சிறீலங்காவின் நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரங்கள் நான்கு திசைகளிலும் உக்கிரம் பெற்றுள்ள நிலையில் வடக்கிலும், கிழக்கிலும் தமிழ்த் தேசியம், தமிழ் மக்களுக்கான தீர்வுகள் தொடர்பான உறுதிமொழிகள் அள்ளி வீசப்படுகின்றன.

 

இந்த நிலையில் ஒரு சம்பவம் தான் என் நினைவில் வருகின்றது. அதாவது 1980 களின் முற்பகுதியில் நல்லூரில் உள்ள வீரமாகாளி அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற பொதுத்தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தின் போது அங்கு நவராத்திரி விழாவுக்கு வழை வெட்ட வைத்திருந்த வாளை எடுத்து சுழற்றிய அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் அடுத்த வருடப் பொங்கலுக்கு தமிழீழம் வந்துவிடும் என மக்களை ஏமாற்றி தனக்கு தேவையை வாக்குகளை சேகரித்திருந்தார். பின்னர் அதற்கான தண்டனையையும் பெற்றிருந்தார்.

 

தற்போதைய தமிழர் தரப்பு வேட்பாளர்களும் அதனையே செய்கின்றனர். 2016 ஆம் ஆண்டு தீர்வு என சிலர் பேச ஏனையவர்களுக்கு தற்போது தான் தமிழத் தேசியம் தொடர்பான நினைவுகள் தோன்றியுள்ளன. எல்லாம் தேர்தலில் வெற்றியீட்டி பணத்தையும், பதவியையும் பெறுவதற்காக மார்க்கமே தவிர வேறு எதுவுமில்லை.

 

எதிர்வரும் 17 ஆம் நாள் சிறீலங்காவில் இடம்பெறும் தேர்தலில் வடக்கு கிழக்கு மாகாணங்களைப் பொறுத்தவரையில் அங்கு போட்டியிடும் மூன்று பிரதான கட்சிகள் முக்கியமானவை.

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

 

தமிழ் மக்களின் தேசிய விடுதலைக்கு எதிரான பிரதான தடைக்கல்லாக தற்போது இந்தக்கட்சி உருவெடுத்துள்ளது.

 

TNA-election2015இவர்களின் பலம் என்பது விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழத் தேசியக் கூட்டமைப்பு என்ற நாமம், தமிழரசுக்கட்சி என்ற தனது தாயக்கட்சியின் பழைய வாக்கு வங்கி, தாயகத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் இருந்து வழங்கப்படும் மிகவும் பலமான ஊடக ஆதரவு, இந்தியாவின் ஆதரவு மற்றும் தமிழ் மக்களின் வாக்குகள் சிதறிவிடும் என்ற தொனில் மேற்கொள்ளப்படும் பிரச்சாரம்.

 

பலவீனம் என்பது தமிழ் தேசியத்திற்கு எதிரானவர்களை கட்சியில் உள்வாங்கியிருப்பது, சிறீலங்கா படையினருடன் இணைந்து விடுதலைப்புலிகளுக்கு எதிராக போராடிய மற்றும் தமிழ் மக்களை படுகொலை செய்த ஒட்டுக்குழுக்களை சேர்ந்தவர்களை தேர்தலில் நிறுத்தியிருப்பது. இந்தியாவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் உள்ள உறவு மற்றும் கடந்த ஐந்து வருடங்களாக காலத்தை இழுத்தடித்து போராட்டத்தை ஒரு தேக்கநிலைக்கு தள்ளியவர்கள் இவர்கள் என்ற உண்மையை மக்கள் மெல்ல மெல்ல உணர்ந்து கொண்டுள்ளவை என்பவையாகும்.

 

தமிழ் தேசிய மக்கள் முன்னனி

 

2010 ஆம் ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது தமிழத் தேசியக் கூட்டமைப்பானது தமிழ் தேசியத்திற்கு ஆதரவானவர்களை வெளியேற்றியபோது வெளியேறியவர்களால் உருவாக்கப்பட்ட அமைப்பு இது.

 

TNPF-2015இரு தேசங்கள் ஒரு நாடு, போர்க்குற்ற விசாரணைகளை முன்நிறுத்துவது போன்ற பிரச்சாரம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது தமிழ் மக்கள் கொண்டுள்ள விசனம், புதிய மாற்றம் வேண்டும் என்ற கோசம், மக்களுடன் கலந்து மக்களோடு மக்களாக மேற்கொள்ளப்படும் பிரச்சாரம் போன்றவை இவர்களின் பலம்.

