சிறீலங்காவை பிரித்தானியர்கள் கைவிட்டுச் சென்ற பின்னரான கடந்த 70 வருடங்களில் சிங்கள பெருமன்பான்மை அரசுகள் பல அரசியல் நெருக்கடிகளை தமது பிரதேசத்தில் சந்தித்துள்ளன. சிறுபான்மை இனங்கள் மீது தனது இன அடக்குமுறைகளை பயன்படுத்திவரும் பெருன்பான்மைச் சிங்கள அரசின் இந்த நெருக்கடிகளை தமக்கு சாதகமான ஒரு பேரம் பேசும் அரசியல் காரணியாக பயன்படுத்துவதில் இருந்து பல தடவைகள் தமிழ் இனம் தவறியுள்ளது அல்லது தமிழ் அரசியல் தலைவர்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களால் தவறவிடப்பட்டது ஆனால் சில சந்தர்ப்பங்களில் தமிழர் தரப்பு அதனை சரியாக பயன்படுத்தியும் இருந்தது.

 
அதற்கான சிறந்த உதாரணமாக 1988 ஆம் ஆண்டு தென்னிலங்கையில் அன்றைய அரசுக்கு எதிராக ஜே.வி.பி யினால் முன்னெடுக்கப்பட்ட ஆயுத போராட்டத்தினால் தென்னிலங்கை அரசு மிகப்பெரும் நெருக்கடியை சந்தித்திருந்தது. பல ஆயிரம் சிங்க இளைஞர்கள் கொல்லப்பட்டபோது சிங்கள மக்களை அமைதிப்படுத்தி தனது ஆட்சி அதிகாரத்தை தக்கவைப்பதற்கு அன்றைய அரச தலைவர் பிரேமதாசா அவர்களுக்கு விடுதலைப்புலிகளின் உதவிகள் தேவைப்பட்டது.

 
தமக்கு கிடைத்த பேரம்பேசும் அரசியலை விடுதலைப்புலிகள் சரியாக பயன்படுத்திக் கொண்டனர். தென்னாசியப் பிராந்தியத்தில் அன்று வாழ்ந்த அரசியல் சாணக்கியர்களில் ஒருவர் என வர்ணிக்கப்பட்ட ஜே.ஆர் ஜெயவர்த்தனாவின் அரசியல் சாணக்கியத்தையும் மிஞ்சிய அதி உயர் அரசியல் இரஜதந்திரம் விடுதலைப்புலிகளின் அன்றைய முடிவில் தெரிந்தது.

 
பிரேமதாசாவுடன் பேச்சுக்கள் ஆரம்பமாகியது, தமது போராட்டத்தை வலுப்படுத்த தேவையான உதவிகள் பேரம்பேசும் பொருளாக முன்வைக்கப்பட்டன, தென்ஆசியப் பிராந்தியத்தின் பிராந்திய வல்லரசான இந்தியாவின் மிகச்சிறந்த கொள்கைவகுப்பாளர்களும் ஜெயவர்த்தனாவும் இணைந்து உருவாக்கிய இலங்கை – இந்திய ஒப்பந்தம் நிர்மூலமானது நிரந்தரமாக தளம் அமைக்கும் நோக்கத்துடன் வந்திறங்கிய இந்தியப் படைகள் வெளியேறின. அவர்களால் உருவாக்கப்பட்ட ஆயுதக்குழுக்களும் துடைத்தழிக்கப்பட்டன.

 
அதாவது வடமராட்சியில் மேற்கொள்ளப்பட்ட லிபரேசன்- ஒபரேசன் நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டு பூசா தடைமுகாமில் தடுத்துவைக்கப்பட்ட மக்கள் உட்பட அரசியல் கைதிகள் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை பயன்படுத்தி விடுவிக்கப்பட்டனர், அதன் பின்னர் தென்னிலங்கை நெருக்கடிகளையும் விடுதலைப்புலிகளின் கெரில்லா போர்முறையையும் பயன்படுத்தி இந்தியப் படைகள் வெளியேற்றப்பட்டனர். தமக்கு கிடைத்த எந்த சந்தர்ப்பத்தையும் விடுதலைப்புலிகள் தவறவிடவில்லை.

 
விடுதலைப்புலிகளின் ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட இதனை போல பல அரசியல் நகர்வுகளை நான் இங்கு குறிப்பிட முடியும்.

 
ஆனால் இன்று தமிழர்களின் பிரதிநிதிகள் என கூறிக்கொள்ளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ன நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றது என்பதை உற்று நோக்கினால் அவர்களின் அரசியல் வரட்டுத்தன்மை தெளிவாகப்புரியும்.

