இலங்கையின் மூலம் தமிழர்களுக்கு எதிரான தனது போரை நிகழ்த்திய இந்தியா தற்போது தனது இனப்படுகொலையை மறைக்கும் முதல் கட்ட முயற்சியாக, இலங்கையின் ராணுவ அதிகாரிகளை காப்பாற்றும் வேளையில் இறங்கி உள்ளது.

shavendra

 

இனப்படுகொலையின் முக்கிய அங்கமாக, மேற்கில் மன்னாரில் தொடங்கி கிழக்கு நோக்கி பூநகரியை அடைந்து, 2009 மே மாதத்தில் முள்ளிவாய்க்கால் வரை நகர்ந்து படுகொலைகளை கட்டற்று நிகழ்த்தியது சவேந்திர சில்வாவின் 58 ஆவது படைப்பிரிவு.

 

குறிப்பாக இறுதி நாட்களில் (மே 16-18) வரையான நாட்களில் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கில் அப்பாவி பொது மக்களை கொன்று குவித்தது சவேந்திர சில்வாவின் படைப்பிரிவு.

 

புலிகளின் அரசியல் தலைவர்கள் (அரசியல் பிரிவு தலைவர்-நடேசன், அமைதி செயலக தலைவர் -புலிதேவன், காவல் தலைவர் – ரமேஷ்) சரணடைய முன்வந்த போது ஒரு மிகப்பெரிய பன்னாட்டு சதிவலை விரிக்கப்பட்டது.

 

அதில் சிக்கி அவர்கள் சரணடைய நேர்ந்த போது, ஆயுதங்கள் ஏதுமற்று வெறும் கையாக வெள்ளை கோடி ஏந்தி வந்த தமிழின தலைவர்களை சவேந்திர செல்வாவின் 58 ஆவது படைப்பிரிவு சித்திரவதை செய்து கொடூரமாக கொலை செய்தது.

 

இது தொடர்பான ஆதாரங்களை அடிப்படையாக கொண்டு 2012 பிப்ரவரி மாதம் ஐநாவின் அமைதி நடவடிக்கைகளுக்கான சிறப்பு ஆலோசனை குழுவில் இருந்து சவேந்திர சில்வா நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

ஆனால் ஐநாவுக்கான நிரந்தர துணை தூதராக நியமித்து இலங்கை இன்றளவும் இந்த குற்றவாளியை காப்பாற்றி வருகிறது.

 

தற்போதைய சிக்கல்:

 

தற்போது உலக அளவில் எழுந்துள்ள மனித உரிமை குற்றசாட்டுகள், அது தொடர்பான விசாரணைகள் ஆகியவற்றில் இருந்து சவேந்திர சில்வாவை காப்பாற்ற, ராஜரீக பாதுகாப்பு வழங்க சவேந்திர சில்வாவை இலங்கை ராணுவத்தின் அதிஉயர் பதவிகளில் இருத்த வேண்டிய தேவை இலங்கைக்கு உள்ளது.

 

இதற்கு உதவும் வகையில் இந்தியா தனது பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ”தேசிய பாதுகாப்பு கல்லூரியின்” (National Defence College) M.Phil (Defence and Strategic Studies) பட்ட படிப்பில் சவேந்திர சில்வாவை சேர்த்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரியில் தொடங்கி டிசம்பரில் முடியும் இந்த படிப்பில் பட்டம் பெறுவது சவேந்திர சில்வாவை பதவி உயர்த்த ஒரு முக்கிய தகுதியாக இருக்கும்.

 

அவ்வாறு சவேந்திர சில்வா பதவி உயர்வு பெற்றால் 58 ஆவது டிவிஷன் மட்டும் அல்ல, மொத்த இலங்கை ராணுவமும் பலகட்ட பன்னாட்டு விசாரணைகளில் இருந்து தப்பித்துக்கொள்ளும் ஆபத்து உள்ளது. எனவே இதை தடுக்கும் பொருட்டும், இந்த பாதக செயலில் ஈடுபடும் இந்திய பாஜக அரசை கண்டித்தும் எமது ”உலகத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்” சார்பாக ஆர்ப்பாட்டம் செய்வதாக முடிவெடுத்து, நேற்று 150மார்ச்-2015, ஞாயிறு மாலை 4:00 மணிக்கு ஆர்பாட்டம் தொடங்கியது.

