கும்மிடிப்பூண்டியை அடுத்த நாகராஜ கண்டிகை கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு, ஓட்டு போட பொதுமக்கள் செல்லவில்லை. பொதுமக்கள், ஒட்டுமொத்தமாக தேர்தலைப் புறக்கணித்ததால் பூத் வெறிச்சோடி காணப்பட்டது.

 

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த நாகராஜ கண்டிகை கிராமத்தில், சில மாதங்களுக்கு முன்பு மூடப்பட்ட இரும்புத் தாது உருக்கு தொழிற்சாலை திறக்கப்பட்டது. அதற்கு, ஒட்டுமொத்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். போராட்டகளையும் நடத்தினர். ஆனால் ஆலை மூடப்படவில்லை. இதனால், வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றினர். அதோடு, தேர்தலைப் புறக்கணிப்பதாகவும் அறிவித்தனர். ஆனால், அதிகாரிகளும் வேட்பாளர்களும் எப்படியும் மக்கள் மனமாறிவிடுவார்கள் என்று நம்பினர்.

 

இந்தச் சூழ்நிலையி,ல் நாகராஜ கண்டிகை கிராம மக்களுக்கான வாக்குச்சாவடி அங்குள்ள பள்ளியில் அமைக்கப்பட்டது. வாக்குச்சாவடி எண் 52ல், 537 வாக்காளர்கள் உள்ளனர். ஆனால், அந்தச் சாவடிக்கு யாரும் இன்று காலை முதல் வரவில்லை. இதனால், அந்த பூத் வெறிச்சோடி காணப்பட்டது. பொதுமக்கள் மட்டுமல்ல, பூத் ஏஜென்ட்டுகளும் வரவில்லை. தேர்தல் பணிக்காக வந்திருந்தவர்கள், `ஒருத்தரும் ஓட்டு போட வரல, என்ன செய்வது’ என்ற தகவலை அதிகாரிகளிடம் தெரிவித்தனர். பொதுமக்கள் வராததால் தேர்தல் பணிக்கு வந்த ஊழியர்கள் பூத்திலேயே அமர்ந்திருந்தனர்.

 

இதையடுத்து, தேர்தல் அலுவலர்களும் போலீஸாரும் சம்பந்தப்பட்ட கிராமத்துக்குச் சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், பொதுமக்கள் மனம் மாறவில்லை. ஆலையை மூடினால் வாக்களிப்போம் என்று திட்டவட்டமாகக் கூறினர். தொடர்ந்து, அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருகின்றனர்.

 

இதுகுறித்து நாகராஜ கண்டிகை கிராம மக்கள் கூறுகையில்,“தனியார் இரும்பு உருக்காலை வெளியிடும் நிலக்கரிப் புகையால் பல்வேறு சிரமங்களைச் சந்தித்துவருகிறோம். குறிப்பாக, விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. நிலத்தடி நீர் மட்டும் குறைந்துவிட்டது. இதன்காரணமாக, எங்களின் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கிறோம். ஆலையை மூடநடவடிக்கை எடுக்காத மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து, இன்று தேர்தலை புறக்கணித்துள்ளோம். ஆலையை மூடினால் மட்டுமே வாக்களிப்போம்” என்றனர்.

 

திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதிக்குள் வரும் கும்மிடிப்பூண்டி நாகராஜ கண்டிகை கிராம மக்கள் எடுத்த முடிவால், வேட்பாளர்களும் தேர்தல் அதிகாரிகளும் அதிர்ச்சியடைந்துள்ளனர். கிராம மக்களின் மனநிலையை மாற்ற தேர்தல் அதிகாரிகளும் கட்சியினரும் போலீஸாரும் எடுத்த முயற்சி தோல்வியடைந்தது. ஒட்டுமொத்த கிராம மக்கள் தேர்தலைப் புறக்கணித்துள்ளதால், அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. இதனால் டி.எஸ்.பி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.