 
கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் நாள் சிங்கள தேசம் மிகப்பெரும் அரசியல் நெருக்கடிகளை சந்தித்தது. அந்த அரசியல் நெருக்கடிகளை எவ்வாறு எமக்கு சாதகமாக்கி எமது அரசியல் கோரிக்கைகள் அல்லது தமிழ் மக்கள் போரினால் எதிர்கொண்ட நெருக்கடிகளுக்கான தீர்வை பெறமுடியும் என்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிந்திக்கத் தவறியது மிகப்பெரும் வரலாற்று தவறாகும்.
சிங்கள அரசின் நெருக்கடிகளை பயன்படுத்தி தமிழ் மக்கள் பெறவேண்டிய பல கோரிக்கைகள் எம்வசம் உள்ளன.

 
• காணாமல் போனவர்கள் தொடர்பான சுயாதீன விசாரணையும் அதற்கான தீர்வும்

 
• அரசியல் கைதிகளின் உடனடியான விடுதலை

 
• சிறீலங்கா அரசினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் குழுவின் தீர்மானத்தினை நடைமுறைப்படுத்துதல்

 
• சிங்கள இராணுவத்தினர் ஆக்கிரமிப்பில் உள்ள தமிழ் மக்களின் காணிகளை விடுவித்தல்

 
• அரசியல் தீர்வுப் பொறிமுறைக்கான கால அட்டவணையை நிர்ணயித்தல்

 
இவ்வாறு பல கோரிக்கைகள் எம்வசம் உள்ளபோதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதனை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்பது தமிழ் மக்களின் மனங்களில் கடும் சினத்தை ஏற்படுத்தியுள்ளது.

 
2015 ஆம் ஆண்டு மைத்திரி – ரணில் தலைமையிலான கூட்டாட்சி ஒன்று ஏற்படுத்தப்பட்டபோது அதனை நல்லாட்சி என தெரிவித்து நிபந்தனையற்ற ஆதரவுகளை வழங்கி அனைத்துலகத்தில் சிறீலங்கா அரசுக்கு ஒரு நற்பெயரை ஏற்படுத்திய பெருமையும் அவர்களையே சாரும்.

 
சிறீலங்கா அரசு மேற்கொண்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் அனைத்துலக விசாரணை ஒன்று மேற்கொள்ளப்படவேண்டும் என்ற தமிழ் மக்களின் போராட்டத்தை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு ஏற்றுக்கொள்ளும் நிலையின் விளிம்பில் இருந்தபோது அதனை உள்ளகப்பொறிமுறையாக மாற்றியதில் தமிழத் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் பின்புலம் உள்ளதாக 2015 ஆம் ஆண்டு கருதப்பட்டது.

 
அதாவது பேரம்பேசும் நிபந்தனைகளாக தமிழ் மக்களின் கோரிக்கைகள் எதனையும் கூட்டமைப்பு முன்வைக்கவில்லை. மாறாக எதிர்க்கட்சித் தலைவர் பதவி, நாடாளுமன்றக் குழு பிரதிநிதிகளின் தலைவர் பதவி மற்றும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவர் பதவி ஆகிய 3 பதவிகளையுமே கூட்டமைப்பு கோரியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

 
அதன் பின்னரும் சிறீலங்கா அரசு கொண்டுவந்த மூன்று வரவுசெலவுத்திட்டங்களையும் நிபந்தனையற்று ஆதரித்து சிங்கள அரசை வலுப்படுத்திய பெருமையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையே சாரும்.

 
வரவு செலவுத்திட்டத்தை ஆதரிப்பதன் மூலம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை உறுதிப்படுத்திக் காண்பித்தால் தான் ரணில் தலைமையிலா அரசு மூலம் அரசியல் தீர்வு ஒன்றை நாம் எட்டமுடியும் என்பதே தான் வழங்கிய ஆதரவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சம்மந்தன் அவர்கள் தமது உறுப்பினர்களுக்கு அளித்த விளக்கமாகும்.

 
ஆனால் சிங்கள கட்சிகள் தமது தமிழர் எதிர்ப்பு மனநிலையில் இருந்து ஒரு அங்குலம் தன்னும் நகரப்போவதில்லை என்பது உலகத்தமிழ் இனம் அறிந்த உண்மை எனினும் தன்னை ஒரு அரசியல் சாணக்கியர் எனக் கருதும் சம்பந்தருக்கு அது எவ்வாறு தெரியாமல் போனது?.

