ele-jaf-2வடமாகாணசபை தேர்தல் சிறீலங்கா அரசின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக நடைபெற்று முடிந்துள்ளது. சிறீலங்கா அரசின் ஆயுதக்குழுக்களையும், சிறீலங்கா அரசையும் புறம்தள்ளிய தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற நாமத்தின் கீழ் போட்டியிட்ட தமிழர் தரப்பை வெற்றியடையச் செய்துள்ளனர்.

வடமாகாணசபைத் தேர்தலின் முடிவு என்பது சிறீலங்காவில் முனைவாக்கம் வலுவடைந்துவரும் இரு இனங்களின் அளவை காட்டிநிற்கின்றது.

நல்லிணக்கம், ஐக்கிய இலங்கை, இனங்களுக்கு இடையிலான இணக்கப்பாடுகள் என தமது ஏமாற்றும் உத்திகளை தமிழ் மக்கள் மீது பிரயோகிக்க முயலும் மேற்குலகத்திற்கும் இந்தியாவுக்கும் இது ஒரு காத்திரமான செய்தியாகும்.

சிறீலங்காவில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகள் மற்றும் போரில் கொல்லப்பட்ட தமிழ் மக்களுக்கான நீதி என்பன கிடைக்கும் வரையிலும், தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் அவர்களிடம் வழங்கப்படும்வரையிலும் இரு இனங்களுக்கு இடையில் காணப்படும் முனைவாக்கம் கூர்மை அடையும் என்பதையே இந்த தேர்தலும் இனங்காட்டியுள்ளது.

1980 களில் காணப்பட்ட உலக வல்லரசுகளின் பூகோள அரசியல் நிலைப்பாடுகளை சமநிலைப்படுத்தும் முகமாக அன்று இந்திய அரசினால் உருவாக்கப்பட்டதே இந்திய – இலங்கை உடன்படிக்கை. சிறீலங்கா மீது தனது அழுத்தங்களை பதிப்பதற்காக கொண்டுவரப்பட்டதே 13 ஆவது திருத்தச்சட்டமும், அதனை ஒட்டிய மாகாணசபைகளும்.

ஆனால் அது அன்றே தமிழ் மக்களால் நிரகரிக்கப்பட்டதொன்று, அதன் மூலம் எட்டப்படும் அனைத்துலக இரஜதந்திரமும் தற்போதைய உலக ஒழுங்கில் இந்தியாவுக்கு பயனற்றது. எனினும் இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கையில் உள்ள வரட்சி, தமிழ் மக்களுக்கு எதிராக இந்தியாவில் செயற்படும் இனங்களை சேர்ந்த அதிகாரிகளின் தமிழருக்கு எதிரான போக்கு என்பன தற்போதும் 13 ஆவது திருத்தத்தை பின்பற்றிப் பிடிக்க இந்தியாவை தூண்டுகின்றது.

இந்தியாவின் ஊழல் நிறைந்த அரசியல்வாதிகளின் ஊடாக இந்தியாவின் வெளிவிவகார கொள்கையை தனக்கு சாதகமாக கொண்டுவந்து ஆசிய பிராந்தியத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் மேற்குலகமும், இந்தியாவின் சிறீலங்கா தொடர்பான அணுகுமுறைகளை எதிர்ப்பதில்லை. அவர்கள் தற்போது இந்தியாவை எதிர்க்கப்போவதுமில்லை.

எனினும் இந்த சந்தர்ப்பத்தை தனக்கு சதகமாக பயன்படுத்திவரும் சிறீலங்கா அரசு தொடர்ச்சியான ஏமாற்றுத்தனங்கள் ஊடாக தனது இனஅடக்கு முறைகளை தொடர்ந்து வருகின்றது. அதற்கு ஏற்ப தமிழ் அரசியல்வாதிகளையும் அது பயன்படுத்த தவறுவதில்லை.

1987 களில் சிறீலங்கா அரச தலைவர் ஜே.ஆர் ஜெயவர்த்தனாவின் கைகளை முறுக்கி இந்தியா கொண்டுவந்த மாகாணசபையை அதன் பின்னர் வந்த பிரமதாசா தவுடுபொடியாக்கியிருந்தார்.

அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த சிறீலங்காவின் அரச தலைவர் சந்திரிக்க பண்டாராநாயக்கா 13 ஆவது திருத்தச்சட்டத்தைவிட அதிகமான அதிகாரங்களை கொண்ட தீர்வுப்பொதி ஒன்றை வழங்கப்போவதாக கூறி தமிழ் கட்சிகளை கொண்டு தனது தேர்தலுக்கு ஆதரவு தேடியிருந்தார். தமிழர் விடுதலைக்கூட்டணியின் அன்றைய முக்கிய உறுப்பினர் காலம்சென்ற நீலன் திருச்செல்வமும் சந்திரிக்காவை முழுமையாக ஆதரித்து, அவருக்கு அனைத்துலக சமூகத்தின் ஆதரவுகளையும் பெற்றுக்கொடுத்திருந்தார்.

