ஒரு பிரச்சனையை கையில் எடுக்கும் முன்பு எதிர் தரப்பிற்கு தகவல் கொடுத்து விட்டு போராட்டம் எடுப்பது எங்கள் வழக்கம். அதன்படி ராஜபக்சே ஆதரவு நிறுவனமான லைகா தயாரிப்பில் வெளிவர இருக்கும் ‘கத்தி’ திரைபடத்தின் இயக்குனர் முருகதாஸ் அவர்களை கடந்தவாரம் (01.08.2014) அன்று நாங்கள் (பிரபா,மாறன், கவுதம், விக்கி) சந்தித்தோம்.

இயக்குனரை சந்தித்தவுடன் எங்கள் தரப்பு வாதத்தினை முன் வைத்தோம், லைகா நிறுவனத்தின் மீதான குற்றச்சாட்டுகளை அடுக்கினோம். பொறுமையாக அனைத்தையும் கேட்ட முருகதாஸ் அவர்கள் பின்னர் எங்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

முருகதாஸ் கூறியது:-

சார், நான் மற்ற இயக்குனர்கள் போல் வெறும் பணத்துக்காக படம் பண்ணுபவன் இல்லை, ஒவ்வொரு படத்திலும் ஒரு சமுதாய பிரச்னையை (issue) வைத்து தான் படம் எடுப்பேன். இந்த படத்திலும் ஒரு மெசேஜ் வெச்சிஇருக்கேன், தமிழன் என்ற உணர்வு எனக்கும் இருக்ககுறதுனால தான் சார் ஏழாம் அறிவு படம் எடுத்தேன். தணிக்கை துறை கட்டுப்பாடுகளையும் மீறி வசனங்களும் பாடல் வரிகளையும் வைத்தேன்.

murugathas
தமிழர்களை இனப்படுகொலை செஞ்ச ராஜபக்சே மாதிரி ஒருத்தன் காசுல சாப்புட்ரத விட நா செத்துறலாம் சார். நடந்தது என்னனா, எனக்கு லைகா யாருனே தெரியாது , இப்போ வரைக்கும் லைகா சம்பந்தமான யாரையும் நான் பாத்ததே இல்லை. ஐங்கரன் நிறுவனத்திற்கு தான் நான் படத்த ஒப்பந்தம் செஞ்சேன். எனக்கு பணத்துக்கான காசோலை வரும்போது தான் பார்த்தன் அதுல லைகா ன்னு இருந்துச்சி, உடனே ஐங்கரன் நிறுவன நிர்வாகி கருணாவ சந்தித்து பேசினேன். ஐங்கரன்-லைகா எல்லாம் ஒன்னு தான் ஒன்னும் பிரச்சனை இல்லன்னு சொன்னாரு. சரி பணம் வந்தா போதும் எந்த நிறுவனமா இருந்தா என்னன்னு அப்போ விட்டுட்டேன். அதுக்கு அப்புறம் தான் இந்த பிரச்சனை எல்லாம் எனக்கு தெரிய வந்துச்சி.

லைகா ராஜபக்சே சொந்த காரன்னு தெரிய வந்த உடனே நா விஜய் சார கூப்பிட்டு தயாரிப்பாளர மாத்தனும்னு சொன்னேன், பாவம் அவரும் ரொம்ப பயந்து போய் இருந்தாரு , இலங்கை பிரச்சனைல நம்ப ஜாக்கிரதையா இருக்கணும் அப்படி ஒன்னும் லைகா’வுக்கு தான் படம் பண்ணனும்ன்னு ஒன்னும் இல்ல தயாரிப்பு நிருவனத்த மாத்துன்னு விஜயும் சொல்லிட்டாரு தயரிப்பாளர மாத்தலாம்ன்னு இருந்த நேரத்துல தான் நல்ல வேளை என்னோட கத்தி படத்திற்கான மேலாளரும் , லைகா நிறுவனத்தின் மேலாளரும் என்னை சமாதானம் படுத்துனாங்க ,இந்த லைகா மீதான குற்ற சாட்டுகள் அனைத்தும் சாட்சியமற்ற பொய் குற்றசாட்டுகள், இது தொழில் போட்டியால் கிளப்பிவிட பட்ட அவதூறுகள் என்று கூறினார்கள். அவர்கள் சொன்னப்ப கூட நா முழுசா நம்பள, அப்புறம் அவுங்க என்ன சீமான் அண்ணனிடமும், நெடுமாறன் அய்யா விடமும் பேச வைத்தார்கள். அவர்கள் இருவரும் சொன்ன பிறகு தான் லைகா தப்பான நிறுவனம் இல்லைன்னு எனக்கு நம்பிக்கையே வந்தது. -முருகதாஸ்.

மாறன் : சீமான் அண்ணனும் , நெடுமாறன் ஐயாவும் உங்களிடம் என்ன சொன்னார்கள் ?

