“இராமர் ஆண்டால் என்ன, இராவணன் ஆண்டல் என்ன” என்பது பழமொழி. இவர்கள் இருவரில் யார் ஆட்சி செய்தால் என்ன, மற்றவர்களுக்கு என்ன பயன் என்பதையே இப்பழமொழி உணர்த்துகிறது.

இலங்கைதீவில் தற்பொழுது ஜனதிபதி தேர்தல் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. தினமும் பலர் தரப்பினரிடமிருந்து பலவிதப்பட்ட கருத்துக்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது இவ்வேளையில் தமிழர் தவிர்ந்த வேறு யாரும், விசேடமாக சிங்கள தலைவர்கள் இனப்பிரச்சனைக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

ஜனதிபதி தேர்தல் அறிவித்து இன்று இராண்டு வாரங்கள் கழிந்து விட்டன. யார் தான் தமிழர்களை தேடினார்கள். இதற்கு எதிர்மாறாக, ஜனதிபதி ராஜபக்சாவின் வலதுகரமான சிறிபல டீ சில்வா, பிரியதர்சன யாப்பா தமிழர் கூட்டமைப்பின் உதவியே தங்களுக்கு தேவையில்லையென தமிழ் இனத்தை மானபங்கப்படுத்தியுள்ளார்கள்.

புலம்பெயர்வாழ் தலைவர்களென தமக்கு தாமே பெயர் சூட்டியுள்ள தமிழர்களுக்கு இலங்கைதீவில் நடைபெறவுள்ள ஜனதிபதி தேர்தலில் என்ன அலுவல்? முதலாவதாக இவர்கள் யாரும் வாக்களார் அல்லா. அடுத்து நாட்டில் ஆயிரம் கஷ்டத்திற்குள் உயிரை கையில் பிடித்து கொண்டு வாழும் மக்களிடம் – எதிர்வரும் ஜனதிபதி தேர்தலில் நீங்கள் வாக்களியாதீர்களென ஒரு பிரிவும், வாக்களியுங்களென இன்னுமொரு பிரிவும் சொல்வதற்கு இவர்கள் யார்? இவர்கள் வாழும் நாடுகளில் உள்ள அரசாங்கங்களிற்கு தமிழர்களது பிரச்சனையை ஒழுங்காக பரப்புரை செய்ய முடியாத இவர்கள, இலங்ககைதீவின் ஜனதிபதி தேர்தலிற்குள் அழைய விருந்தினராக அறிக்கைகள் விடுவது வேடிக்கையானது.

இதில் இன்னுமொரு கூட்டம் முன்பு செய்த தவறை இம்முறையும் செய்துவிடாதீர்களென புலம்பெயர் வாழ் தமிழர்களுக்கும் கூறுகிறார்கள். உண்மையில் 2005ம் ஆண்டு நடந்த விடயத்திற்கும் புலம்பெயர் வாழ் தமிழர்களுக்கும் என்ன சம்பந்தம்? அவ்வேளையில் தமிழீழ விடுதலை புலிகள் செல்வாக்குடன் இருந்து சில முடிவுகளை எடுத்தார்கள். அவ் முடிவுகள் சில வருடங்களில் இலங்கைதீவின் அரசியலையே மாற்றியது என்பதை நாம் மறுக்கவில்லை. இதற்காக புலம்பெயர் வாழ் தமிழர்களை ஏன் குறை கூறவேண்டும்?

10409321_745032095581723_3806977554929106656_n
அன்று புலிகள் செய்தது சரியா பிழையா என இன்று வீண் வியாக்கியனம் செய்வோர், மிக நீண்ட காலமாக புலிகளை அழிக்க வேண்டுமென்பதற்காக சிறிலங்கா அரசுடன் கைகோர்த்து நின்றவர்கள். இன்று இவர்கள் என்ன செய்கிறார்கள்? இவர்களில் அரைவாசியினர் தொடர்ந்தும் ராஜபக்சாவின் புலனாய்வு வேலைகளில் ஈடுபட்டுள்ளார்கள் – மக்கள் கடைக்கு முன்னாலும், தமிழர்களின் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு தகவல் சேகரிக்கிறார்கள். மற்றைய அரைவாசியினர் தமது புலி எதிர்ப்பினால் இன்று தமிழ் இனமே நாசமாகிவிட்டதென கவலையில் உள்ளார்கள். இவர்கள் பணத்திற்காக இனத்தை விற்றவார்கள்.