அதனுடன் அவர் நின்றுவிடவில்லை தனது பிரதம சீடரான லக்ஸ்மன் கதிர்காமரையும் சந்திரிக்காவின் வெளிவிவகார அமைச்சராக நியமித்து, அவருக்கு அனைத்துலக சமூகத்தின் தொடர் ஆதரவுகளை பெற்றுக்கொடுத்து தமிழ் மக்களை பயங்கரவாதிகளாக உலகில் சித்தரித்திருந்தார்.

ஏனைய தமிழ் கட்சிகளும் அதரவுகளை வழங்கியிருந்தனர். தமிழருக்கு சந்திரிக்கா வழங்கும் தீர்வு தொடர்பில் பேசி தமிழ் மக்களை ஏமாற்றும் நடவடிக்கைக்கு சந்திரிக்கா டக்ளஸ் தேவனந்தாவையும், சித்தார்த்தனையும் 1995 – 1996 காலப்பகுதிகளில் நியமித்திருந்தார்.

சந்திரிக்கா அமைக்கும் இடைக்கால அரசில் தமக்கு பங்கு கிடைக்கும் என காத்திருந்த இவர்களுக்கு கிடைத்தது. உண்ண உணவும், வசதியான வாழ்வும் தான். சந்திரிக்காவின் 10 வருட ஆட்சிக் காலத்தில் இவர்கள் அதிகாரப் பகிர்வு என்ற வார்த்தையை மட்டும் தான் கேட்டனர். அதற்கு மேல் ஒன்றுமில்லை.

சந்திரிக்கா அதிகாரங்களை வழங்கிவிடுவார் என அவரின் யாழ்நகர் மீதான படை நடவடிக்கைக்கு 1995 களில் ஆதரவு வழங்கிய அனைத்துலக சமூகம், பின்னர் 1999 களில் ஓயாதஅலைகள் ஓங்கி அடித்தபோது ஒதுங்கியே இருந்தனர்.
safe_imageCACQMKSX
மாகாணசபைகளுக்கு அதிகாரங்களை வழங்குவதாக தெரிவித்த சந்திரிக்கா, அதன் சொற்ப அதிகாரங்களையும் சிறீலங்கா அரச தலைவரிடம் கொண்டுவருவதற்கான பணிகளையே மேற்கொண்டிருந்தார். அதற்கு ஏற்ப வடமாகாணசபைக்கான இணைப்பு குழுவை அமைத்த அவர் அதற்கு தலைவராக முஸ்லீம் காங்கிரசின் தலைவராக இருந்த காலஞ்சென்ற அமைச்சர் எம் எச் எம் அஷ்ரப்பை நியமித்திருந்தார்.

சந்திரிக்காவிடம் இருந்து பின்னர் மகிந்த ராஜபக்சாவிடம் கைமாறிய சிறீலங்கா அரசுகளின் ஏமாற்றும் உத்திகள் தற்போது நடைபெற்று முடிந்த மாகாணசபை தேர்தலிலும் எதிரொலித்துள்ளது.

சிறீலங்கா அரசின் போக்குக்கு எதிராக முழக்கமிட்டு, வடக்கில் இருந்து இராணுவ ஆட்சியை அகற்றுவதாக தமிழ் மக்களுக்கு உறுதி அளித்தவர்களை தமிழ் மக்கள் தேர்தலில் வெற்றியீட்டவைத்தனர். ஆனால் குடும்பசகிதமாக சென்று சிறீலங்கா அரச தலைவரின் கரங்களை பற்றி தமது பதவிகளை பெற்றுக்கொண்ட வடமாகாணசபை முதலமைச்சரின் நடவடிக்கைகள் தமிழ் மக்களை அதிக சினங்கொள்ளவைத்துள்ளது.

இந்த நடவடிக்கைக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்ட தமிழ் மக்கள், வடமாகாணசபை முதலமைச்சர், தமிழத் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோரின் கொடும்பாவிகளை முல்லைத்தீவில் தீயிட்டு எரித்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாகாணசபைக்கு தெரிவுசெய்யப்பட்ட பல உறுப்பினர்களும் இந்த பதவியேற்பு விழாவை புறக்கணித்திருந்தனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேர்தலில் போட்டியிட்டபோதே அதன் உறுப்பினர்கள் தொடர்பில் பாரிய கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டிருந்தன. எனினும் இரு காரணிகளை முன்வைத்தே இந்த தேர்தலை தமிழ் சமூகம் ஆதரித்திருந்தது.

ஓன்று, சிறீலங்கா அரசுக்கு தோல்வியை கொடுத்து தமிழ்த் தேசியத்தை காப்பாற்றும் உத்தி.

இரண்டாவது, தேர்தலின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழங்கிய உறுதிமொழிகளை அவர்கள் நிறைவேற்றுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவதற்கான உத்தி. அதன் மூலம் தான் தமிழ் அரசியல் தலைவர்களின் உண்மையான முகத்தையும், மாகாணசபையின் அதிகாரமற்ற தன்மையையும் உலகத்திற்கும், தமிழ் சமூகத்திற்கும் காண்பிக்கமுடியும்.

வேல்ஸ் இல் இருந்து அருஷ்
நம்தேசம்
ஒக்டோபர் மாத இதழ்