கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் உறுப்பினரான சுமந்திரன் வருகின்ற 7ம் திகதி ஜெனிவா செல்வதாகவும் நடைபெற்று வரும் விசாரணையையும் அதன் பின்னரான அறிக்கை வெளியிடுவதையும ஒரு வருடத்துக்காவது இடைநிறுத்துமாறு ஐ.நா. மனித உரிமைப் பேராயத்தைக் கேட்கவுள்ளதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது.

வேறு வழிகளில் இது குறித்து நாம் விசாரித்தபோது மேற்படி திகதிகளில் சுமந்திரன் ஜெனிவா செல்வது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

suma
இந்த பயணத்தின் பின்னணியில் சம்பந்தரே உள்ளதாகத் தெரியவருகிறது. ஏனைய கூட்டமைப்பு உறுப்பினர்கள் யாருக்கும் தெரியாமல் இந்த நகர்வுகள் முன்னெடுக்கப்படுவதாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தெரிய வருகிறது.

இது உண்மையாயின் இது மிகப்பெரிய வரலாற்றுத்துரோகம் மட்டுமல்ல தமிழ்த்தேச அரசியலில் மிகப் பெரிய அரசியல் தற்கொலையாகவும் இருக்கும்.

ஏற்கனவே மைத்ரி அரசுக்கு கூட்டமைப்பு கொடுத்த ஆதரவினூடாக நடந்த இனஅழிப்பிற்கான நீதி மடைமாற்றப்பட்டு வேறு திசை நோக்கி நகரத்தொடங்கிவிட்ட சூழலில் இது முற்றாகவே எமக்கான நீதியை குழிதொண்டிப் புதைக்கும் முயற்சியாகும் .

இதுவரை அவல,அடிபணிவு, ஒப்படைவு, சரணாகதி அரசியலை செய்து வந்த கூட்டமைப்பு தற்போது ‘அழிவு’ அரசியலை கையெலடுத்திருப்பதற்கு இது ஒரு சோற்றுப் பதம்.

மகிந்த அரசை ஒரு அனைத்துலக விசாரணையினூடாகத் தண்டிப்பதனூடாக தமக்கான நீதியைப் பெறலாம் என்ற நோக்கத்துடனேயே மக்கள் அதற்கு தடையாக இருக்கும் மகிந்தவின் ராஜீய பதவியை அகற்ற கூட்டமைப்பில் நம்பிக்கை வைத்துஒன்று திரண்டு மைத்ரிக்கு வாக்களித்தார்கள்.

ஆனால் இன்று மக்களை மீண்டும் ஏமாற்றத்தலைப்பட்டுள்ளது சம்பந்தர் அணி. காலம்காலமாக மக்களுக்கு எதிரான அரசியலை செய்து வரும் தமிழரசுக்கட்சி எப்போது மக்களுக்கான அரசியலை செய்யப்போகிறது?

“13 பிளசுக்கு மேல் எந்த தீர்வையும் முன்வைக்க வேண்டாம்” என்று அண்மையில் சிறீலங்கா வெளியுறவுத்துறை அமைச்சருக்கு இந்திய அதிகாரவர்க்கம் கூட்டமைப்பின் இணக்கத்துடன் ஆணை வழங்கியதாக செய்திகள் உலா வரும் சூழலில் கூட்டமைப்பின் இந்த நகர்வு அதை உறுதிப்படுத்துவதாகவே அமைகிறது.

அன்னிய நிகழ்சசி நிரலில் இயங்கும் சம்பந்தரின் இந்த நகர்வுககு சக கூட்டமைப்பு உறுப்பினர்கள் எந்த வகையிலும் உறுதுணையாக இருக்கக்கூடாது.

மீறி சம்பந்தர் அணி ஜெனிவா விசாரணைகளில் அன்னிய – சிங்கள நிகழ்ச்சி நிரலுககு ஏதுவாக ஏதேனும் சமரசங்களை செய்யப் புகுந்தால் அது பாரிய விளைவகளை ஏற்படுத்தும்.

கூட்டமைப்பு இரண்டாக பிளவுபடவும் வாய்ப்பிருக்கிறது. இது தற்போதைய அரசியல் சூழமைவில் தமிழர் நலன் சார்ந்து நல்ல அறிகுறி அல்ல..

எனவே கூட்டமைப்பு தலைமையும் கூட்டமைப்பு உறுப்பினர்களும் சிந்தித்து செயற்பட வேண்டும்.

ஈழம்ஈநியூஸ்.