மகிந்தாவின் அரசியல்

மூன்றாவது முறையாக போட்டி போடவுள்ள மகிந்த ராஜபக்சாவினுடைய – வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்கள் மீதான பார்வை, கொள்கை, செயற்திட்டங்கள் என்ன என்பதை ஏற்கனவே முழு உலகமே அறியும்.

இவரை பொறுத்த வரையில், முள்ளீவாய்க்காலின் பின்னர் இலங்கைதீவில், சிறுபான்மை இனமென்று ஒன்றோ, அல்லது இனப்பிரச்சனை என்று ஒன்றோ இல்லை, 13வது திருத்தச்சட்டம் மட்டுமன்றி, இவரது அரசினால் தயாரிக்கப்பட்ட ஏல்.ஏல்.ஆர்.சி. எனப்படும் நல்லிணக்க அறிக்;கை யாவும் ஏற்கனவே நடைமுறை படுத்தப்பட்டுள்ளது. இவருடைய திருகுதாளங்களினால் தான் சர்வதேச சமூதாயத்தினுடைய அனுதாபமும், ஆதரவும் தமிழ் மக்களுக்கு உண்டு.

ஜனதிபதி ராஜபக்சாவிற்கு எதிரான பொது வேட்பாளரை ஒருங்கிணைத்து நிறைவேற்றியவர்கள், இனப்பிரச்சனை பற்றி மௌனம் சாதிப்பது மிக ஆபாயமானது. இதில் முன்னாள் ஜனதிபதி சந்திக்கா பண்டாரநாயக்க, ஐக்கிய தேசியக் கட்சியும் அதனது முக்கிய உறுப்பினர்களான ரணில் விக்கிரமசிங்கா, மங்கள சமரவீரா, முன்னாள் இராணுவ தளபதியும் முன்னாள் ஜனதிபதி வேட்பளாருமான சரத் பொன்சேக்கா, பிரபல பௌத்த துறவி – சோவித் தோரோ, முன்னாள் பிரதம நீதிபதி சரத் என் சில்வா உட்பட பலர் அடங்குவார்கள்.

இவர்கள் யார்?

இவர்கள் யாரென நாம் ஆராயுமிடத்து, இந்த கூட்டணி தமிழ் மக்களுக்கு ஏதும் உருப்படியாக செய்வார்கள் என்பது கேள்விக்குறி.

முன்னாள் ஜனதிபதி சந்திக்கா பண்டாரநாயக்க, ‘சமாதானத்திற்கான போரை’ நடத்தி தனது ஆட்சி காலத்தை கடத்தியவர். இன்று இவர்கள் கூறும் ஜனநாயகம் என்ன? இவர் ஆட்சி காலத்தில் தமிழர் படுகொலைகள், செம்மணி உட்பல பல இடங்களில் நூற்றுக்கணக்கான தமிழர் காணமல் போதல், ஆட்கடத்தல் போன்றவை நடைபெற்றன. இதற்கு காக சந்திரிக்காவோ அல்லது, இவரின் பின்னர் பதவிக்கு வந்த ராஜகப்சாவோ எந்த விசாரணயோ நடவடிக்கையோ எடுக்கவில்லை.

சரத் பொன்சேக்கா முள்ளீவாய்க்கால் அவலங்களின் பின்னர் இராண்டு லட்சம் பேரை புதிதாக இராணுவத்தில் சேர்க்க முற்பட்டவர். தமிழர்களது தாயாக பூமியான வடக்கு கிழக்கை முழதாக இராணுவமயப்படுத்துவதே இவரது திட்டம். போர் காலத்தில் இவரது செவ்விகளில் சிறுபன்மை இனம் பற்றி என்ன கூறினார் என்பது பற்றி யாவரும் அறிவார்கள்.

