இரத்தம் சிந்தாமல், துன்பங்களை சந்திக்காமல் கிடைப்பது அல்ல விடுதலை. இப்பாரிய போராட்டங்களின் பின்னர் கிடைப்பதுவே உண்மையான விடுதலை. இழப்புக்களை சந்திக்காமல், இழப்புக்களின் வலியை உணராமல் விடுதலை பெறும் மக்கள் எத்தனை காலமாகினாலும் வாழ்வில் எந்தவித மாற்றத்தையும் காண முடியாது. இவர்கள் இருண்ட வாழ்க்கையையே நடத்திக் கொண்டிருப்பார்கள். பல போராட்டங்கள் செய்து விடுதலை பெறும் மக்கள், தாம் பட்ட துன்பங்கள் தமது எதிர்கால சந்ததிக்கு வந்துவிடக் கூடாதென்கிற நோக்குடன் துணிச்சலுடன் செயலாற்றி தம்மையும், தமது தேசத்தையும் உயர்த்துவதற்காக கடினமாக உழைப்பார்கள்.

இப்புதிய ஆண்டில் ஆபிரிக்க கண்டத்தில் உருவாகப்போகும் தென் சூடான் என்கிற புதியநாடு, விடுதலை வேண்டி நிற்கும் தேசங்களுக்கெல்லாம் புதுத்தென்பைக் கொடுத்து வரலாற்றில் நிலைபெற்றிருக்கப் போகின்றது. விடுதலைக்காக போராடிய தேசங்களின் வரிசையில் இன்று தென் சூடான் விடுதலை பெறுகிறது. நாளை விடுதலை பெறப்போகும் தேசங்களில் தமிழீழமே முன்னிடத்தில் உள்ளது.

பிரித்தானியர்களினதும் எகிப்தியர்களினதும் காலனித்துவ நாடாகவிருந்த சூடான், ஜனவரி 1, 1956-இல் விடுதலை பெற்றது. ஏறத்தாழ 43 மில்லியன் சனத்தொகையைக் கொண்ட நாடு. இதன் பரப்பளவு ஏறத்தாழ 2.5 மில்லியன் சதுர கிலோமீட்டர். தென் பகுதியில் கிறிஸ்தவர்களும், வட பகுதியில் முஸ்லிம்களும் வாழ்ந்து வருகின்றார்கள். இந்த இரண்டு தேசங்களும் இனரீதியாகவும், மதரீதியாகவும் தனித்துவமானவை. சூடானின் அடக்குமுறை அரசிற்கு எதிராக கிளர்ந்தெழுந்த தென் சூடானிய மக்கள், தமது தேசத்திற்கான விடுதலைக்காக சூடான் விடுதலைபெற்ற காலப்பகுதிகளிலிருந்தே ஆரம்பித்த போராட்டம் பல்வேறு கட்டங்களாக பயணித்து, பல்வேறு இராஜதந்திர நகர்வுகள் ஊடாக நகர்ந்து, பல்வேறு சதிவலைகளில் சிக்கியபோதும் எழுந்துநிமிர்ந்துநின்ற தென் சூடானிய தேசத்து மக்களின் விடுதலைக்கான போர், தற்போது அதன் உச்சத்தை தொட்டுள்ளது.

பதினேழு வருடங்கள் தொடர்ந்த முதலாம் கட்டப்போரும், அதனைத் தொடர்ந்த சமாதான உடன்படிக்கையும், அதன்பின்னர் 1983-இல் ஆரம்பித்த இறுதிப்போரும், அதன் தொடர்ச்சியாக வந்த ஒப்பந்தத்தின் பலனாக தற்போது சர்வசன வாக்கெடுப்பு ஒன்று நடத்துகின்ற நிலைக்கு இரண்டு தேசங்களும் இணங்கி அதிலும் வெற்றி கண்டார்கள். 1983-இல் ஆரம்பித்த உக்கிரமான போரில் குறைந்தது இரண்டு மில்லியன் மக்கள் கொல்லப்பட்டும் பல மில்லியன் கணக்கானோர் இடம்பெயர்ந்தும் உள்ளனர்.