முருகதாஸ்: சீமான் அண்ணன் தலைவரை (தலைவர்-பிரபாகரன்) சந்தித்த பொழுது தலைவரே சொன்னாராம் , புள்ளையார் படம் போட்ட கம்பனிக்கு (ஐங்கரன் கம்பனிக்கு) படம் பண்ணு அவன் நம்ப ஆளுன்னு, அதனால இதுவும் நம்ப கம்பெனி மாதிரி தான் தாராளமா படம் பண்ணு, வடநாட்டு காரனுகேல்லாம் படம் பண்றீங்க நம்ப தமிழனுக்கு படம் பண்ணா என்ன தப்புன்னு சீமான் அண்ணன் சொன்னாரு.

நெடுமாறன் ஐயாவும் லைகா க்கு படம் பண்ணு ஒன்னும் பிரச்சனை இல்லைன்னு தான் சொன்னாரு. -முருகதாஸ்

murugathas-2
முருகதாஸ்: சார் இப்போ வரைக்கும் நான் பண்றது இனத்துக்கு எதிரான தப்பு இல்லன்னு என்ன நானே சமாதானம் பண்ணிட்டு தான் படம் பண்ணிக்கிட்டு இருக்கேன். நீங்க மட்டும் லைகா க்கு எதிரா வலுவான ஆதாரத்தோட என் கிட்ட வந்து லைகா தப்புன்னு சொல்லுங்க அடுத்த நிமிஷம் நான் உங்களோட சேர்ந்துகிட்டு லைகா க்கு எதிரா போராட்டம் பண்றேன்.

நான்(பிரபாகரன்):- சரி சார் லைகா க்கு எதிரான வலுவான ஆதாரங்களோட உங்களை விரைவில் வந்து சந்திக்கிறோம்.
கிளம்புறதுக்கு முன்னாடி உங்க கிட்ட தனிப்பட்ட முறையில் ஒரு கேள்வி கேக்கணும்.

முருகதாஸ்: கேளுங்க சார்.

நான் (பிரபாகரன்): ஏழாம் அறிவு படத்துல அந்த காண்பறன்ஸ் (conference scene) காட்சியில நம்ம நாட்ட முன்னேற்ற விடாம தடுத்து வெச்சிருக்கறது ‘Corruption, Recommendation, Reservation’ ன்னு ஒரு dialogue ஸ்ருதி ஹாசன் பேசுவாங்க. அதுல Reservation ன்ற வார்த்தை எப்படி சார் வந்துச்சி??

முருகதாஸ்: அதுல ‘Corruption, Recommendation’ மட்டும் தான் நான் சொன்னது , Reservation ஸ்ருதி ஹாசனே சேர்த்துகிட்டாங்க.. நானும் சரி நல்லா Rhyming அஹ இருக்கேன்னு விட்டுட்டேன்.

அப்போ அது எனக்கு தப்புனே தெரில அப்புறம் என் நண்பன் ஒருத்தன் வழக்கறிஞரா இருக்கான், அவன் எனக்கு தொலைபேசி பண்ணி என்ன திட்டு திட்டுன்னு திட்டுனான், அப்புறம் தான் நான் பண்ணது தப்புன்னு புரிஞ்சிது. உடனே அந்த வார்த்தையையும் நீக்கிட்டேன்.

நான்: சரி இப்போ சொல்லுங்க சார், இடஒதுக்கீட்ட பத்தி இப்போ உங்க கருத்து என்ன?

முருகதாஸ்: இடஒதுக்கீடு இருக்கலாம் ஆனா உயிர் காக்குற படிப்பு ,மருத்துவ படிப்புல லா இட ஒதுக்கீடு இருக்க கூடாது சார்.

இந்த இடத்தில் முருகதாஸ் (Merit) தகுதி திறமையை பற்றி பேசுகிறார், முருகதாஸ் அவர்களுக்கு புரியும்படி 20 நிமிடங்கள் இடஒதுக்கீட்டை பற்றி உதாரணங்களோடு விளக்கிய பிறகு ,

முருகதாஸ்:- இப்போ தான் எனக்கு புரியுது. இந்த மாதிரி யாராவது விளக்கி சொன்னா கேட்டுப்பேன், என்னோட வட்டம் ரொம்ப சின்னது, இந்த மாதிரி சொல்றதுக்கு தான் ஆள் இல்ல. இதே மாதிரி லைகா’வ பத்தியும் முழு விவரம் ஆதரத்தோட கொண்டுவாங்க நான் உடனே தயாரிப்பாளர மாத்தி விடுகிறேன்.

நான்: இன்னும் மூன்று நாட்களில் லைகா க்கு எதிரான ஆதாரத்தோடு உங்களை வந்து சந்திக்கிறோம்.