மங்கள சமரவீரா, தமிழீழ விடுதலை புலிகளை சர்வதேச ரீதியாக தடைசெய்வதற்கு இரவு பகலாக உழைத்து வெற்றியும் கண்டவர். மிக அண்மையில் ஐரோப்பிய நீதி மன்றம், தமிழீழ விடுதலை புலிகள் மீதான தடை சட்டவிரோதமானது என தீர்பழித்ததும், ராஜபக்சா அரசில் மீண்டும் வெளிநாட்டு அமைச்சாரா இணைய முயற்சித்தவர். இதனது நோக்கம் தமிழீழ விடுதலை புலிகளை தொடர்ந்து சர்வதேச ரீதியாக தடைசெய்யப்பட வேண்டுமென்பதே இவரது நோக்கம். ஜனதிபதி தேர்தலில் ராஜபக்சா வெற்றிவகை சூடும் காட்டத்தில், இவர் நிட்சயம் ராஜகப்சாவுடன் இணைவார்.

முன்னாள் பிரதம நீதிபதி சரத் என் சில்வாவே இன்று ராஜபக்சாவின் சர்வாதிகார ஆட்சிக்கு வழிவகுத்தவர். இவர் காலத்திலேயே சிறிலங்காவின் நீதித்துறை அரசியல் மய மயமாக்கப்பட்டப்படுத்தப்பட்டது. வடக்கு கிழக்கு பிரிப்பு பற்றிய தீர்ப்பு இதற்கு நல்ல ஊதாரணம்.

மைத்திரிபால சிறிசேன

இப்படியானவர்களின் ஒருங்கிணைப்பு ஆதரவுடன் உருவானவரே, முன்னாள் சுகதார அரமச்சரும், இன்னாள் பொது ஜனதிபதி வேட்பாளருமான மைத்திரிபால சிறிசேன. இவர் ஒழுக்கமான நேர்மையான அரசியல்வாதியாக இருக்கலாம், ஆனால் இவர் இனப்பிரச்சனை பற்றி மௌனம் சாதிப்பது புதுமையானதல்லா. இவரை அறிந்து கொள்வதற்கு, சிறிலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளராக இவர் இருந்த காலத்தில், அக்கட்சி இனப்பிரச்சனைக்கு ஆற்றிய சேவை ஒன்றே போதும். இவர் எல்.எல்.ஆர்.சி. அறிக்கையை நடைமுறைப்படுத்த போவதாக இவர் சார்பாக சிலர் கூறுகிறார்கள்!

எல்.எல்.ஆர்.சி. நல்லிணக்க அறிக்கை என்பது, ஜனதிபதி ராஜபக்சாவின் சர்வதேச பிரச்சாரா குழுவின் ஆலோசனைக்கு அமைய, சர்வதேச சமூதாயத்தை ஏமாற்றுவதற்காக வரையப்பட்டதே. இவ் அறிக்கையை சர்வதேசம் முற்று முழுதாக ஏற்கவில்லையென்பது ஒருபுறமிருக்க, ஆறு தசாப்பதங்களாக அரசியல் தீர்விற்காக ஆயிரக்கணக்கான உயிர்களை அர்பணித்து போராட்டங்களை நடத்திய தமிழர்களுக்கு, இதில் எந்தவித ஒழுங்கான தீர்வு திட்டமும் சுட்டிக்காட்டப்படவில்லை. நடந்தேறிய போர் குற்றங்களுக்கு உள்நாட்டு விசாரணையென இவ் அறிக்கை கூறுகிறது. இவ் அறிக்கையை தான் மைத்திரிபால சிறிசேன நடைமுறைப்படுத்தப் போகிறரா?

வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களை பொறுத்தவரையில், எனது முன்னைய கட்டுரைகளில் எழுதியது போல், எமது அரசியல் பிரச்சனைக்கான தீர்விற்கு, இராண்டே இருவழிகள் தான் உள்ளது.

10835098_885766741442744_8551145311750244127_o
எமது லட்சியத்தை அடைவதற்கான முதல் கட்டமாக, 13வது திருத்தச் சட்டத்தை இந்தியாவின் அழுத்தம் ஆதரவுடன் முழுமையாக அமுல் செய்ய வேண்டும். அடுத்தபடியாக தற்போதைய சர்வதேச நீதி விசாரணையின் முடிவில், இலங்கைதீவில், வடக்கு கிழக்கு வாழ் மக்களுக்கு நடைபெற்றவை, நடந்து கொண்டிருப்பவை யாவும், இனஅழிப்பு என ஐ.நா. கூறும் கட்டத்தில், நாம் எமது வெளிவாரியான சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை சர்வதேச ஆதரவுடன் தொடர்வது. இவை தவிர்ந்த வேறு யாவும் கற்பனை கதைகளே.