 

இந்நிகழ்வில் 100க்கும் மேற்பட்ட தமிழீழ, தமிழ் தேசிய ஆதரவாளர்கள் பல்வேறு இடங்களில் இருந்து வந்து ஆதரவு தெரிவித்தனர். குறிப்பாக

 

– கே.எம்.ஷெரீப் (தமிழக மக்கள் ஜனநாயக கட்சி),

 

– இயக்குனர் கௌதமன்

 

– TSS மணி (ஊடகவியலாளர்),

 

– குமார் வாண்டையார் (தமிழ் சமூக ஊடக பேரவை)

 

– ஏர்போர்ட் மூர்த்தி (பறையர் பேரவை & புரட்சி தமிழகம் – தலைவர்),

 

– செல்வா பாண்டியர் (தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்)

 

ஆகியோர் தங்களது ஆதரவாளர்களுடன் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர். பேச்சாளர்களின் முக்கியமான கருத்துகள்:

 

திரு. ஷெரீப் – ”இனப்படுகொலையில் காங்கிரசை விட மோசமாக பாஜக அரசு போய்க்கொண்டிருக்கிறது.”

 

TSS மணி – ”இனப்படுகொலையில் சிறந்த இந்தியா மற்றொரு இனப்படுகொலை நாட்டுக்கு பயிற்சி கொடுக்கிறது. காஷ்மீரில், வடகிழக்கில், பஞ்சாபில் என்று இந்தியா முழுவதும் இனப்படுகொலைகள் பல புரிந்த இந்திய ராணுவம் இலங்கையிலும் சென்று IPKF மூலம் இனப்படுகொலை செய்து இலங்கைக்கே உதாரணமாக இருக்கிறது”

 

ஏர்போர்ட் மூர்த்தி – ”இந்த பட்டத்தை எப்பாடு பட்டேனும் தடுத்து நிறுத்துவோம். அடித்தட்டு மக்களுக்கான தமிழ் தேசிய அரசியலின் ஒரு அங்கமே ஈழ விடுதலை”

 

செல்வா பாண்டியர் – ”தமிழ்நாட்டை தமிழர்கள் ஆள இயலாத நிலைதான் இது போன்ற அனைத்து சிக்கல்களுக்குமே அடிப்படை காரணம்”

 

இயக்குனர் கௌதமன் – ”நெஞ்சை நிமிர்த்தி சிங்கள பிக்குகள் அமர்ந்திருக்க அவர்கள் முன்பு தரையை தொடும் அளவு குனிந்து வளைந்து மோடி போட்ட கும்பிடு இந்த நாட்டில் இதுவரை நான் கண்டிராதது. 4 லட்சம் தமிழர்களை மட்டும் கொன்றீர்கள் மீதமுள்ள பத்து கோடி தமிழர்களையும் கொன்றுவிடுங்கள் என்று கோரிக்கை வைக்கிறாரா? இந்த பட்டமளிப்பு தடுக்கப்பட வேண்டும், அப்படி துரதிர்ஷ்டவசமாக நடந்தால் டெல்லிக்கு தனி ஆளாக சென்றேனும் அந்த விழா மேடையின் முன்பு நான் போராடுவேன்”

 

நமது அமைப்பின் நிறைவுரையாக கீழ்கண்ட ஐந்து கோரிக்கைகளும், ஒரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டன:

 

கோரிக்கைகள்:

 

1. சவேந்திர சில்வாவிற்கு வழங்கும் பயிற்சியை உடனே நிறுத்து. இனப்படுகொலையாளியை இந்தியாவை விட்டு உடனே விரட்டு

 

2. ஈழ விடுதலைக்கான பொது வாக்கெடுப்பை ஐநா நடத்த இந்திய பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்று

 

3. இனப்படுகொலை இலங்கையுடனான ராணுவ-பொருளாதார உறவுகளை துண்டித்திடு

 

4. ஐநா பதவியில் இருந்து சில்வாவை நீக்கி, விசாரணை நடத்த பரிந்துரை செய்

 

5. இனப்படுகொலையில் பங்காற்றிய சிவசங்கர மேனன், நாராயணன் ஆகியோர் மீது விசாரணை நடத்து

 

தீர்மானம்:

 

”சவேந்திர சில்வாவின் பட்டயத்தை தடுத்து நிறுத்த அனைத்து தமிழ்தேசிய இயக்கங்களையும் ஒன்றிணைத்து போராடுவது. இதில் பங்குதாரராக உள்ள மத்திய அரசு, அதன் வெளியுறவு துறையின் உயர் அதிகாரிகள், பாடத்தை அங்கீகரிக்கும் சென்னை பல்கலைக்கழகம் ஆகியோருக்கு நெருக்கடி ஏற்படுத்தி சவேந்திர சில்வாவை வெளியேற்றுவது.”