india-provinceஇணைக்கப்பட்டுள்ள படங்களை பாருங்கள். இந்தி பேசும் மாநிலங்கள் சிவப்பு நிறத்தில் காட்டப்பட்டுள்ளது. இந்தி வட்டத்தின் நீட்சி மாநிலங்களாக விண்மீன் குறிக்கப்பட்ட மாநிலங்களும் காட்டப்பட்டுள்ளது. மீதமுள்ள இந்தி அல்லாத மாநிலங்கள் காவி நிறத்தில் காட்டப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் எத்தனை பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள் என்பதையும் இப்படங்கள் காட்டுகிறது.

 

மொத்த பாராளுமன்ற உறுப்பினர்கள் தொகை : 543.
இந்தி மாநிலங்கள் வட்டம் – 215 இந்தி மாநிலங்கள் வட்டம் (நீட்சி) – 165. இந்தி அல்லாத மாநிலங்கள் – 163

 

மொத்தத்தில் இந்தி பேசும் மாநிலங்களும் இந்தி ஆதிக்கத்தை ஏற்றுக் கொண்ட மாநிலங்களும் சேர்த்து 380 பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். பாராளுமன்ற மொத்த உறுப்பினர் தொகையான 543 என்ற எண்ணிக்கையில் 70 விழுக்காடு இவர்கள் தான்.

 

இந்தி அல்லாத மாநிலங்களின் பாராளுமன்ற உறுப்பினர்கள் வெறும் 163 தான். அதாவது வெறும் 30 விழுக்காடு தான். இப்படியான எண்ணிக்கையில் இந்தி அல்லாத மக்கள் பாராளுமன்றத்தில் என்ன குரல் கொடுத்தாலும் அவர்கள் கோரிக்கை நிறைவேறப் போவதில்லை.மேலும் 70 விழுக்காடு இந்தி பேசும் / இந்தி ஆதரவு உறுப்பினர்கள் இருக்கும் காரணத்தால் இவர்களில் இருந்து தான் அதிக அளவில் நடுவண் அமைச்சராகவும் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்தி அல்லாத மக்களுக்கு இதனால் எந்த நன்மையையும் இல்லை. தற்போது கூட தமிழகத்தை சேர்ந்த எவரும் நடுவண் அரசின் அமைச்சராக இல்லை (இணை அமைச்சர் பதவி மட்டுமே கிடைத்துள்ளது) என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

கடந்த 60 ஆண்டுகளாக இந்தியாவை ஆளும் தேசிய கட்சிகள் இந்தி மாநிலங்களை தலைமையிடமாக கொண்டுள்ளவை . இக்கட்சிகள் யாவும் இந்தியை முன்னிலைப்படுத்தும் இந்தி தேசியக் கட்சிகளாகும். இதனால் தான் இந்தி மொழியைத் தவிர வேறு எந்த மொழிக்கும் ஆட்சி மொழி அதிகாரத்தை வழங்க முன்வருவதில்லை இந்தி அரசு. எப்போது இந்திய அரசு இந்தி அல்லாத மக்களால் வழி நடத்தப்படுகிறதோ அப்போது தான் தமிழ்நாடு உள்ளிட்ட தேசிய இனங்களின் மொழி, பண்பாடு, அரசியல், இயற்கை வளங்கள் , கல்வி முதலான உரிமைகள் நிலைநாட்டப்படும். ஆனால் தற்போதுள்ள அரசியல் அமைப்பில், பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை அடிப்படையில் அது சாத்தியம் இல்லை.

 

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி வேண்டும், ஆட்சி அதிகாரத்தில் உரிமை வேண்டும் என்று கேட்பவர்கள் முதலில் இந்திய அரசாட்சியில் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு வேண்டும், ஆட்சி உரிமை வேண்டும் என்று கோரவேண்டும். தமிழர்கள் தங்களுக்கான மொழி உரிமை, ஆட்சி உரிமை, தன்னாட்சி உரிமை வேண்டும் என்று பலமாக கோரிக்கை எழுப்ப வேண்டும். எண்ணிக்கை அடிப்படையில் அதிகாரங்கள் கொடுக்காமல் தேசிய இனங்களின் அடிப்படையில் இந்தி மாநிலங்களுக்கு நிகரான அதிகாரத்தை இந்தி அல்லாத மாநிலங்களுக்கு அரசு பகிர்ந்து அளிக்க வேண்டும். அப்போது தான் இந்தி அல்லாத மாநிலங்களின் கோரிக்கையும் உடனடியாக இந்த அரசு ஏற்கும். தற்போதைய தேவை அரசு மாற்றம் மட்டும் அல்ல அரசியல் அமைப்பில் மாற்றமும் தான். இது ஒன்று தான் இந்தியாவில் குறைந்தபட்ச நல்லாட்சியை நிலைநிறுத்தும். தேசிய இனங்களின் உரிமைகளை பாதுகாக்கும். நம்முடைய அடுத்த கட்ட அரசியல் போராட்டங்கள் இதை மையப்படுத்தியே நகர வேண்டும்.

india-hindi