 

பலவீனமான ஊடக ஆதரவு, தமிழத் தேசியம் தொடர்பில் அவதூறுகளை மேற்கொண்ட சிலரை அண்மையில் கட்சியினுள் உள்வாங்கியது, தமிழ் மக்களின் வாக்குகளை பிரிப்பதற்காக உருவாக்கப்பட்டவர்கள் என மக்கள் கருதுவது. தமிழ் தேசிய மக்கள் முன்னனிக்கு எதிராக இந்திய மத்திய அரசு காய்களை நகர்த்துவது போன்றவை இவர்களின் பலவீனம்.

 

ஐனநாயகப் போராளிகள் அமைப்பு

 

முன்னாள் போராளிகளை உள்ளடக்கி ஊடகவியலாளர் வித்தியாதரனினினால் புதிதாக உருவாக்கப்பட்ட கட்சி இது.

 

இந்த அமைப்பின் பலம் என்பது முன்னாள் போராளிகள் அதாவது விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உதவியாளர், புலனாய்வுத்துறை தலைவர் பொட்டு அம்மானின் உதவியாளர் என்ற காரணிகள். விடுதலைப்புலிகள் மீது மக்கள் கொண்டுள்ள பற்று. அனைத்துலக விசாரணையை முன்னிறுத்துவது, அரசியல் தீர்வை நாடுவது, மேற்குலகத்துடனான நட்புறவு என்பனவாகும்.

 

ஆனால் இந்த அமைப்பின் பலவீனம் என்பது அதிகம். மக்களிடம் அதிகம் அறிமுமில்லாது அவசரமாக உருவாக்கப்பட்ட அமைப்பு. அவர்களை உருவாக்கியது யார் அவர்களின் உள்நோக்கம் என்ன? இவர்களை நம்பலாமா என்ற மக்களின் தயக்கம். பலமற்ற ஊடக ஆதரவு. போர் நிறைவடைந்து ஆறு வருடங்களாகும் நிலையில், கடந்த ஆறு வருடங்களில் உருவாக்கப்படாத அமைப்பு ஏன் தற்போது தேர்தல் நேரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது என்ற சந்தேகம் என்பவை இவர்களின் பலவீனம்.

 

இந்த கட்சிகளைத் தவிர ஐக்கிய தேசியகட்சி சார்பில் விஜயகலா மகேஸ்வரன், ஈ.பி.டி.பி துணை இராணுவக்குழு உட்பட பல சுயேட்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.

 

தமிழ் மக்களின் தேசியம் தொடர்பில் அக்கறை கொள்ளும் கட்சிகளே அதிகம் வெற்றீட்டும் என்பதால் ஐ.தே.க மற்றும் ஈ.பி.டி.பி தொடர்பில் நாம் கவனம் செலுத்த தேவையில்லை.

 

ஆனால் தற்போது மக்களின் மனநிலை எவ்வாறு உள்ளது?

 

தமிழ்த் தேசிய மக்கள் முன்னனி மற்றும் ஜனநாயப் போராளிகள் அமைப்பு என்பன தமிழ் மக்களின் வாக்குகளைச் சிதறடிப்பதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளது என்ற பிரச்சாரமே வடபகுதி மக்கள் மத்தியில் அதிகம் பரப்பப்பட்டுள்ளது.

 

ஆனால் இந்த பிரச்சாரத்திற்கு எதிராக முன்வைக்கப்படும் கேள்வி ஒன்று தான். அதாவது 2010 ஆம் ஆண்டு நாம் சிந்தாமல் சிதறாமல் போட்ட வாக்குகளால் வெற்றியீட்;டிய தமிழத் தேசியக் கூட்டமைப்பு கடந்த ஐந்து வருடங்களில் சாதித்தது என்ன என்பதாகும்?

 

வாக்குகள் சிதறக்கூடாது என்பதற்காக நாம் ஏன் எமது இனத்திற்கு எதிராக நாமே சவக்குழியை வெட்டவேண்டும்?

 

daglasஅரசியல் கூட்டணி என்பது இரு வகையானது. ஓன்று தேர்தலுக்கு முன்னர் அமைக்கப்படுவது இரண்டாவது தேர்தலுக்கு பின்னர் அமைக்கப்படுவது. எந்த கட்சியாக இருந்தாலும் சரி தமிழ் இனத்திற்கு எதிரானவர்களை புறம்தள்ளி தமிழத் தேசியத்தின்பால் உண்மையான உணர்வுடன் பாணியாற்றுபவர்களை நாம் தெரிவுசெய்யவேண்டும். அதுவே எமது அரசியல் முதிர்ச்சியின் வெளிப்பாடு.

