TN-Ele-2016இந்த மாதம் தமிழகத்தில் இடம்பெறவுள்ள தேர்தலானது தமிழ் இனத்தின் இருப்பினைத் தக்கவைக்கும் ஒரு களமாக மாற்றம் பெற்றுள்ளது.

 

தொழில்நுட்ப வளர்ச்சியின் உயர்நிலையில் உள்ள மனித இனமானது, உலகம் எங்கும் வாழும் பல்வேறு இன மக்கள் எவ்வாறு தமது இனஅடையாளங்களை தக்கவைத்துள்ளார்கள் என்பதையும், ஏனைய இனங்கள் எவ்வாறு அழிவடைந்தன அல்லது அழிவைச் சந்தித்துள்ளன என்பதையும் சமூகவலைத்தளங்களின் ஊடாக அறிந்துள்ளதானது ஒரு அரசியல் முதிர்ச்சியை அவர்களிடத்தில் ஏற்படுத்தியுள்ளது.

 

மறுவளமாகக் கூறுவோமாக இருந்தால் ஏமாற்றுக்காரர்களிடம் இருந்து எவ்வாறு தப்பிப்பிழைப்பது என்பது தொடர்பில் மக்கள் சிந்திக்கத் தொடங்கியுள்ளனர். இதனைத் தான் தமிழகத்தின் தற்போதைய தேர்தல் களம் உணர்த்துகினன்றது.

 

தமிழகத்தின் தேர்தலும் ஈழத்தமிழ் மக்களின் விடுதலைப்போரும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை. ஏனெனில் ஆரம்பகாலத்தில் எமது போராட்டத்தினை வளர்த்தொடுத்ததில் தமிழகத்தின் பங்கு அளப்பெரியது.

 

எனவே தான் தமிழகத்தின் தேர்தலை ஈழத்தமிழ் மக்கள் புறக்கணிக்க முடியாது. இலங்கையின் விவாகாரங்களில் இந்தியா எவ்வாறு தலையீடு செய்கின்றதோ அதனைப்போன்றே ஈழத்தமிழ் மக்களின் அழுத்தங்களும் தமிழகத்தின் தேர்தல் களத்தில் இருக்க வேண்டும்.

 

உலகம் எங்கும் பரந்துவாழும் பல கோடி தமிழ் மக்களின் தாய்நிலமாக தமிழகமே உள்ளது. எனவே அங்கு தமிழ் இனத்திற்கு ஒரு வலுவான அடித்தளம் உருவாக்கப்படவேண்டும்.

 

இந்த அடித்தளத்தை உருவாக்க வேண்டும் எனில் அங்கு ஒரு அரசியல் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும்.
தமிழகத் தேர்தல் களத்தில் இருந்து காங்கிரஸ் கட்சி எப்போதோ தூக்கி எறியப்பட்டபோதும் அவர்கள் மீண்டும் தலைதூக்க அனுமதியளிக்க கூடாது என்பதுடன், காலம் காலமாக வாய் வார்த்தைகளாலும், கடிதங்களை எழுதுவதன் மூலமும் தமிழ் மக்களை ஏமாற்றி வந்த மற்றும் வருகின்ற அ.தி.மு.க மற்றும் தி.மு.க கட்சிகள் அரசியல் அனாதைகள் ஆக்கப்பட வேண்டும்.

 

இந்த தேர்தலில் அவர்களை முற்றுமுழுதாக முறியடிக்க முடியாவிட்டாலும், இந்த இரு பெரும் கட்சிகளின் அழிவின் தொடக்கமாக இந்த தேர்தல் அமையவேண்டும்.

 

பணபலம் மூலம் ஊடகங்களை கையகப்படுத்துதல் மற்றும் தமக்கு ஆதரவாக ஊடகங்களை விலைகொடுத்து வாங்குதல் மூலம் வெற்றியீட்டிவிடாலம் என்ற கனவு இந்த கட்சிகளுக்கு தற்போதும் உண்டு.

 

ஆனால் தற்போது ஊடகங்களை விட பலமடங்கு சக்திவாய்ந்த பிரச்சார களமாக சமூகவலைத்தளங்கள் மாற்றம் பெற்றுள்ளன என்பது தான் உ;ண்மை. பெருமளவான மக்கள் தற்போது செய்திகளுக்காக ஊடகங்களை நாடுவதும் இல்லை ஏனெனில் எல்லாவற்றையும் சமூக வலைத்தளங்கள் எங்கள் கைகளுக்கு கொண்டுவருகின்றன.

 

இந்த உத்தி தான் தமிழ் இனத்திடம் தற்போது எஞ்சியுள்ள ஒரே ஆயுதமும் ஆகும். அது மட்டுமல்லாது உங்கள் உறவுகளுடன் பேசுவதன் மூலமும் ஒரு மாற்றத்தை நீங்கள் ஏற்படுத்தலாம்.

 

இதனை தான் பிரித்தானியா அரசு ஸ்கொட்லாந்தின் தனிநாட்டுக்கான வாக்கொடுப்பின் போது மேற்கொண்டிருந்தது. உங்கள் உறவுகள் மற்றும் நண்பர்களுடன் பேசுங்கள் என பிரித்தானியா பிரதமர் டேவிட் கமெரன் தெரிவித்த கருத்து அவருக்கு வெற்றியையும் அளித்திருந்தது.

 

கடந்த தேர்தலில் இந்திய காங்கிரஸ் கட்சிக்கு எவ்வாறு சாவு மணி அடிக்கப்பட்டதோ அதனைப்போலவே தொடர்ந்து தமிழ் இனத்தை ஏமாற்றும் கட்சிகளுக்கு இந்த தேர்தல் ஒரு முடிவுரையாக அமையவேண்டும்.

 

உங்கள் உறவுகளுடன் பேசுங்கள், இந்திய தேசத்திடம் இருந்து தமிழ் மொழியையும், இனத்தையும் காப்பாற்றுங்கள். ஆம் எங்களால் அது முடியும் என்ற வார்த்தையை மனதில் கொண்டு செயற்படுவோம்.

 

ஈழம் ஈ நியூஸ்