இந்த பதிவு சில தமிழகத் தமிழர்களுக்கு கோபத்தை வரவழைக்கலாம். இது ஒன்றும் முடிவல்ல. ஒரு பார்வை அவ்வளவுதான்.

 

தமிழகத்தில் தற்போது நடக்கும் சடுதியான அரசியல் மாற்றங்கள் ஈழத்தமிழர்களை பெரும் குழப்பத்தில் தள்ளியுள்ளது.

 

தமிழீழத்தின் விடுதலை என்பது தமிழகத்தில் தங்கியிருக்கும் ஒரு அரசியல் – இராஜதந்திர அம்சம்.

 

மே 18 இற்கு பிறகு இதில் மேலும் கணிசமான இடம் தமிழகத்திற்கு போய் விட்டது மட்டுமல்ல, மீண்டும் எமது விடுதலைப் பேராட்டத்தின் பின்தளமாகவும் தமிழகம் மாறியிருக்கிறது.

 

எனவே தமிழக அளவில் போராட்ட அரசியல் இராஜதந்திர வழிமுறைகள் மாற்றப்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

 

குறிப்பாக இன அழிப்புக்கு நீதி வேண்டி நிற்கும் இனமாக பிராந்திய – பூகோள அரசியலை தமிழகத்தை மையமாக வைத்து நாம் ஒரு வரைபடத்தை வரைய தவறிவிட்டோம்.

 

‘தமிழகம் தனது கனதியை உணர்ந்து செயற்பட்டதா?’ என்ற கேள்விக்கு நம்பிக்கை தரும் பதில் இல்லை. இந்த பழியை முழுமையாக தமிழகத்தின் மீது திணித்து விட முடியாது. ஈழத்தமிழர்களாகிய நாம் அதை சரிவர பயன்படுத்தவில்லை என்ற உண்மையையும் சேர்த்து புரிந்து கொள்ள வேண்டும்.

 

2009 நடந்து முடிந்த இனஅழிப்பிற்கு பிறகான நமது தோல்வி மனப்பான்மையின் வெளிப்பாடான ஒரு தெளிவற்ற – குழப்பகரமான – எதையும் சந்தேகக் கண்கொண்டு பார்க்கும் ஒரு மனநிலையின் வெளிப்பாடாக அமைந்த எமது மதிப்பீடுகளின் விளைவு இது.

 

ஆனாலும் 2013 இல் மாணவர்கள் ஒரு புரட்சியினூடாக அந்த மதிப்பீட்டை கேள்விக்குள்ளாக்கி ஒரு பாதையை திறந்து வைத்தார்கள். ஆனால் தமிழக அரசியல்வாதிகளும், அமைப்புக்களும் அதை அதன் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்த தவறிவிட்டார்கள்.

 

எந்த ஒடுக்கப்பட்ட இனத்திற்கும் போராடும் இனத்திற்கும் இல்லாத பலமாக எமக்கு , ஒரு சிறிய நீர்ப்பரப்பு பிரித்து வைத்திருக்கும் கூப்பிடு தூரத்தில் ஒரு தனித்த மாநிலமாக 7 கோடி தமிழர்களை கொண்ட ஒரு நிலப்பரப்பhன தமிழகத்தின் புவியியல் அமைவு இருக்கிறது.

 

இந்த புவியியல் அமைவு பிராந்திய பூகோள நல்னகளை என்றாவது ஒரு நாள் ஈழத் தமிழர்களாகிய எமக்கு சார்பாக திருப்பும் வல்லமை கொண்டது. சனத்தொகையில் ஈழம் தமிழகம் சேர்ந்த நிலப்பரப்பை ஒப்பிடும்பொழுது சிங்களவாகள் எந்த பெறுமதியும் அற்றவர்கள் ஆவார்கள். இது பிராந்திய அரசியலில் பலம் சார்ந்து முக்கியமான கூறு. என்றாவது ஒரு நாள் தமிழகம் எமது விடுதலையை சாத்தியப்படுத்தும் அரசியலை எழுதும் என்ற அரசியல் கருத்தமைவு உச்சம் பெறும் மையப்புள்ளி இது.

 

இதை ஈழமும் தமிழகமும் சரிவரப் புரிந்து கொள்ளவில்லை.

 

ஆனால் இதை இந்திய கொள்கை வகுப்பாளர்கள் மட்டுமல்ல சிங்களம் மற்றும் சில பிராந்திய – மேற்குலக சக்திகள் கவனமக உள்வாங்கியுள்ளன. அதன் விளைவுதான் 2009 தமிழின அழிப்பு மட்டுமல்ல அதன் தொடர்ச்சியான தமிழகம் மீதான பல்முனை தாக்குதல்கள். அதன் ஒரு பகுதிதான் தற்போதைய அரசியல் கொந்தளிப்பு.

 

அதனால் இது சசி – பன்னீர் பிரச்சினை அல்ல..
அதையும் தாண்டியது.

 

எனவே இதன் பின்புலம் குறித்து தமிழர் நிலம் சார்ந்து அரசியல் தெளிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதை இராஜதந்திர மொழியில் கூறினால் ‘தமிழர் வெளியுறவுக் கொள்கை’ என்ற பதத்தினூடாகவே இதை அணுக வேண்டும்.

 

எனவே ஏற்கனவே பல பிரிவுகளாக பிளவுண்டுள்ள தமிழக போராட்ட சக்திகள் ‘இந்திய லொபிக்குள்’ சிக்கி மேலும் பிளவுறாதீர்கள். இது ஆரோக்கியமான போக்கு இல்லை.

 

இனஅழிப்பை சந்தித்து – தொடர்ந்து அதற்கு முகம் கொடுத்துள்ள ஈழத்தமிழர்களாகிய எமக்கு இந்த போக்கு பெரும் அச்சத்தையும் நம்பிக்கையீனத்தையும் விதைக்கிறது.

 

பின் குறிப்பு : இது என் தனிப்பட்ட கருத்து. ஓரளவிற்கேனும் இந்துத்துவ லொபியை உடைக்க – அல்லது வளைக்க -அல்லது நீர்த்துபோகச் செய்யக்கூடிய வாய்ப்பு பன்னீர் தரப்பை விட சசிகலா தரப்பிற்கே இருக்கிறது. இதன் வழி சசிகலாவிற்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்று சொல்லவில்லை. பிரச்சினையை இந்த கோணத்தில்தான் அணுக வேண்டும் என்று சொல்கிறேன்.