இசைப்பிரியா படுகொலையில் இலங்கை மீது சர்வதேச போர்க்குற்ற விசாரணை தேவை: ராமதாஸ்

0
731

ramadoss-smiling-300இசைப்பிரியா படுகொலையில் இலங்கை மீது சர்வதேச போர்க்குற்ற விசாரணை தேவை என்று கூறியிருகிறார் பாமக நிறுவுனர் ராமதாஸ். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,

விடுதலைப்புலிகள் இயக்கத் தொலைக்காட்சியின்செய்தி வாசிப்பாளர் இசைப்பிரியா படுகொலை செய்யப்பட்டது குறித்த காணொலி காட்சியை சேனல்-4 தொலைக்காட்சிவெளியிட்டிருக்கிறது. அதில் இடம்பெற்றுள்ள காட்சிகள் நெஞ்சத்தை பிளக்கும் வகையிலும், இதயத்தை உலுக்கும் வகையிலும் உள்ளன.

சேனல்-4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ள காணொலியில், சகதி நிறைந்த குளத்தில் கிடக்கும் இசைப்பிரியாவை சிங்களப் படையினர் அழைத்து வருகின்றனர். அவர் மீது ஒரு வீரர் வெள்ளைத் துணியை போர்த்துகிறார். அப்போது, அவர் தான் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மகள் என்று சில வீரர்கள் கூற, அதை இசைப்பிரியா மறுக்கிறார். அடுத்த காட்சியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில், படுகாயங்களுடன் பள்ளம் ஒன்றில் அவர் உயிரிழந்து கிடக்கிறார். இசைப்பிரியா உயிரிழந்து கிடக்கும் புகைப்படம் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் வெளியானது. அப்போது சிங்களப் படையினரால் இசைப்பிரியா சீரழித்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற குற்றச்சாற்று எழுந்தபோது, அதை மறுத்த இலங்கை அரசு, போரின் போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் அவர் இறந்திருக்கலாம் என்று விளக்கம் அளித்திருந்தது.

ஆனால், இப்போது வெளியாகியுள்ள காணொலி காட்சிகளைப் பார்க்கும்போது இசைப்பிரியாவை சிங்களப் படையினர் பிடித்து பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட கொடுமைகளுக்கு உள்ளாக்கிய பிறகு படுகொலை செய்திருக்கின்றனர் என்பது உறுதியாகிறது. அதுமட்டுமின்றி, சில ஆண்டுகளுக்கு முன் இசைப்பிரியா இறந்து கிடக்கும் படம் வெளியான போது, அதில் இருப்பவர் விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மகள் துவாரகா என்று கூறப்பட்டது. அதையும், இப்போதுள்ள காணொலியில் இசைப்பிரியாவை பிரபாகரனின் மகள் என்று சிங்கள வீரர்கள் சிலர் கூறுவதையும் பார்க்கும்போது, பிரபாகரனின் குடும்பத்தை அழிக்க வேண்டும் என்ற வெறியுடன் இராஜபக்சே அரசு செயல்பட்டதோ என்ற ஐயம் எழுகிறது. பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்டது தொடர்பாக சேனல்&4 தொலைக்காட்சி கடந்த பிப்ரவரி மாதம் வெளியிட்ட படங்கள் இதை உறுதி செய்கின்றன. இலங்கையில் நடந்தது போன்ற கொடுமைகள் உலகில் வேறு எங்கும் நடந்ததில்லை. இவை கடுமையாக கண்டிக்கத்தக்கவை.

இலங்கையில் நடந்தது இன அழிப்பு என்பதற்கும், அங்கு போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் பெருமளவில் நடத்தப்பட்டன என்பதற்கும் ஏராளமான ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. இலங்கைப் போரில் பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்களை சிங்களப்படை கொன்றது என்பதை ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன்அமைத்த மார்சுகி தருஸ்மென் குழு உறுதி செய்துள்ளது. டப்ளின் நகரில் அமைக்கப்பட்ட மக்கள் தீர்ப்பாயமும் இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்று தீர்ப்பளித்துள்ளது.

இசைப்பிரியா படுகொலை செய்யப்பட்டது குறித்து நேற்று கருத்து தெரிவித்த மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம்,‘‘ இது மிகவும் கொடூரமானது. மனித உரிமையை மீறிய செயல். இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களை பல நாடுகள் கண்டித்த பிறகும், அது தனது தவறுகளை திருத்திக் கொள்ளாமல் தான்தோன்றித்தனமாக நடந்து கொள்கிறது’’ என்று கூறியுள்ளார். இவ்வளவுக்குப் பிறகும் இலங்கை மீது நேரடியாகவோ அல்லது ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் மூலமாகவோ நடவடிக்கை எடுக்க இந்தியா தயங்குவது ஏன்? என்பது தான் எனது கேள்வியாகும்.

