சாட்சியங்கள் இல்லாமல் சாட்சியபடுத்தப்பட்ட இந்த இனவழிப்பு(Genocide) இன்றைக்கு சர்வதேசத்தின்பால் ஒரு பாரிய விசாரணை என்ற நிலைபாட்டில் போய்நிற்கின்றது. ஒரு சாதாரண இனவிடுதலைக் கோட்பாட்டில் போராடப் புறப்பட்ட நாங்கள் அமெரிக்காவால் தீர்மானம் கொண்டு வந்து எங்களுடைய இனவழிப்பு சம்பந்தமான ஒரு சர்வதேச விசாரணையின் கட்டத்தில் இந்த மாதம் 31ஆம் திகதி விசாரணை முடிவடைகின்ற கட்டத்தில் இருக்கின்றோம்.

sivakaran
ஆனால் இந்த இனவழிப்பு, மனிதவுரிமை மீறல் அல்லது முள்ளிவாயக்காலிலே நடைபெற்றது இனவழிப்புத்தான் என்கின்ற நிலைப்பாடு அல்லது கிளிநொச்சி, முல்லைத்தீவு அரசாங்க அதிபர்களின் புள்ளி விபரத்தினூடு காணமல்ப்போன 146,669 பேரினுடைய நிலைமை அல்லது இதற்கு அப்பாற்பட்ட தருஸ்மானின் அறிக்கைகையிலே கோடிகாட்டப்பட்ட 70,000 மேற்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டனர் என்கின்ற நிலைமை, அரசாங்கத்தின் புள்ளிவிபரத்தின் பிரகாரம் 16 742 பேர் காயமடைந்துள்ளனர் என்கின்ற நிலைமை அல்லது 89 000 கைம்பெண்கள் இருக்கின்றார்கள் என்றால் 89 000 இறந்து போன கணவன்களின் நிலைமை, 42,000 தபுதாரர்கள் இருக்கிறார்கள் என்றால் 42,000 இறந்து போன மனைவிகளின் நிலைமை, 20,000 மேற்பட்ட அனாதைக் குழந்தைகள் இருக்கின்றார்கள் என்றால் 4.5 ஆள் பெருக்கினால் 1 50 000 மேற்பட்ட மக்களின் நிலைமை, இந்த நிலமையினுடைய நியதி என்ன என்கின்ற கேள்வி நாங்கள் கேட்க வேண்டியவர்களாகவும் அல்லது இந்த நிலைப்பாட்டுக்கு நாங்கள் என்ன தீர்க்கமாக செய்திருக்கின்றோம் என்பதனை சிந்தித்து பார்க்க வேண்டியவர்களாக உள்ளோம்.

எனவே இன்னமும் ஒரு பத்து நாட்கள் இருக்கின்றது, பத்து நாட்களுக்குள்ளே நாங்கள் எத்தனை சாட்சியங்களை அணிதிரட்டி விட்டோம், இந்த சாட்சியங்களை எப்படி ஜெனிவாவிலே சாட்சியப்படுத்தக் கூடிய சூழ்நிலையை ஏற்படுத்திவிட்டோம்?

இந்த விசாரணை இன்று நாளை முடிந்துபோகக் கூடியது இல்லை. காலக்கேடுவினுள்ளே சாட்சியங்களை பதிவு செய்ய வேண்டியவர்களாக உள்ளோம். இது பல ஆண்டுகளுக்குப் போகலாம் தென்சூடான் ஜனாதிபதிக்கு 18ஆண்டுகளின் பின்னரே மரணதண்டனை விதிக்கப்பட்டது என்ற சூழ்நிலை இருக்கலாம். ஆனால் எங்களுக்கு முள்ளிவாயக்காலிலே நடைபெற்றது இனவழிப்புத்தான் என்பதனை, இனவழிப்புக்கு உள்ளாக்கப்பட்ட நாங்கள் கூட அது இனவழிப்பு என்று சொல்வதிலே தயக்கம் இருக்கின்றது என்ற வேதனையான கட்டத்தையும் நான் இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். ஏன் என்றால் நான் யுத்தத்தில் பிறந்து யுத்தத்துக்குள் வாழ்ந்து யுத்த முடிவு வரை வாழ்ந்தவன் என்கிற சூழலிலே இந்தக் கருத்தை பதிவு செய்கின்றேன்

வி எஸ் சிவகரன்
செயலாளர், இளைஞர் அணி – இலங்கைத் தமிழரசுக் கட்சி

(யாழ்.மாவட்ட தமிழரசுக் கட்சி மாநாட்டில் வி.எஸ்.சிவகரன் ஆற்றிய உரை..)