இனப்படுகொலை சம்பவங்களில் வீட்டோ அதிகாரத்தை மட்டுப்படுத்த பிரான்ஸ் முயற்சி

0
558

france-9பாரிய அட்டூழியங்கள் மற்றும் இனப்படுகொலை(genocide) சம்பவங்களில் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு பேரவையின் நிரந்தர உறுப்பு நாடுகள் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தாமல் இருப்பது தொடர்பான பிரான்ஸ்சின் முன்மொழிவில் பல நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.

 

ஐரோப்பா, ஆபிரிக்கா, லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆசியாவைச் சேர்ந்த 75 நாடுகள் இந்த முன்மொழிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

இந்த முன்மொழிவுக்கு ஏனைய நாடுகளும் ஆதரவு வழங்கும் என பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் லோரன் ஃபபியஸ் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

 

தற்போது ஐக்கிய நாடுகள் சபையில் 193 நாடுகள் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

 

சிரியா போன்று பாரிய அட்டூழியங்கள் இடம்பெறும் நாடுகள் தொடர்பிலான தீர்மானங்கள் மீது வீட்டோ அதிகாரங்கள் பயன்படுத்தப்படும் போது ஐநாவின் பாதுகாப்பு பேரவை முடக்கப்படுவதாக பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

சிரியா போன்ற நிலைமைகளை உறுதிப்படுத்த மேலதிக பொறுப்பு இருக்க வேண்டும் என தாம் நம்புவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

 

பாரிய அட்டூழியங்கள் மற்றும் இனப்படுகொலைச் சம்பவங்கள் தொடர்பான சம்பவங்களில் தமது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தாமல் இருப்பதற்கு மிகுந்த அர்ப்பணிப்புடன் உள்ளதாக பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் கூறியுள்ளார்.

 

பாதுகாப்பு பேரவையின் ஏனைய நிரந்தர உறுப்பு நாடுகளான அமெரிக்கா, பிரித்தானியா, ரஷ்யா, மற்றும் சீனா ஆகிய நாடுகளும் விரைவில் இதனைப் பின்பற்றும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 

இதேவேளை இந்த முயற்சிக்கு பிரித்தானியா ஆதரவு தெரிவித்துள்ள அதேவேளை அமெரிக்காவும் சாதகமான சமிக்ஞையை வழங்குவது குறித்து கவனம் செலுத்தியுள்ளது.

 

எனினும் பிரான்ஸ்சின் இந்த முன்மொழிவுக்கு ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் இராஜதந்திரிகள் தமது விரும்பின்மையை வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

ஐநா பாதுகாப்பு பேரவையில் வீட்டோ அதிகாரத்தை கொண்ட நாடுகள், பாரிய குற்றங்களை புரிந்த அரசாங்கங்களை பாதுகாப்பதாக கூறியுள்ள மனித உரிமை குழுக்கள், வீட்டோ அதிகார பயன்பாட்டை கட்டுப்படுத்த வேண்டும் என நீண்டகாலமாக வலியுறுத்திவருகின்றன.

 

சிரிய அரசாங்கத்தை பாதுகாப்பதற்கு ரஷ்யாவும் சீனாவும் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தியமை குறித்து விமர்சிக்கப்படும் அதேவேளை இஸ்ரேலுக்கு எதிரான தீர்மாமொன்றை வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி அமெரிக்காவும் தடைசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

பிரான்ஸ்சின் இந்த முன்மொழிவு இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் இனப்படுகொலை தொடர்பான விடயங்களை எதிர்காலத்தில் கையாள்வதற்கு ஏதுவாக அமையும் என அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.