 
இதில் என்ன வேடிக்கை என்றால், கடந்த 3 வரவு செலவுத்திட்டங்களிலும் சிறீலங்கா படைத்துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியின் அளவு மிகவும் அதிகம். அதாவது 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் போர் தீவிரமாக இடம்பெற்ற போது மேற்கொள்ளப்பட்ட அதிகரிப்பை விட மிக அதிகம். அதனை அறிவதற்கு நீங்கள் கீழே உள்ள தரவுகளை பார்க்கலாம்.

 
ஆண்டுகள்                  பாதுகாப்புச் செலவு (பில்லியன் ரூபாய்கள்)
2008                                                    166
2009                                                    177
2016                                                     307
2017                                                     284
2018                                                     290
2019                                                      306

 

 

2008 ஆம் ஆண்டு சிறீலங்கா அரசு மிகப்பெரும் ஒதுக்கீடு ஒன்றை செய்திருந்தது அதற்கான காரணம் அதன் வான்படையின் அதிகரிப்பாகும், அதாவது சிறீலங்கா வான்படை 25 விகித வளர்ச்சியை கண்டிருந்தது அதற்கான ஆயுதக் கொள்வனவுக்கே சிங்கள அரசு மிகப்பெரும் நிதியை ஒதுக்கியிருந்தது.

 
அதன் பின்னர் 2009 ஆண்டு 177 பில்லியன் ருபாய்களை சிங்கள அரசு ஒதுக்கியதுடன், அதற்கு மேலதிகமான 15 விகித நிதியை ஒதுக்கி தமிழ் மக்கள் மீதான மிகப்பெரும் இனப்போர மேற்கொள்வதற்கு தேவையான 25,000 இராணுத்தினரை மேலதிகமாக படையில் இணைத்திருந்தது.

 
அதாவது போரின் போது சிறீலங்கா அரசு ஒதுக்கிய நிதிக்கான காரணங்கள் உண்டு. ஆனல் போர் நிறைவடைந்த பின்னர் போரின் போது செலவிட்ட தொகையை விட அதிக தொகையை சிறீலங்கா அரசு செலவிட காரணம் என்ன?

 
ஆம் தமிழ்ப் பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் இராணுவமயமாக்கல், சிங்கள குடியேற்றங்கள், படையினரின் குடும்பங்களை குடியேற்றுதல், அவர்களை பராமரித்தல், சிறீலங்கா படையினர் மூலம் மேற்கொள்ளப்படும் உதவிகள் மூலம் தமிழ் மக்களின் மனங்களை வென்று தமிழ் பிரதேசத்தில் சிங்களப் படையினரின் நிரந்தரமான இருப்புக்கு வழிஏற்படுத்துதல் என்பவற்றிற்காக ஒதுக்கப்படும் நிதியே இதுவாகும்.

 
வெள்ளம் வரும்போது சிறீலங்கா இராணுவம் ஓடிச்சென்று மீட்புப் பணிகளைச் செய்கின்றது, ஆலயங்களை புனரமைக்கின்றது, தமிழ் பகுதிகளில் பௌத்த மயமாக்கலை மேற்கொள்கின்றது, சுற்றுலா விடுதிகளை கட்டுகின்றது, ஆலயங்களில் அங்கு செல்பவர்கள் இளைப்பாற மடங்களைக் கட்டுகின்றது இவ்வாறு சிறீலங்கா படையினரால் மேற்கொள்ளப்படும் பல நூறு செயற்திட்டங்களை நான் இங்கு குறிப்பிட முடியும். ஆனால் அதற்கு இங்கு இடம் போதாது.

 
அதாவது பாதுகாப்புச் செலவீடு என ஒதுக்கப்படும் நிதி மூலம் சிறீலங்கா படைத்தரப்பு தமிழ்ப் பிரதேசங்களில் சிங்கள மயமாக்கலையும், இராணுவமயமாக்கலையும் சந்தமின்றி செய்து வருகின்றது. அது மட்டுமல்லாது, அந்த நிதியை பயன்படுத்தி தமிழ் அரசியல்வாதிகளை தனக்கு சாதகமாகவும் திருப்பியுள்ளது.

 

இந்த நிதியே தனக்கு சாதகமான தமிழ் அரசியல்வாதிகளின் தேர்தல் செலவுக்காக இரகசியமாக வழங்கப்படும் நிதியாகும். ஏனெனில் பாதுகாப்புச் செலவீனத்தின் கணக்குக்களை யாரும் சரிபார்க்க முடியாது, அது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது என்ற காரணத்தை முன்வைத்து எல்லோரினதும் வாயையும் மூடிவிடலாம்.