 

அதன் பின்னர் அவர்களை ஒருங்கிணைந்து ஒரு கூட்டணியை நாம் உருவாக்கிக் கொள்ள முடியும்.

 

அது மட்டுமல்லாது, ஐ.தே.க போன்ற தென்னிலங்கையின் இனவாதக் கட்சிகளும், சிறீலங்கா அரசுடன் இணைந்து தமிழ் மக்களை படுகொலை செய்த ஒட்டுக்குழுக்களைச் சேர்ந்தவர்களும் முற்றாக தோற்கடிக்கப்பட வேண்டும் என்பது இங்கு முதன்மையான ஒன்று. ஓட்டுக்குழுக்களைச் சேர்ந்தவர்கள் எந்த கட்சியில் இருந்தாலும் அவர்கள் தோற்கடிக்கப்படவேண்டும்.

 

இதுவரை காலமும் சிறீலங்கா அரசுடன் இணைந்து செயற்பட்ட இந்த ஒட்டுக்குழுக்களும், சிறீலங்கா அரசுக்கு ஆதரவாக விடுதலைப்புலிகளை எதிர்த்த தனிநபர்களும் எமக்கான விடுதலைக்காக எதிர்காலத்தில் உழைப்பார்கள் என்பது கேலிக்கூத்தானது.

 

தமிழத் தேசியத்திற்கு எதிரானவர்களை அதிகம் உள்வாங்கியுள்ள தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது, கடந்த ஐந்து வருடங்களில் தமிழ் மக்களின் அன்றாட பிரச்சனைகளைக் கூட தீர்க்க முடியாது அல்லது அது தொடர்பில் சிறீலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுக்க மறுத்துவந்துள்ளது. எனவே தமிழத் தேசியக் கூட்டமைப்பை புறக்கணிக்கும் நோக்கத்தோடு தமிழ் மக்கள் இந்த தேர்தலை புறக்கணிக்கவும் முயலலாம். ஏனெனில் 2010 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலின் போதும் தென்னிலங்கையுடன் ஒப்பிடும்போது வடக்கில் வாக்களித்தவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவானது.

 

இதனிடையே, சிறீலங்கா அரசினால் கடந்த காலங்களில் கடத்தப்பட்டு காணாமல்போனவர்களின் உறவினர்கள் திருமலையில் இவ்வாறான ஒரு முடிவை நோக்கியே தள்ளப்பட்டுள்ளனர். இது ஏனைய பகுதிகளுக்கும் பரவலாம் அல்லது இந்த தேர்தல் தொடர்பில் மக்கள் அக்கறைப்படாது இருக்கலாம்.

 

இந்த தேர்தல் தொடர்பில் புலம்பெயர் தேசங்களில் உள்ள மக்களும் இரு பிரிவாகவே செயற்பட்டுவருகின்றனர். ஓரு தரப்பினர் அரசியலில் புதிய மாற்றம் வேண்டும் என விரும்புகின்றனர். மறுதரப்போ யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். உண்மையான தேச நலன்விரும்பிகளுக்கு ஒரு சந்தர்ப்பம் வழங்க மறுக்கின்றனர்.

 

எனினும் எதிர்வரும் தேர்தல் முடிவுகளைப் பொறுத்தவரையில் தமிழத் தேசியக் கூட்டமைப்பானது கணிசமான வாக்குகளை இழக்கும் என்பதைக் காணமுடிகின்றது. இந்த வாக்குகள் ஏனைய கட்சிகளுக்கு செல்லலாம். தமிழத் தேசிய மக்கள் முன்னனியைப் பொறுத்தவரையில் கடந்த முறையைவிட இந்த முறை அதிக வாக்குக்களை பெற்றுக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

வடக்கு மற்றும் கிழக்கில் இவ்வாறான ஒரு மாற்றம் ஏற்பட்டால் அது இந்தியாவினதும், மேற்குலகத்தினதும் நிகழ்ச்சி நிரலில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். இந்திய மத்திய அரசை ஒரு நெருக்கடிக்குள் தள்ளுவது தான் தமிழ் மக்களின் விடுதலைப்போரை அழிவில் இருந்து காப்பாற்றும். ஏனெனில் அவ்வாறானதொரு நெருக்கடியினால் தான் 1980 களில் இந்தியா எமது விடுதலைப்போர் என்னும் விருட்சத்தை நீரூற்றி வளர்த்திருந்தது.

 

ஈழம் ஈ நியூஸ் இற்காக படைத்துறை மற்றும் அரசியல் ஆய்வாளர் திரு அருஷ் .