வெள்ளிக்கிழமை (8-8-2014 ) மலை 4 மணியளவில் சென்னை பாரி முனை ஆட்சியாளர் அலுவலகம் முன்பு, காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் இனப்படுகொலைப் போரைக் கண்டித்து, பல்வேறு இஸ்லாமிய அமைப்புக்கள், தமிழ்தேசிய இயக்கங்கள் மற்றும் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Isreal-chen-4
பாலஸ்தீனத்தின் காஸா மீது கடந்த ஒரு மாதத்திருக்கும் மேலாக இஸ்ரேல் கொடூர தாக்குதலை நடத்தி வருகிறது. பாலஸ்தீனியர்கள் மீது நடத்தப்பட்டுவரும் இனப்படுகொலையை உடனடியாக தடுத்துநிறுத்தக்கோரியும், பாலஸ்தீன நாட்டை அங்கிகரிக்கும் தீர்மானத்தை ஐநா அவையில் கொண்டுவரக் கோரியும் இந்தப் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் SDPI, மே பதினேழு இயக்கம், நாம் தமிழர் கட்சி , INTJ, பாலச்சந்திரன் மாணவர் இயக்கம் உட்பட 23 கட்சிகள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர்.

பாலஸ்தீன இனப்படுகொலைக்கு துணை செய்யும் அமேரிக்கா மற்றும் இஸ்ரேலின் நிறுவனங்களின் பொருட்களைப் புறக்கணிக்கும் நோக்கில் பெப்சி , கொக்கோகோலா, கே.ஏப்.சி, மெக் டொனால்டு போன்ற நிறுவனங்களின் பொருட்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டது. இது அவர்களின் பொருளாதாரம் இங்கு தமிழர்களால் முடக்கப்படும் என்பதற்கான எச்சரிக்கை என்பதாக தோழர்கள் தெரிவித்தனர்

isreal-chennna-1
இஸ்லாமிய அடிப்படைவாதியும், அமெரிக்காவால் வளர்க்கப்பட்ட அல் கொய்தாவின் ஒரு பிரிவான ஐசிஸ், சிரியா மற்றும் ஈராக் குர்திஸ்தான் பகுதியில் இருந்து ஏசிடி இனக்குழுவை இனப்படுகொலை, இனசுத்திகரிப்பு நோக்கில் வெளியேற்றும் செயலை கண்டித்தும் ஆர்பாட்டம் நடைபெற்றது

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஈழத்தில் ஒன்னரை லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்ட போது அமைதியாக இருந்தது போல் காஸா விவகாரத்திலும் இந்தியா அமைதி காத்து பாலஸ்தீனிய இனப்படுகொலைக்கு பங்குபெற கூடாது என்று இந்திய அரசிற்கு கண்டனம் தெரிவித்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இஸ்ரேல் காஸாவின் மேல் நடத்தும் இனப்படுகொலைக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். மேலும் தமிழர்கள் குர்திஸ்தான் போராட்டத்திற்க்கும், அவர்களின் சுயநிர்ணய உரிமைக்காகவும் ஆதரவாகவும் முழக்கங்கள் எழுப்பி தங்களின் ஆதரவை தெரிவித்தனர்