இசுரேலின் அரசியலை ஆட்டிபடைப்பது அதன் மத அடிப்படைவாத கருத்தியல் ‘சியோனிச’த்திற்கு முக்கிய பங்குண்டு. ’சியோனிசம்’ எனும் யூத மத அடிப்படைவாத செயல்பாட்டினை புரிந்து கொள்வதே பாலஸ்தீன விடுதலையை உணர முடியும். பல முக்கியமான யூத பெருமக்கள் பாலஸ்தீனத்தினை ஆதரித்தவர்கள், ஆதரிக்கிறவர்கள். இசுரேலில் இருக்கும் யூத முற்போக்கு ஆற்றல்களும், மத அடிப்படைவாத எதிர்ப்பியங்களும் ‘சியோனிச’ விரிவாதிக்க செயல்பாட்டினை எதிர்க்கிறார்கள். அவர்களும் பாலஸ்தீனத்தினை ஆதரிக்கிறார்கள். இந்த இன-மதவெறியின் அடிப்படையிலேயே இசுரேலின் ராணுவமும் செயல்படுகிறது.

gasa-2014-july
சிங்கள பேரினவாதத்திற்கும், சராசரி சிங்கள மக்களுக்கும் உள்ள இடைவெளியை புரிந்துகொள்வதைப் போலவே இசுரேலின் ‘சியோனிச யூதவெறியை’ அறிந்து கொள்வதும்.

புலிகளோ, தமீழிழவிடுதலை ஆதரவு ஆற்றல்களோ சராசரி சிங்கள மக்களை விரோதிகளாக பார்த்ததில்லை. சிங்கள பேரினவாதமே தமிழர்களுக்கு விரோதமானது.

ராஜபக்சேவின் பேரினவாத வெறிக்கு அனைத்து சிங்கள மக்களும் பொறுப்பாளிகள் அல்ல.. அதே போல சிங்கள மக்கள் அனைவரும் சிங்கள பேரினவாதத்தினை ஆதரிப்பவர்கள் என்று எடுத்துகொள்ள முடியாது. (சிங்கள பேரினவாத இராணுவமும் இசுரேலினால் பயிற்றுவிக்கப்பட்டது).

இசுலாமிய அடிப்படைவாதம் பேசும் அரபு நாடுகள் பாலஸ்தீன மக்களின் அடிமைத்தனத்தினை போக்கவேண்டுமென்று முடிவெடுத்து செயல்பட்டால் அதை சாத்தியப்படுத்த முடியும். ஆனால் அந்த அரசுகளும் மறைமுகமாகவும், நேரடியாகவும் மேற்குலகிற்கு அடிமையாகவே இருக்கின்றன. இந்த அரசுகள் எதிர்த்து பேசவில்லை என்பதற்காக சராசரி அரபு மக்கள் பாலஸ்தீனத்தின் மீதான படுகொலை ஆதரிக்கிறார்கள் என அர்த்தம் அல்ல. ஏனெனில் ஈழப்படுகொலையை இந்தியா ஆதரித்தது என்பதற்காக தமிழக தமிழர்கள் அந்தப் படுகொலையில் உடன்பட்டவர்கள் என்றாகிவிட முடியாது.

நாம் ஒன்றினை கவனத்தில் வைக்கவேண்டும்.

இசுலாமிய அடிப்படைவாதம் , பயங்கரவாதம் பேசும் அல்கொய்தா போன்ற குழுக்கள் பெரும்பான்மை இசுலாமியர் வாழும் பாலஸ்தீனத்திற்காக ஒரு அசைவும் செய்ய மாட்டார்கள்.

இந்துத்துவ அடிப்படைவாதம் பேசும் இந்தியா ஒருபொழுதும் பெரும்பான்மை இந்துக்கள் (என்று இந்தியா வரையறுக்கும்) எனப்படும் ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்படும் பொழுது அதை தடுக்க ஏதும் செய்ய மாட்டார்கள், மாறாக உதவியே செய்வார்கள்.

கிருஸ்துவ அடிப்படைவாதத்தினை உள்ளடக்கி வைத்திருக்கும் மேற்குலக நாடுகள் கிழக்கு ஐரோப்பாவில் கிருத்துவர்களுக்குள்ளும் இனப்படுகொலைகளை தூண்டியது, அதை தடுக்கிறேன் என்று அப்பகுதிகளை தாக்கி அழித்தது.

கிருத்துவத்தினை பின்பற்றும் சில ஆப்பிரிக்க நாடுகள், தென்னமெரிக்க நாடுகள் பலவற்றினை அமெரிக்கா தனது பிராந்திய நலனுக்காக அழித்தது. ஏன். அது கிருத்துவ குருமார்களைக்கூட கொலை செய்யவும் செய்தது.

இனப்பேரினவாதத்தினை, மதவெறியை, சாதியவெறியை அரசுகள் பயன்படுத்திக்கொள்ளும். ஏனெனில் அதிகாரத்தினை கைப்பற்றவும், காப்பாற்றவும் இவர்களுக்கு இந்த முரண்கள் தேவை. இந்த வெறிக்கு பலியாகும் பொதுமக்கள் சக மக்களை கொல்கிறார்கள், கொலை செய்ய துணை செய்கிறார்கள், போரினை நடத்த ஆதரிக்கிறார்கள், போரில் பங்கேற்கிறார்கள்.

இந்த முரண்களை வைத்து தான் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகம், இந்தியா தனது பிராந்திய நலனை நிறைவேற்றிக்கொள்ளும்.

திருமுருகன்காந்தி.
மே பதினேழு இயக்கம்.