இனஅழிப்பு அரசு புலம்பெயர் தமிழ் அமைப்புக்களை தடை செய்த வேகத்தில் அந்த அமைப்புக்களோடு “தொடர்புபட்டவர்கள்” என்று ஒரு தடைப்பட்டியலை வெளியிட்டிருக்கிறது.

ஒரு கல்லில் பல மாங்காய் அடிக்கும் சிங்களத்தின் நகர்வுகளில் இதுவும் ஒன்று.

அனைத்துலக மட்டத்தில் இதன் விளைவாக சிங்கள அரசு எதிர்பார்க்கும் அல்லது எதிர்கொள்ள இருக்கும் விளைவுகளை பின்பொரு தருணத்தில் பார்ப்போம். தமிழ்ச்சூலுக்குள் சிங்களம் எதிர்பார்க்கும் விளைவுகளை மட்டும் தற்போது பார்ப்போம்.

ஆனால் சிங்களம் நினைப்பது எதுவுமே நடக்கப்போவதில்லை என்பது வேறுகதை.

ஏனென்றால் இதை எல்லாம் கடந்து தமிழர்கள் வந்து நீண்ட நாட்களாயிற்று.

இந்த பட்டியல் இடப்பட்டிருக்கிற முறை ரொம்பவும் சுவாரசியமானது.

01. பட்டியலில் எமலோகத்திற்கு டிக்கெட் எடுத்தவர்களும் அடக்கம்.

02. மே 18 பின்னடைவுடன் அல்லது அதன் பின்னரான குழப்பங்களின் காரணமாக போராட்டத்தை விட்டு மட்டுமல்ல தமது அன்றாட பொதுவாழ்விலிருந்தே ஒதுங்கியவர்களும் அடக்கம்.

03. 15 அமைப்புக்களுடன் “தொடர்புபட்டவர்கள் என்று தடைப்பட்டியலை அறிவித்து விட்டு அதன் தலைமப்பொறுப்பிலிருக்கும் பலரது பெயரை காணவில்லை. ஆனால் அந்த அமைப்பின் கடைநிலை ஊழியர்களின் பெயர் பட்டியலில் இருக்கிறது.

04. இது எல்லாவற்றையும் விட கொடுமை போராட்டத்திற்காக ஒரு இருமல் தும்மலை கூட விடாத அப்பாவி தமிழர்கள் சிலரின் பெயரும் பட்டியலில் இருக்கிறது.

05. இந்த 15 அமைப்புக்களுடனும் தொடர்பு படாத அல்லது தம்மை அந்த அமைப்புக்களின் தம்மை தொடர்பு படுத்தாமல் மே 18 இற்கு பிறகு மிகவும் வீச்சாக காத்திரமாக இயங்கும் பலரின் பெயரை பட்டியலில் காணவில்லை.

sri-lanka-gen
இன்னும் இப்படியான பல கூத்துக்களை நாம் பட்டியலிட முடியும்.

ஆனால் பல நுணுக்கமான அரசியல் பின்புலம் இதன் பட்டியலிடலில் இருக்கிறது என்பது மட்டும் உண்மை.

இந்த பட்டியலின் முதன்மை நோக்கங்களாக பின்வருவனவற்றை பட்டியிடலாம்.

01. வெளிப்படையான அச்சுறுத்தல். சிறீலங்கா அரசின் இனஅழிப்புக்கு எதிராக இயங்கும் ஒவ்வொரு தமிழனுக்கு எதிராகவும் விடப்பட்ட பகிரங்க எச்சரிக்கையாக இதை கொள்ளலாம்.

02. மே 18 இற்கு பிறகு பல அமைப்புக்களாக பிளவுண்டிருந்த தமிழர்கள் தற்போது செற்பாட்டால் முரண்பாட்டாலும் நோக்கத்தில் ஒன்றுபடத்தொடங்கியிருக்கும் சூழலில் அதை உடைக்கும் முயற்சியாக இதை கொள்ளலாம்.

மே 18 இற்கு பிறகு போராட எத்தனித்தவர்களின் அடிப்படை பிரச்சினையே யாரை நம்புவது என்பதுதான். அந்தளவிற்கு தமிழர்களும் எதிரிகளால் உள்வாங்கப்பட்டிருந்ததுதான் அதற்கான காரணம். அந்த நிலைமை மாறிவரும் கள யதார்த்தத்தை உணர்ந்து அதை உடைக்கவே இந்த பட்டியல்.