 
தற்போது எதிர்வரும் ஜனவரி மாதம் சிறீலங்கா அரசு கொண்டுவரவுள்ள வரவுசெலவுத்திட்டத்திலும் மிக அதிக தொகை பாதுகாப்பு செலவீனத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது கடந்த வரவு செலவுத்திட்டத்தில் ஒதுக்கப்பட்டதை விட 1000 கோடிகள் அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அது மட்டுமல்லாது 2023 ஆம் ஆண்டு வரையிலும் சிறீலங்கா அரசு இவ்வாறான மிகப்பெரும் தெகையையே படைத்தரப்புக்கு ஒதுக்கப்போகின்றது என பாதுகாப்பு புலனாய்வு மையம் (Strategic Defence Intelligence -SDI) தனது ஆய்வில் தெரிவித்துள்ளது.

 
தற்போதைய நிலையில் சிறீலங்கா அரசு தனது வரவுசெலவுத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றால் அதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுகள் தேவை.

 
ஆனால் வழமைபோல வடக்கு கிழக்கில் இருந்து படையிரை வெளியேற்றுவோம், படையினர் வசமுள்ள காணிகளை விடுவிப்போம், அரசியல் கைதிகளை விடுவிப்போம் என கூறிக்கொண்டு இராணுவமயமாக்கலை ஊக்குவிக்கும் வரவுசெலவுத்திட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரிப்பது என்பது ஒரு அரசியல் ஏமாற்றுத்தனமாகும்.

 
எதிர்வரும் வரவுசெலவுத்திட்டத்தை நிபந்தனையற்று ஆதரித்து தமிழ்ப் பிரதேசங்களில் ஏற்படுத்தப்படும் இராணுவமயமாக்கலை தமிழத் தேசியக் கூட்டமைப்பு நேரிடையாக ஆதரிக்கப்போகின்றதா அல்லது அதனை ஒரு பேரம்பேசும் அரசியல் பொருளாக்கி தமிழ் மக்களின் சில கோரிக்கைகளையாவது சிறீலங்கா அரசிடம் இருந்து பெறப்போகின்றதா என்பதே தற்போதைய கேள்வி.

 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் அவர்களிடம் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் வறட்சியானது அவர்களுக்கு சிங்கள அரசிடம் சரணடையும் நிலையையும், ரணிலா – மகிந்தாவா என்ற ஒரு மலிவான அரசியலையும் மேற்கொள்ளும் நிலையையும் ஏற்படுத்தியுள்ளது.

 
ஆனால் அவர்களை தெளிவுபடுத்தி எமது கோரிக்கைளை நிறைவேற்றக் கிடைக்கும் பேரம்பேசும் அரசியல் சந்தர்ப்பங்களை தவறவிடாது பயன்படுத்தும் அழுத்தங்களை தமிழ் மக்கள் அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.

 
சிறீலங்கா அரசின் வரவுசெலவுத்;திட்டத்தை நிபந்தனை அற்ற முறையில் ஆதரிக்க வேண்டாம் என்ற கோரிக்கைகளை தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் முன்வைப்பதுடன், அதற்கான ஜனநாயகப் போராட்டங்கள் தொடர்பிலும் தயாகத்திலும் புலம்பெயர் தேசத்திலும் உள்ள மக்கள் சிந்திக்க வேண்டும்.

 
இது தொடர்பில் ஏற்படும் எமது விழிப்புணர்வானது அனைத்துலக மட்டத்தில் ஒரு தாக்கத்தை எற்படுத்தும் என்பதுடன் முக்கியத்துவமும் பெறும் ஏனெனில் தமிழ் மக்கள் தமது பிரதிநிதிகளிடம் தமது கோரிக்கைகளை முன்வைத்து போராடுகின்றனர் என்ற கருத்துக்கு அதிக பெறுமதி உள்ளது.

 
அதற்கான முன்னெடுப்புக்களை தமிழ் இன ஆவலர்களும், மாணவர்களும், தமிழ் மக்களும் முன்னெடுக்க வேண்டும். தமிழ் அரசியல்வாதிகளை கட்டுப்படுத்தும் சக்தி ஒன்று மக்களிடம் உண்டு என்பதை நாம் உலகிற்கும், சிறீலங்கா அரசுக்கும் உணர்த்தும் தருணமிது என்பதுடன், போரினால் பாதிக்கப்பட்டு தற்போதும் நடு வீதியில் கிடந்து தமது வாழ் நிலங்களுக்காகவும், தமது உறவினர்களின் விடுதலைக்காகவும் போராடும் மக்களுக்கு நாம் ஆற்றும் சிறு உதவி இது.

 
நன்றி: இலக்கு வார ஏடு