இப்படியொரு உயிர்ப்பான போராட்டத்துக்கு சாட்சியாக இருக்கும் வாய்ப்பு இன்னொரு முறை எனக்கு கிடைக்குமா என்று தெரியவில்லை.

1200 நாட்கள் தாண்டி நடந்து கொண்டிருக்கும் கூடங்குளம் அணுவுலைகளுக்கு எதிரான இடிந்தகரை மக்களின் போராட்டம் புத்தாண்டு பிறக்கும் போதும் தோய்வின்றி தொடர்ந்தது. புத்தாண்டு கொண்டாட்டம் கூட அவர்கள்க்கு போராட கிடைத்த ஒரு வாய்ப்பு. இதைவிட ஒரு பொருள் வாய்ந்த ஒரு புத்தாண்டு பிறப்பும் இனி எனக்கு வாய்க்கப்போவதில்லை.

உலகெங்கும் உற்சாகாக கொண்டாடப்பட்ட புத்தாண்டு பிறப்பை எதிர்காலத்தை பற்றிய அச்சத்தோடு போராட்ட களத்தில் வரவேற்றார்கள் இடிந்தகரை மக்கள். அந்த அச்சம்தான் கடும் குளிரிலும் கடலில் இறங்கும் திண்மையை அவர்களுக்கு தந்தது. அணுவுலைகள் தராத பிரச்னையையா கடல் தந்துவிட போகிறது?

kudamkulam-98
இடிந்தகரையில் நேற்றைய இரவு, போராட்ட வரலாற்றின் மகத்தான ஒரு பக்கம். அது கொண்டாட்டம் இல்லை. வாழ்வா சாவா போராட்டம். அந்த போராட்டத்தையும் அத்தனை உயிர்ப்போடு முன்னடத்திச் செல்கிறார்கள் அம்மக்கள்.

அணுவுலைகளின் அருகில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் புத்தாண்டு கொண்டாடுவதை விட அபத்தமான விஷயம் எதாவது இருக்குமா என்று தெரியவில்லை. அவர்கள் மரணத்துள் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். நாமும்தான்.

அவர்கள் இன்றைய மரணத்துள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நாம் நாளைய மரணத்துள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வேறெதுவும் இல்லை.

இப்போது நாம் சுதாரித்துக்கொள்ளாவிட்டால் நமது தலைமுறைகளுக்கும் நாம் மரணக்காடுகளையே விட்டுச் செல்வோம்.

கடும் குளிரில் கடலில் இறங்க தயங்காத இடிந்தகரை மக்களுக்காக மட்டுமல்ல, நமக்காகவும் நாம் செயலில் இறங்க வேண்டிய தருணம் இது.