Feb_04_Vavuniyaa_protest_2016யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கறுப்பு கொடி ஏற்றப்பட்டு இலங்கையின் சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.இலங்கையின் 68 ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் எதிர்ப்பு வெளியிடும் விதமாகவே கறுப்புக்கொடி ஏற்றப்பட்டுள்ளதாக பல்கழைக்கழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

தேவேளை, வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் காணாமல்போனோரின் உறவினர்கள் அந்த நாளை துக்க தினமாக அனுட்டித்திருக்கின்றனர்.

 

வாயில் கறுப்புத் துணியைக் கட்டி, கறுப்புக் கொடிகளை ஏந்தி அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டிருந்தனர்.

 

காணாமல்போனோர் தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்காதிருப்பதைக் கண்டித்தும், சிறைச்சாலைகளில் விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை சுதந்திர தினத்திலாவது விடுதலை செய்திருக்க வேண்டும் எனச் சுட்டிக்காட்டியும் காணாமல் போனோரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

 

இந்தப் போராட்டங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண சபை உறுப்பினர்கள், காணாமல் போனோரின் உறவினர்கள் என பலதரப்பட்டவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

 

அதேவேளை, வவுனியா- பூவரசங்குளம் பகுதியில் வேலங்குளம் பிரதேச மக்கள் குடியிருப்புகள், போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படாததைக் கண்டித்து வவுனியா-மன்னார் வீதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

 

கிழக்கு மாகாணத்திலும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் உட்பட தமிழ் மக்கள் கறுப்புப் பட்டி அணிந்து கவன ஈர்ப்பு போராட்டங்களை நடத்தினர்.

 

04_Feb_Batticaloa_protest_03
திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய நகரங்களில் நடைபெற்ற இந்தப் போராட்டங்களில் பெண்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டார்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

 

”உரிமைகள் மறுக்கப்படும் போது சுதந்திரத்தை எவ்வாறு உணர முடியும்? ” என்ற தொனிப்பொருளில் திருகோணமலை நகரில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தலையில் கறுப்புப் பட்டி அணிந்து அரசாங்கத்தின் மீது அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையிலான வாசக அட்டைகளையும் ஏந்தியவாறு காணப்பட்டனர்.