பல ஆண்டுகால பகைமைக்கு பின்னர் வட சூடானை மையமாக கொண்ட மேலாதிக்கவாத அரசு தென் சூடானிய மக்களின் பிரிந்து செல்வதற்கான உரிமையை ஏற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. மேற்குலக அரசுகளின் முயற்சியால் தற்போதைய சூடானிய அரச அதிபர் ஓமர் அல்பசீர் போர்க்குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு சர்வதேச நீதிமன்றத்தில் பிடியாணை வழங்கப்பட்டுள்ள நிலையிலுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஈழத்தமிழரின் போராட்டத்திற்கும், தென் சூடானிய போராட்டத்திற்கும் பல இணக்கப்பாடுகளை காண முடியும். சிறிலங்கா சுதந்திரம் அடைந்த நாள் முதல் 1983 வரை தமிழ் தலைமைகள் பல போராட்டங்களை செய்தது. பல்லாயிரம் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். இவைகள் அனைத்தையும் எதிர்த்துப் போராடி, தமிழீழ சுதந்திர நாட்டை உருவாக்க பிறந்தது பல தமிழ்ப் போராளி அமைப்புக்கள். எப்படி தென் சூடானுக்கு அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆதரவாக இருந்ததோ, அதைப்போலவே தமிழீழ போராளிகளுக்கும் இந்தியா உதவிக்கரமாக இருந்தது.

sudan
எப்படி சூடான் மக்கள் விடுதலை இயக்கம் தென் சூடானின் விடுதலைக்காக 1983 ஆண்டில் ஆயுதப்போரை மேற்கொண்டதோ, அதைப்போலவேதான் விடுதலைப்புலிகள் அமைப்பும் அதே ஆண்டில் தமிழீழ விடுதலைக்காக போரை ஆரம்பித்தார்கள். தற்போதைய சூடானிய அரச அதிபர் ஓமர் அல்பசீர் போர்க்குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு சர்வதேச நீதிமன்றத்தில் பிடியாணை வழங்கப்பட்டுள்ள நிலையிலுள்ளாரோ, அதைப்போலவேதான் சிறிலங்காவின் ஜனாதிபதி மகிந்த ராசபக்சேவும் போர்க்குற்றம் புரிந்தவராக உலக நாடுகளினால் வர்ணிக்கப்படுகிறார்.
நம்பிக்கையே வாழ்க்கை

ஏறத்தாழ எட்டு மில்லியன் மக்கள் தொகை கொண்ட தென் சூடான் தேசத்தில், 4.5 மில்லியன் மக்கள் வாக்களிப்பு தகைமையை கொண்டிருக்கின்றார்கள். ஏறத்தாழ 619,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டதுடன், உகண்டா, கென்யா, எதியோப்பியா மற்றும் கொங்கோ நாடுகளுடன் எல்லைகளைக் கொண்டதுதான் தென் சூடான்.

ஈழத்தமிழர்களின் போராட்ட வரலாற்றுக்கும், தென் சூடானிய போராட்ட வரலாற்றுக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. இரு போராட்டங்களும் 1983-ஆம் ஆண்டிலேதான் ஆயுதப் போரின் மூலமேதான் தமது விடுதலையை வென்றெடுக்கலாம் என்கிற சிந்தனையுடன் ஆயுதப் போரை மேற்கொண்டனர். தென் சூடான் மக்களின் தன்னாட்சி உரிமையை ஏற்றுக்கொள்வதாக 1989-ஆம் ஆண்டு அப்போதைய சூடான் அதிபர் அறிவித்திருந்தார்.

ஆனால் அதே காலத்தில் ஏற்பட்ட இராணுவ சதிப்புரட்சியில் ஆட்சிப் பீடமேறிய இப்போதைய அரசு அதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனக்கூறி தொடர்ந்தும் போரில் ஈடுபட்டது. தொடர்ந்த போரும் அழிவுகளும் 2005-ஆம் ஆண்டு அமுலுக்குக் கொண்டுவரப்பட்ட சமாதான உடன்படிக்கை மூலம் ஓரளவுக்கு முடிவுக்கு கொண்டுவரப்பட்டன.