அரசியலிலும், பொருளாதாரத்திலும் இப்போதிருக்கும் அளவுக்கு வலிமை பெறுவதற்கு முன்பாகவே உலகில் எங்கு மனித உரிமை மீறல்கள் நடந்தாலும் அதற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இந்தியா தான் தூண்டுகோலாக இருந்திருக்கிறது. ஆனால், இப்போது இலங்கையில் நடந்த கொடுமைகளை கண்டிக்கவும், தண்டிக்கவும் இந்தியா முன்வராதது மிகுந்த வருத்தமளிக்கிறது.

எனவே, இனியும் தாமதிக்காமல் இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டை இரத்து செய்யவும், அந்த அமைப்பிலிருந்து இலங்கையை நீக்கவும் இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி, இலங்கை மீது சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடத்தவும் முன்முயற்சி எடுக்க வேண்டும். இதற்கானத் தீர்மானத்தை ஜெனிவாவில் வரும் பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள மனித உரிமை ஆணையத்தின் 25 ஆவது கூட்டத்தில் இந்தியா கொண்டுவர வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இசைப்பிரியாவின் கொலை ஆதாரம்! சீமான் கண்டனம்!

02 11 2013
seeman8
சனல் 4 வெளியிட்டுள்ள இலங்கையின் போர்க்குற்றத்திற்கான புதிய ஆதாரமான விடுதலைப் புலிகளின் ஊடகப் பிரிவில் பணியாற்றிய இசைப்பிரியாவின் கொலை தொடர்பிலான காணொளியைப் பார்வையிட்ட நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இவ்வாறு போர்க்குற்றங்கள் தொடரும் இலங்கையில் பொதுநலவாய மாநாட்டை நடாத்துவதா? அம்மாநாட்டில் பிரித்தானிய தலைவர்கள் பங்குபற்ற வேண்டுமா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
நெஞ்சை பிளக்க வைக்கும் காணொளி..

தமிழீழத்தில் அக்கா இசைபிரியாவுக்கு நேர்ந்த இந்த கொடூரம் அங்கு சிங்கள இனவெறியர்களால் பாலியல் வன்புணர்ச்சி செய்து கொல்லப்பட்ட இலட்சக்கணக்கான தமிழ்ப்பெண்களின் அவல நிலையை நமக்கு காட்டுகிறது…

தமிழர்கள் இதை உடனடியாக மக்களிடம் பரப்பி காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்த விடாமல் தடுப்போம்..

தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பை நடத்தப்பட வேண்டும் என்ற நமது ஒற்றை கோரிக்கையை தூக்கி பிடிப்போம்.

இந்தியா போன்ற கேவலமான நாடு உலகில் எதுவுமே இல்லை -பாலச்சந்திரன் மாணவர் இயக்கம்

இலங்கையின் போர் குற்றத்திற்கு இன்னுமொரு வலுவான ஆதாரத்தை வெளியிட்டுள்ளது சேனல் 4 நிறுவனம். தமிழீழ ஊடகவியலாளர் இசைப்பிரியா உயிருடன் பிடிபட்டு பின்பு இலங்கை ராணுவத்தால் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. அவர் உயிருடன் பிடிபட்ட காட்சி இப்போது உலகத் தமிழர்களை உலுக்கும் என்பதில் ஐயமில்லை.

இப்படி ஒரு ஆதாரம் கிடைத்தும் இந்தியா இலங்கையில் நடக்கும் காமன் வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளுமே என்றால் இந்தியா போன்ற கேவலமான நாடு உலகில் எதுவுமே இல்லை என்று நாம் அறுதியிட்டு கூறலாம். இலங்கை அரசின் போற்குற்றதிற்கு இந்தியா துணை நின்றதோடு இப்போது இலங்கைக்கு உதவியும் செய்து வருவது அருவருக்கத்தக்கது. தமிழர்களை கொன்று குவித்த இலங்கை மண்ணில் இந்தியா மாநாட்டை நடத்த துணை புரிந்தால் தமிழ் நாடு இனியும் இந்தியாவோடு சேர்ந்து வாழ முடியாது.