இனக்கொலையாளி மகிந்த ராஜபக்ச டெல்லி வருவது உறுதியாகிவிட்டது. வரட்டும். ஒரு பிரச்சினையுமில்லை.

அரசியலில் எதையும் ஒற்றையாக அணுகக்கூடாது.

வெளித்தோற்றத்திற்கு தோல்வியாக, பின்னடைவாக தெரியும் ஒரு விடயம் நாம் எதிர்கொள்வதைப் பொறுத்து காலப்போக்கில் இராஜதந்திர வெற்றியாக மாறும்.

mahi
எனவே எதுவும் நம் கையில்தான் உள்ளது.

“முள்ளிவாய்க்கால்” என்பதையும் இப்படியான ஒரு கன பரிமாண அம்சத்தில்தான் நாம் அணுகுகிறோம்.

தற்போதைய மகிந்தவின் டெல்லி வருகையும் நாம் எதிர்கொள்வதை பொறுத்து இராஜதந்திர வெற்றிகளை எமக்கு தரும்.

தமிழர் தரப்பு புதிதாக பதவியேற்கவிருக்கும் மத்திய அரசிற்கு “ஈழம்” தொடர்பாக ஒரு காத்திரமான செய்தியை சொல்ல இந்த “வருகை” பயன்பட்டிருக்கிறது.

ஒட்டுமொத்த தமிழ்ச்சக்திகளும் வேறுபாடில்லாமல் இணைந்து இந்த செய்தியை மோடி அரசிற்கு சொல்லியிருக்கிறார்கள்

தமிழக மட்டத்தில் தமிழக அரசு மட்டுமல்ல பாஜக வின் கூட்டணி கட்சிகளான மதிமுக, பாமக, தேதிமுக உட்பட திமுக, மற்றும் விடுதலை சிறுத்தைகளும் தமது எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார்கள். அத்தோடு மாணவர்களும் களத்தில் நிற்கிறார்கள்.

தாயகத்தில் கூட்டமைப்பு கூட விக்கினேஸ்வரன் மகிந்தவின் அழைப்பை ஏற்காதது உட்பட பல அழுத்தமான செய்திகளை மோடி அரசிற்கு அனுப்பியிருக்கிறது.

மோடிஅரசிற்கு மிகவும் இக்கட்டான நிலை. இவ்வளவு எதிர்ப்பு வரும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

இது சார்க் நாடுகளுக்குரிய ஒரு நடைமுறை அழைப்புத்தான்..

சிங்கள இனஅழிப்பு அரசு அதை தமக்கு சாதகமாக்கி புதிய மத்திய அரசுடன் உறவை பேண முயல்கிறது. ஆனால் ஒட்டுமொத்த தமிழ்ச்சக்திகளும் ஒன்றுதிரண்டு தமது எதிர்ப்பை பதிவு செய்து அதை கேள்விக்குள்ளாக்கியிருக்கிறார்கள்.

ஒரு புதிய அரசாக எதிர்ப்பை பார்த்துவிட்டு தாமே விடுத்த அழைப்பை மீளெடுப்பதில் நிறைய இராஜதந்திர சிக்கல்கள் இருக்கின்றன. அது பிராந்திய மட்டத்தில் வேறொரு செய்தியை எழுதிவிடும் அபாயம் உள்ளதால் பாஜக அரசிற்கு திரிசங்கு நிலை.

ஆனால் எதிர்காலத்தில் தமது இலங்கை தொடர்பான உறவை எப்படி கையாள வேண்டும் என்ற புரிதலை ஒன்றிணைந்த தமிழ்ச்சக்திகளின் போராட்டம் மோடி அரசிற்கு உணர்த்தியிருக்கிறது.

கூடவே இந்த எதிர்ப்பு போராட்டங்களை காரணம் காட்டியே சிங்களத்தை தனது பிடிக்குள் கொண்டுவரும் ஒரு மூலோபாயம் மோடி அரசிற்கு கிடைத்திருக்கிறது.

நமது எதிர்ப்பை அடுத்துத்தான் உலக மன்னிப்பு சபை உட்பட பல மனித உரிமை அமைப்புக்கள் “மகிந்தவை ஐநா விசாரணை பொறிமுறைக்கு இணங்க செய்ய வேண்டும்” என்று மோடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளன.

இவை இனக்கொலையாளியை பிராந்திய மட்டத்தில் இறுக்கும் கடிவாளங்கள்.

எனவே எந்தவொரு போராட்டத்தையும் வீண் என்று கருதாதீர்கள். இனக்கொலையாளி எமது போராட்டத்தையும் மீறி வருகிறானே! என்று கவலை கொள்ளாதீர்கள். மோடி அரசின் அழைப்பும் இனக்கொலையாளியின் வருகையும் எமக்கே நிறைய இராஜதந்திர வெற்றிகளையும் இராஜதந்திர செய்திகளை பிராந்திய மட்டத்தில் எழுதவும் உதவியுள்ளது.

உடனடியாகவே சுதாரித்து களம் புகுந்த எமக்கு கிடைத்த வெற்றி இது. ஆகவே சலிப்பு வேண்டாம். போராடினால்தான் வாழ்வு என்பதை உணர்வோம்..

எனவே இனக்கொலையாளி வந்து திரும்பி செல்லும்வரை நமது எதிர்ப்பை தொடர்ந்து பதிவு செய்வோம்.

ஈழம்ஈநியூஸ்.