ஈழ விடுதலைப் போராளிகளும், சூடான் மக்கள் விடுதலை இயக்கம் போன்றே பல பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார்கள். இவைகள் அனைத்தையும், சிங்கள அரசு ஏற்கவில்லை. நோர்வே அனுசரணையுடன் சூடான் அரசுக்கும் தென் சூடான் அமைப்பிற்கும் இடையில் 2002-ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஒரு இடைக்கால ஒழுங்கு பற்றிய உடன்பாடு காணப்பட்டது. இந்த உடன்பாட்டின்படி தென் சூடான் தனது போரினால் பாதிக்கப்பட்ட இடங்களை புனரமைப்பதுடன், முக்கிய கட்டமைப்புடன் தென் சூடான் மக்களின் சுய நிர்ணைய உரிமையும் அங்கீகரிக்கப்பட்டது. அதாவது வடக்கு சூடானும் தெற்கு சூடானும் சேர்ந்து வாழ்வதா பிரிந்து செல்வதா என்ற உரிமையினையும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இதே நோர்வேதான் அதே 2002-ஆம் ஆண்டில் சிறிலங்கா அரசிற்கும், புலிகளுக்கும் இடையில் தனது நேரடி மத்தியஸ்தத்தின் கீழான சமாதான ஒப்பந்தத்தை செய்தது. விடுதலைப்புலிகளால் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால அரச திட்டத்தினை சிறிலங்கா அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. இதற்கு சர்வதேச நாடுகளின் குறிப்பாக, இணைத்தலைமை நாடுகளின் அசமந்த போக்கும் ஓர் காரணமாக இருந்தது. அத்துடன் இந்தியாவின் தலையீடும் காரணம் என பரவலாக கருதப்பட்டது. ஆனால், சூடானுடைய இடைக்கால திட்டத்தினை சர்வதேசம் பகிரங்கமாக ஏற்றுக்கொண்டு அதனை நடைமுறைப்படுத்துவதில் அமெரிக்காவும் நோர்வேயும் ஒற்றைக்காலில் நின்றனர். இதனால் வடக்கு சூடான் ஆட்சியாளருக்கு இடைக்கால சபையினை நடைமுறைப்படுத்துவதினைத் தவிர வேறு வழி இருக்கவில்லை.

சர்வதேசத்தின் ஒருங்கிணைந்த அழுத்தம் காரணமாக இடைக்கால நிர்வாகம் நடைமுறைப்படுத்தப்பட்டது. உண்மையில் நடைமுறைப்படுத்தப்பட்டது என்பதனை விட நடைமுறையில் உள்ளதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது என்றுதான் கூறவேண்டும். காரணம் வடக்கு சூடானிய ஆட்சியாளர்கள் தென் சூடானிற்கு ஒப்பந்தத்தில் கூறியது போல் எதுவும் செய்யவில்லை. புனர்வாழ்வும் செய்து கொடுக்கவில்லை, அபிவிருத்தியும் செய்யப்படவில்லை. மாறாக, தெற்கு சூடானியரின் எண்ணெயினை அகழ்ந்து சீனாவிற்கு கொடுத்தவண்ணம் இருந்தது.

எது என்னவாயினும், நோர்வே தலைமையில் மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் பிரகாரம் மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தி, வாக்களிக்க தகமையுடைய 4.5 மில்லியன் மக்களில் 60 விழுக்காட்டினர் தென் சூடான் பிரிந்து செல்வதை ஏற்று வாக்களித்தால்தான் விடுதலையை பெற முடியும் என்று ஒப்புக்கொண்டார்கள். அதன்படியே, ஜனவரி 9-ஆம் நாள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்த வாக்கெடுப்பு, ஜனவரி 15-ஆம் தேதி ஏழு நாட்களுக்கு தொடர்ச்சியாக நடைபெற்று வெற்றிகரமாக நிறைவடைந்தது. புலம்பெயர்ந்து வாழும் தென் சூடான் மக்களும் இவ்வாக்களிப்பில் பங்கு கொண்டார்கள். குறிப்பாக ஆஸ்திரேலியா, கனடா, எகிப்து, எதியோப்பியா, கென்யா, உகண்டா, பிரித்தானியா மற்றும் அமெரிக்கா போன்ற எட்டு நாடுகளிலிருந்து இத்தேர்தலில் அம்மக்கள் வாக்களித்தார்கள்.

வட சூடானின் பல அழுத்தங்களுக்கு மத்தியிலும், தென் சூடான் பிரிந்து செல்லுவதற்கு ஆதரவாக ஏறத்தாள 99 விழுக்காடு மக்கள் வாக்களித்துள்ளார்கள் என கூறினாலும், பிப்ரவரி 14, 2011 அன்றே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும். நடைமுறையிலுள்ள ஒப்பந்தப்படி ஆறுமாதங்களுக்கு பின்னர் அதாவது ஜூலை 9-ஆம் தேதியே தென் சூடான் சுதந்திர நாடாக அறிவிக்கப்பட முடியும். ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்புக் குழுவினரால் இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜூலை 9, 2011 முதல் ஐ.நா.வின் 193 ஆவது நாடாக தென் சூடானின் உலக அரங்கில் அதன் தேசியக்கொடி பறக்கவிடப்படும். இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் உருவாக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையெனும் உலக அமைப்பில் 51 நாடுகளே உறுப்பு நாடுகளாக இணைக்கப்பட்டன. 1991-ஆம் ஆண்டிலிருந்து 1994-ஆம் ஆண்டுவரை 166 உறுப்பு நாடுகளை கொண்ட ஐ.நா., இக்காலப்பகுதியில் 184 நாடுகள் உறுப்பு நாடுகளாக இருந்தது குறிப்பாக 19 நாடுகள் குறித்த நான்கு வருடங்களுக்குள் இணைந்தன.

