுனரின் காலடியில் மண்டியிட்டு மடிவதை விட போராடி வீழ்வது மேல் என முடிவெடுத்த விடுதலைப்புலிகள் இந்திய படைகளின் அடக்கு முறைக்கு எதிராக கொரில்லாப் போரை முன்னெடுத்து அதில் வெற்றியும் கண்டனர்.

 
ஆனால் தமிழக மக்கள் இந்திய மத்திய அரசின் ஆளுனர் ஆட்சி முறைக்கெதிராக இன்று வரை வலிமையான ஒரு போராட்டத்தை முன்னெடுக்காதது இந்திய மத்திய புலனாய்வுத்துறையின் வெற்றி என்றே கூறமுடியும்.

 
எதிலுமே தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது, சாப்பிடவும், தூங்கவும், வேலைசெய்யவும் மட்டுமே அனுமதிக்கப்பட்ட உரிமைகளுடன் வாழும் தமிழக மக்களும் ஈழத் தமிழ் மக்களைப் போல நாடற்ற அகதிகள் தான்.

 
ஏறுதழுவுதல் மீதான தடைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தைப் போல இந்திய மத்திய அரசின் ஆளுனர் ஆட்சி முறைக்கு எதிரான போராட்டமே ஏழு அப்பாவித் தமிழ் மக்களையும் விடுவிப்பதற்கான ஒரே வழி, அதில் தான் தமிழக மக்களின் எதிர்காலமும் தங்கியுள்ளது.

 
ஈழம் ஈ நியூஸ்