மூவர் சாவொறுப்பை இந்திய உச்சநீதிமன்றம் நிறுத்தியது..!

0
627

paerarivaalan-saanthan-muruganராஜீவ் கொலை “பொய் வழக்கில்” சாவொறுப்பு(மரண தண்டனை) விதிக்கப்பட்ட மூவரின், ஒறுப்பை(தண்டனையை) வாழ்நாள் ஒறுப்பாக(ஆயுள் தண்டனையாக) தலைமை நீதியாளர் சதாசிவம் தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்யுள்ளது. உச்சநீதிமன்றம், இவர்களை விடுதலை செய்வதா வேண்டாமா என்ற முடிவை தமிழகஅரசு எடுக்கலாம் என்று பரிந்துரை செய்துள்ளது.

இது குறித்து ம.தி.மு.க,, பொதுச் செயலாளர் வைகோ கூறியதாவது: இந்த தீர்ப்பு இந்திய நாட்டின் நீதித்துறை சரித்திரத்தில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும்.

ராஜிவ் படுகொலைக்கு துளியும் தொடர்பில்லாத பேரறிவாளன், முருகன், சாந்தன் என்ற மூன்று பேர், சிறையில் கொடுமை அனுபவத்துள்ளனர். தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான அமர்வு கூறுகையில், ‘கால தாமதத்திற்கு அரசு எந்த காரணத்தையும் தெரிவிக்கவில்லை. அவர்கள் சிறைச் சாலையில் மகிழ்ச்சியோடு இருந்தார்கள் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. மேலும், குற்றவியல் நடைமுறை சட்டம் 432 பிரிவின் கீழ், மாநில அரசே அவர்கள் மூவரையும் சிறையில் இருந்து விடுதலை செய்வதையும் பரிசீலிக்கலாம்,’ என்று குறிப்பிட்டுள்ளது.

எனவே, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் அடிப்படையில், முதல்வரின் அதிகாரத்தை பயன்படுத்தி மூவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று முதல்வர் ஜெயலிதாவை கேட்டுக் கொள்கிறேன். இந்தியாவில் மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்பதை இந்த தீர்ப்பு உணர்த்தி உள்ளது, இலங்கை மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் உள்ள அனைத்து தமிழர்களுக்கும் இந்த தீர்ப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு வைகோ கூறினார்.

10 ஆண்டுகள் சிறையில் கழித்த ஆயுள் தண்டனை சிறைவாசிகள் அனைவரையும் விடுவிக் வேண்டும்

தமிழக அரசுக்கு தொல்.திருமாவளவன் கோரிக்கை!

இராஜீவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவருடைய மரண தண்டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனையாகக் குறைத்து வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி நீதியரசர் பி.சதாசிவம் உள்ளிட்ட நீதியரசர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

கருணை மனுவைப் பரிசீலிப்பதில் காலதாமதம் நேரிட்டால் அதைத் தண்டனை குறைப்புக்குக் காரணமாகக் கொள்ளக்கூடாது என மத்திய அரசு முன்வைத்த வாதத்தை உச்சநீதிமன்றம் நிராகரித்திருக்கிறது. இதன் மூலம் இன்னும் பல மரண தண்டனைக் கைதிகள் மரணத்தின் பிடியிலிருந்து விடுபட வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த மகத்தான தீர்ப்பின் காரணமாக உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு உயரும் என்பதில் அய்யமில்லை.

மரண தண்டனைக் கைதிகளின் தண்டனை குறைக்கப்பட்டு ஆயுள் தண்டனையாக ஆக்கப்பட்ட போதிலும் அவர்கள் தொடர்ந்து சிறையில் இருப்பது மிகப் பெரும் அவலமாகும். சில ஆண்டுகளுக்கு முன் தமிழக அரசு பிறப்பித்துள்ள ஆணையே இதற்குக் காரணம். மரண தண்டனையிலிருந்து ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்ட கைதிகளுக்கு கருணை அடிப்படையில் தண்டனை குறைப்புச் செய்து விடுதலை செய்யப்படுவதற்குத் தகுதி இல்லை என தமிழக அரசு ஆணை ஒன்றைப் பிறப்பித்துள்ளது. அதன் காரணமாக, 20 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனையை அனுபவித்தவர்கள்கூட சிறையிலேயே இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்திய அளவில் தமிழ்நாட்டில்தான் ஆயுள் தண்டனைக் கைதிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்பதை தேசிய குற்ற ஆவண மையம் (என்சிஆர்பி) தெரிவித்துள்ளது. இதற்குக் காரணம் தமிழக அரசின் மேற்கண்ட ஆணைதான். எனவே அந்த ஆணையை ரத்துச் செய்து 10 ஆண்டுகள் சிறையில் கழித்த ஆயுள் தண்டனை சிறைவாசிகள் அனைவரையும் விடுவிப்பதற்கு தமிழக அரசு முன்வரவேண்டுமென வலியுறுத்திக்கேட்டுக்கொள்கிறோம்.

இவண்

தொல்.திருமாவளவன்