முன்னாள் சோவியத் ஒன்றியம் பிளவுபட்டு பல நாடுகள் உருவாகியதே, பல நாடுகள் உருவாகக் காரணமாக இருந்தது. மோண்ரிநீக்ரோ என்கிற நாடு 192 ஐநாவின் உறுப்பு நாடாக மே 21, 2006-இல் இணைக்கப்பட்டது. செர்பியாவிடம் இருந்து பிரிந்து தனிநாடாக பிரகடனப்படுத்தப்பட வேண்டும் என்கிற போராட்டத்தின் விளைவே, மோண்ரிநீக்ரோ நாட்டு மக்களும் தேர்தல் மூலமாக தமது விருப்பை வெளிப்படுத்தி பிரிந்தார்கள். கிழக்கு தீமோரும் இந்தோனேசியாவின் அடக்கு முறைகளிலிருந்து விடுவிக்கப் போராடி, மே 20, 2002 விடுதலை பெற்றது.

தமிழீழ கட்டுமானத்தின் ஒத்திகை தென் சூடானில்

விடுதலைப்புலிகள் யாழ் குடாநாட்டை தமது கட்டுப்பாட்டின்கீழ் வைத்திருந்த வேளையில் பல கட்டுமானப் பணிகளை செய்திருந்தார்கள். எதிரியே மூக்கில் விரலைவைத்து ஏங்குமளவு பல கட்டுமானங்களை செய்திருந்தார்கள். இவைகள் அனைத்தையும் சிங்கள அடக்கு முறை அரச படையினர் அழித்தார்கள்.

தளம் மாறிச் சென்ற புலிப்படையினர், வன்னியை கைப்பற்றி தமது முழுக்கட்டுப்பாட்டில் வைத்திருந்த வேளையில் தனி அரசையே நடைமுறையில் வைத்திருந்தார்கள்.

நீதித்துறை முதல் பல அரச அமைப்புக்களை நிர்மாணித்து, அவற்றை வெற்றிகரமாக நடைமுறையில் வைத்திருந்தார்கள். எந்தக்குற்றமும் இல்லையென்று சொல்லுமளவு சட்டம் ஒழுங்கு காக்கப்பட்டது தமிழீழ காவல்துறையினரால். இப்படியாக இருந்த விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகளாக முத்திரை குத்தப்பட்டு, ஏதோ பயங்கரவாதத்தை அடியோடு அழிப்பதாக கூறி படையெடுத்து பால்லாயிரம் பொதுமக்களைக் கொன்றும் பல்வேறு அட்டூழியங்களை செய்தது சிங்கள அரசு.

இறுதிப்புலி இருக்கும்வரை தமிழீழ லட்சியம் அழியாது என்று கூறினார் புலிகளின் தலைவர் பிரபாகரன். இன்னுமொரு படிமேல் சென்று சொல்வதேயானால், இறுதித்தமிழன் இருக்கும்வரை தமிழீழம் அடையாமல் இருக்கப் போவதில்லை. அன்று புலிகளின் கட்டுமானத்தை அழித்ததாக பறை சாற்றினார்கள். ஆனால், இன்று புதிதாக உருவாகப் போகும் தென் சூடான் நாட்டிற்கு நாடுகடந்த தமிழீழ அரச பிரதிநிதிகளுக்கு அழைப்பு சூடான் மக்கள் விடுதலை இயக்கத்திடம் இருந்து கிடைக்கப்பெற்றுள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசு தெரிவித்துள்ளது. தென் சூடானின் கட்டுமானப்பணிகளிலும் தமிழீழத்தை சேர்ந்த பொறியியலாளர்கள் ஈடுபடவுள்ளார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வழைப்பு தொடர்பாக நாடு கடந்த தமிழீழ அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

“தனிநாட்டுக்கான வாக்கெடுப்பு முடிவடைந்தவுடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினை தென்சூடானுக்கு வருமாறு சூடான் மக்கள் விடுதலை இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது. கொண்டாட்டங்களில் பங்குகொள்ளவும் பொருத்தமான துறைகளில் தென்சூடானின் மேம்பாட்டுக்குத் தமிழர் தரப்பு வல்லுநர்களின் உதவி வழங்கல் பற்றி ஆராய்வதற்காகவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பிரதிநிதிகள் குழுவொன்றை அனுப்புகிறது. சூடான் மக்கள் விடுதலை இயக்கத்தின் விருந்தினர்களாக வருகைதரும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகள் குழுவினை சூடான் மக்கள் விடுதலை இயக்கத்தின் உயரதிகாரிகள் வரவேற்பார்கள். நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகள் ஏனைய நாடுகளின் தலைவர்களையும் அங்கு சந்திக்கவுள்ளார்கள்”.

