jaffna-slaஇலங்கையின் சிவில் யுத்தம் முடிவடைந்து சுமார் ஆறு வருடங்கள் நிறைவடைந்துள்ள போதிலும், அங்கு இன்னமும் தமிழ் மக்கள் திட்டமிடப்பட்ட வகையில் அரச அதிகாரிகளினால் சித்திரவதை, பாலியல் வன்புணர்வு, சட்டரீதியற்றமுறையில் தடுத்துவைத்தல் மற்றும் கொலைசெய்யப்படுதல் போன்ற அக்கிரமங்களுக்கு உட்படுத்தப்படுவதாக “சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம்” வெளியிட்டுள்ள புதிய அறிக்கையொன்றில் தெரிவித்திருக்கிறது.

 

இவ்வாறான கொடுமைகளுக்கு உள்ளானவர்களின் சாட்சியங்களின் உ தவியுடன், மிகவும் கண்ணியமாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் — இன்னமும் முடிவுறுத்தப்படாத யுத்தம்: இலங்கையின் சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறைகளிலிருந்து தப்பிப்பிழைத்தரவர்கள் 2009-2015 — என்ற தலைப்பின்கீழ் வெளியிட்டிருக்கும் இந்த ஆய்வறிக்கையில், சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறை போன்றன எந்த அளவுக்கு நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட கொள்கையின் ஒரு அங்கமாக இலங்கை அரச மற்றும் பாதுகாப்புத்துறை உயர் மட்டத்தில் திட்டமிடப்பட்டிருக்கிறது என்பது வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.

 

அதுமட்டுமன்றி, சித்திரவதைகளை மேற்கொள்பவர்களையும், பாலியல் பலோத்காரத்தில் ஈடுபட்டோரையும் இந்த அறிக்கை இனங்காட்டியிருக்கிறது. அத்துடன் யுத்தத்திற்குப் பின்னர் தாம் தடுத்துவைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படும் இரகசிய முகாம்கள் உள்ளிட்ட சுமார் 41 தடுப்பு முகாம்களையும் இந்த அறிக்கை குறிப்பிட்டுச் சுட்டிக்காட்டியிருக்கிறது. இது 2015 ஜனவரியில் மேற்கொள்ளப்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னரும்கூட அரச-ஏற்பாட்டிலான கடத்தல்கள், சித்திரவதைகள் மற்றும் பாலியல் வன்முறைகள் தொடரப்படுவதனையே எடுத்துக்காட்டுகிறது.

 

இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் முகம்கொடுத்த சித்திரவதைகள் மிகவும் பயங்கரமானவை. இவர்களில் பலர் மிக மோசமான பேரதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளமையோடு, தடுப்பில் வைக்கப்பட்ட மிக நீண்டகாலத்தின் பின்னரும்கூட உளரீதியான தாக்கங்களை அனுபவித்து வருகிறார்கள். அவர்களது குடும்ப உறுப்பினர்களும் பழிவாங்கல்களுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.

 

இந்த அறிக்கையில் பேட்டி காணப்பட்ட சுமார் 155 பாதிக்கப்பட்டோரில் சுமார் கால்வாசிக்கும் அதிகமானோர், தாம் வெளிநாடுகளுக்குத் தப்பி வந்ததன் பின்னர் தத்தமது குடும்ப உறுப்பினர்கள் மிகவும் மோசமான வகையில் தண்டிக்கப்பட்டதாகத் தெரிவித்திருக்கிறார்கள்.

 

இது குறித்து சர்வதேச சமூகம் தக்க நடவடிக்கை எடுக்கத் தவறுமாயின் அது பாதிக்கப்பட்டவர்களை ஒட்டுமொத்தமாகக் கைவிட்டதாக அமைந்துவிடும் என்று இந்த அறிக்கை எச்சரித்திருக்கிறது. அத்துடன் தனது இந்த அறிக்கையை ஐ.நா பாதுகாப்புச் சபை சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் விசாரணையாளர்களிடம் இதற்குப் பொறுப்பானவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு பாரப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருக்கிறது.

 

அறிக்கையை முழுமையாகத் தரவிறக்கம் செய்ய இங்கே அழுத்தவும் http://www.itjpsl.com .

 

“சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் – இலங்கை” என்ற திட்டமானது இடைக்கால நீதித்துறை வல்லுனர் யாஸ்மின் சூகாவினால் நடாத்தப்பட்டுவரும் தென்னாபிரிக்க மனித உரிமைகள் மன்றம் என்ற அமைப்பினால் நிர்வகிக்கப்பட்டதாகும்.

 

இதற்கு முன்னர் இலங்கை தொடர்பில் வெளியிடப்பட்ட அறிக்கைகளாவன: www.stop-torture.com and www.white-flags.org