அதாவது உதாரணத்திற்கு தடை செய்யபப்டடிருக்கும் ஒரு அமைப்பான நாடு கடந்த அரசை எடுத்து கொள்வோம். உலகளாவிய ரீதியில் அதனோடு தொடர்புபட்டவர்கள் என்று வெளிப்படையாக அறிவித்தவர்கள், தேர்தலில் நின்றவர்கள், தற்போது பதவி வகிப்பவர்கள் என்று ஒரு பட்டியலை தயார் செய்தால் (இரகசியமாக அதன் பினபுத்தில் உள்ளவர்களை விடுவோம். அப்படியான பின்புல ஆலோசனைக் குழுவில் இருப்பவர்கள் பெயர்கள் பட்டியலில் உள்ளமாதிரியும் தெரியவில்லை) அதுவே 500 ஐ தாண்டும். ஆனால் மேல்மட்டத்தில் உள்ள ஒரு சிலரையும் அடிமட்ட தொண்டர்கள் பலரையு ம் இணைத்து நடுவில் உள்ள ஒருவரது பெயரையும் பட்டியலிடவில்லை. இது நாடு கடந்த அரசிற்கு மட்டுமல்ல ஏனைய பட்டியலிடப்பட்ட 15 அமைப்புக்களுக்கும் கூட பொருந்தும்.

இது பட்டியிலடப்டாமல் போன நபர்களை சொந்த அமைப்புக்குள்ளாக மட்டமல்ல வெளி அமைப்புக்குள்ளாலும் சந்தேக கண் கொண்டு பார்க்கும் முயற்சியாக இருக்கிறது.

ஏனென்றால் இந்த பட்டியலில் இல்லாமல் போன பலர் இந்த பட்டியலில் உள்ளவர்களை விட வீச்சாகவும் மிகத் தீவிரமாகவும் இயங்கும் பல்துறை சார்ந்தவர்கள் இருக்கிறார்கள். அவர்களது செயற்பாடுகளை புலம்பெயர் அமைப்புக்களுக்குள் மட்டுமல்ல மக்கள் தொகுதிக்குள்ளும் ஒரு சந்தேகத்திற்குரியதாக மாற்றும் தந்திரமாகவும் இந்த “பட்டியலை” கொள்ளலாம். இப்படி நிறைய சூழ்ச்சி இதன் பட்டியலிடலில் இருக்கிறது.

அத்தோடு போராட்டத்தோடு பெருமளவு தெடர்புபடாத சாதராண மக்கள் சிலரை பட்டியலில் இணைத்ததனூடாக சாதாரண புலம்பெயர் தமிழ் மக்களுக்கு மிகப் பெரிய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

போராட்டத்தோடு எந்த வகையில்தொடர்பு பட்டாலும் இலங்கைக்கு வர முடியாது என்பதுடன் தாயக சொத்துக்களும் முடக்கப்படும் என்ற எச்சரிக்கை இதன் வடிவில் விடப்பட்டுள்ளது. இதனூடாக தாயகத்தில் மக்களை போராட்டத்திலிருந்து அன்னியப்படுத்த முயற்சித்ததுபோல் புலத்திலும் மக்களை அன்னியப்படுத்த முற்படுகிறது இன அழிப்பு அரசு. இந்த பட்டியலிடலில் உள்ள முதன்மையான ஆபத்தாக நாம் இதைத்தான் கருதுகிறோம்.

ஏனென்றால் இந்த அமைப்புக்களின் தடையின் பின்னணியில் மட்டுமல்ல தடைப்பட்டியலின் பின்னணியிலும் மக்களை போராட்டத்திலிருந்து அன்னியப்படுத்தும் தந்திரமும் நாம் மீள ஒருங்கிணைவதை தடுக்கும் சூழச்சியுமே முதன்மையாக உள்ளது.

எனவே நாம் தெளிவாக இருப்போம். இன்னும் எத்தனை தடைப்பட்டியலை சிங்களம் அறிவித்தாலும் அதன் பின்னுள்ள நுட்பமான அரசியலை இனங்கண்டு எமது வேறுபாடுகளை களைந்து எம்மை ஒருங்கிணைத்து விடுதலையை வென்றெடுப்போம்.

ஈழம்ஈநியூஸ்.