தமிழீழ வல்லுனர்களின் செயற்பாடு தென் சூடானில் இடம்பெற இருப்பதானது மிகவும் வரவேற்கத்தக்க நிகழ்வே. இப்படியான செயல்கள் மூலமாக நாளை மலர இருக்கும் தமிழீழ தேசத்தை கட்டியெழுப்ப இவ்வல்லுனர்களின் அனுபவமே போதும். அத்துடன், தென் சூடானும் தனது விசுவாசத்தை தமிழீழ தேசத்தின் மீதும் அதன் மக்கள் மீதும் காண்பித்து, ஒரு வருடம் அல்ல, பல்லாயிரம் வருடங்களாக உறவுகளைப் பேணுவதற்கு உறுதுணையாக இருக்கும். ஈழத்தில் இன்று அகலக்கால் பதித்து நிற்கும் சிங்கள அரக்கர்கள் தமிழீழத்தை சிதைக்க எத்தனை நிகழ்வுகளைச் செய்தாலும், தமிழீழ வேங்கைகள் உலக அரங்கிலேயே அகலக் கால் பதித்து வேலைகளை செய்கிறார்கள்.

சூடான் நாட்டின் ஐந்தில் நான்கு பகுதி எண்ணெய் வளம் தென் சூடானிலேயே இருப்பதுடன், கடல் வளம் உள்ள நாடாகவே தென் சூடான் உள்ளது. செங்கடல், சுயெஸ் கால்வாய், இந்து மா கடல் என்பவற்றின் ஊடாக அமைந்துள்ள கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கடற்பாதைகளின் பாதுகாப்பிற்கும் அதை ஒட்டிய வேறு அலுவல்களுக்கும் சூடானின் புவியியல் அமைவிடம் இன்றியமையாதது. இவைகளைக் குறிவைத்தே அமெரிக்கா மற்றும் அதன் தோழமை நாடுகள் தென் சூடானின் விடுதலைக்கு ஆதரவாக இணைந்தார்கள் போலும். எது என்னவாக இருந்தாலும், மேற்கத்தைய நாடுகளின் செயல்களினால் ஆத்திரமடைந்த சூடானிய இஸ்லாமிய அரசு (இப்போ வடக்கு சூடான்) தென் சூடானின் எண்ணெய் வளத்தை பயன்படுத்தி மேற்குலகத்திற்கு எதிராக சீனாவை பயன்படுத்த திட்டமிட்டு அதன்படி செய்தது.

உண்மையில் ராசபக்சேவும் இதே பாணியினைத்தான் தனது ஆட்சியில் கையாண்டு வருகின்றார். ஆனால் ராசபக்சே எண்ணெய்யினை காட்டி சீனாவை வைத்திருக்கவில்லை மாறாக கடற்பிராந்திய போக்குவரத்தினை வைத்தே தனது காய்களை நகர்த்துகின்றார்.

விடுதலைக்கான போராட்டங்களை செய்துவரும் ஈழ, செச்சினிய, பாலஸ்தினிய, குர்திஷ் மற்றும் காஷ்மீரிய தேசங்களும் வெகு சீக்கிரத்தில் விடுதலையை எப்படி தென் சூடான் இன்று பெற்றதோ அதைப்போலவே இத்தேசங்களும் வெற்றிகரமாக விடுதலையை வென்றெடுப்பார்கள்.

விடுதலைக்காக போராடி வரும் தேசங்களின் வரிசையில் அடுத்து தமிழீழத் தேசமே பிறப்பெடுக்கும். இதனை வென்றெடுக்க வேகமாக்க வேண்டிய பொறுப்பு ஈழத்தில் வதியும் மக்களிடம் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் சிதறிக்கிடக்கும் அனைத்து தமிழர்களின் கைகளிலேயுமே தங்கியுள்ளது.

நடந்த சம்பவங்களை மனதில் நிறுத்தி, பட்ட துன்பங்களை படிக்கல்லாக மாற்றி தமிழீழத்தை கட்டியெழுப்பி, அதனை பிரசுரிப்பதுவே அனைத்து தமிழர்களின் தலையாய பணி.

தமிழரின் தாகம்! தமிழீழத் தாயகம்!

http://vaanambaadisampath.blogspot.in/