2016-2ஒரு உன்னதமான போராட்டத்தை நடத்திய போராளிகளும் அதைத் தாங்கிய மக்களும் இன்று குடும்ப பிணக்குகளிற்குள் சிக்கவும் அதை விரிக்கவம் வளர்க்கவும் செய்து தமது குழந்தைகளையும் அனாதைகளாக்கி தமது வாழ்வையும் தனிமைப்படுத்த நேரிடுகிறது.

 

இனஅழிப்பு அரசு திட்டமிட்டு நடைமுறைப்படுத்தியதென்பதற்கும் அப்பால் தோல்வியும் நிச்சயமற்ற எதிர்காலமும் எமது மக்களினதும் போராளிகளினதும் உளவியலை ஊனப்படுத்தி குருரமாகச் சிதைத்து அது சமூகத்திற்குள் பிரதிபலித்துக்கொண்டிருக்கிறது.

 

விளைவாக உறவுகளை துண்டித்து குடும்ப வாழ்வின் அடிநாதமான விட்டுக்கொடுக்கும், மறக்கும் மன்னிக்கும் போக்கிலிருந்து விடுபட்டு முரண்பட்டு தனித்து வாழும் முடிவை தூரநோக்கற்று எடுத்து கொண்டிருக்கிறார்கள்.

 

இது தனிமனிதர்களாக அவர்களைப் பாதிக்கிறதென்பதற்கப்பால் கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பிற்கு எதிராக பேராடி தன்னை நிறுவ முற்பட்டுகொண்டிருக்கும் ஒரு இனத்தை மோசமாகப் பாதிக்கிறது என்பதுதான் இதன் வெளிப்படை உண்மை.

 

இதை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்ததாகத் தெரியவில்லை. எனவே உடனடியாக குடும்ப உறவுகளை துண்டிக்கும் போக்கு தொடராமல் இருக்க உளவளத்துணை அவசியம்.

 

உங்களில் பலருக்கு அதிர்ச்சியாக இருக்கலாம். பொது மக்களை விடுவோம். மே 18 இற்கு பிறகு உயிர் பிழைத்து தப்பி வந்த பல போராளிகள் குடும்பங்கள் மேற்படி உளவியற் சிக்கல்களுக்குள் தள்ளப்பட்டு குடும்ப பிணக்குகளினால் பரஸ்பரம் நம்பிக்கயற்று பிரிந்திருக்கிறார்கள் இதன் புள்ளிவிபர கணக்கு அதிர்ச்சியூட்டும் வகையில் இருக்கிறது.

 

இது மேலும் எமது பெண்களை தனிமைப்படுத்தவும் எமது குடிப்பரம்பலை தடுக்கவுமே வழி செய்கிறது.
அதுதான் நாம் உடனடியாக தனித்தனியாகவோ அல்லது கூட்டாகவோ இறுதி இனஅழிப்புக்கு முகம் கொடுத்த ஒவ்வொருத்தருக்கும் உளவியல் ஆற்றுப்படுத்துகை செய்ய வேண்டும் என்று கூறி வருகிறோம். ஆனால் இது தவறாகப் பார்க்கப்படும் போக்கு இன்றளவும் தொடர்கிறது.

 

தனிப்பட்ட ரீதியில் மேற்படி ஆய்வுத்தன்மைகளின் அடிப்படையில் எனது குடும்ப பெண்களுக்கு சிலருக்கு கூட இதை புரியவைக்க முடியவில்லை என்பது மட்டுமல்ல மாறாக அவர்களின் மேற்படி சிக்கல்கலின் விளைவுக்குள் என்னையும் பலியாக்கி தொலைந்து கொண்டிருக்கிறேன்.

 

ஓரளவு இதை புரிந்து கொண்ட எம் போன்றவர்களின் நிலையே இதுவென்றால் சாதாரணமானவர்களின் நிலையை கற்பனை பண்ணிக்கூட பார்க்க முடியவில்லை.

 

இதைத்தான் இன அழிப்பு அரசு எதிர்பார்க்கிறது. ஏனெனில் இது இன அழிப்பின் நுண்மையான பின்னணிகளை கொண்டது.