சிலர் இடைகால அரசின் வரவிலக்கணம் புரியாது, தமிழ் மக்களுக்கு இடைக்கால அரசு வேண்டுமாம். இன்னுமொரு பகுதி, நாடு பிரிவதற்கான வாக்கெடுப்பு நடத்துமாறு கேட்கின்றனர்.

ஐ.நா.வின் அறிக்கை இலங்கைதீவில் தமிழர்களுக்கு நடைபெற்றவை இன அழிப்பின் அடிப்படையிலேயே நடந்தவையென கூறும் பட்சத்தில், மற்றைய நாடுகளில் நடந்தது போன்று சர்வதேச வாக்கெடுப்பு காலப்போக்கில் நடைபெறலாம். இதற்கு எமது சர்வதேச பிரச்சாரம் இறுக்கமாக தொடரவேண்டும்.

தமிழர்களது தாயாக பூமி

கடந்த ஐந்து வருடங்களில் வடக்கு கிழக்கில் நடைபெற்று வருகின்ற – இராணுவமயம், சிங்களமயம், பௌத்தமயம் ஆகியவையினால் தமிழர்களது ஆயிரம் காலத்து தாயாக பூமி துண்டாடப்பட்டுள்ளது.

தமிழர்களுடைய பூர்விக பூமியில் இன்று லட்சக்கணக்கான சிங்கள குடியேற்றம், இராணுவ குடியேற்றம், ஏறக்குறை 400 பௌத்த விகாரைகள் வடக்கில் மட்டும் உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றை நாம் எப்படியாக அணுகப்போகிறோம் என்பதை, தமிழீழ விடுதலை புலிகளை அழிப்பதற்கு கங்கணம்கட்டி நின்ற தமிழ் ஒட்டுக் குழுக்களும், தனிப்பட்ட விரோதங்களுக்காக தமிழீழ விடுதலை புலிகளுக்குள் இருந்து கொண்டே, மூன்று தசாப்தங்களாக கட்டி எழுப்பப்பட்ட இயக்கத்தை ராஜபக்சா அரசுடன் ரகசியமாக கூட்டு சேர்ந்து, சில வருடங்களுகளில் வேரோடி அழித்தவர்கள் தான் மக்களுக்கு பதில் கூறவேண்டும்.

தமிழீழ விடுதலை புலிகள் சில தவறுகளை செய்தார்கள் என்பதை யாரும் மறுக்கவில்லை. இதற்காக ஓர் இன விடுதலை போராட்டத்தை வெற்றியுடன் முன்னின்று நடத்தியவர்களை அழிக்க வேண்டுமா? இதை முன்னின்று செய்தவர்கள் கடந்த ஐந்து வருடத்தில் தமிழ் மக்களுக்கு என்னத்தை பெற்று கொடுத்ததுள்ளார்கள்?

சர்வதேச நீதி விசாரணை

திரு சிறிசேனாவை வெற்றிகரமாக நிறுத்தியவர்கள, சர்வதேச நீதி விசாரணையை ஆதரிக்கிறார்களா? சர்வதேச நீதி விசாரணையாளர்களை நாட்டிற்குள் அனுமதிப்பார்களா? அல்லது வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்களமயம், பௌத்தமயம், இராணுமயத்தை நிறுத்துவார்களா? நிடசயமாக இல்லை.

பொது வேட்பாளராக நியமிக்கப்பட்ட மைத்திரிபால சிறிசேன, தனது முதல் உரையிலேயே “நாம் சரத் பொன்சேக்காவை மறக்க முடியுமா?” என கேள்வி எழுப்பியுள்ளார். சரத் பொன்சேக்க யார் என்பது பற்றி யாவரும் அறிவார்கள்.

இவற்றில் ஈ.பி.டி.பி. தலைவரின் கருத்து மிகவும் வியப்பானது. “தமிழர்களின் பிரச்சினைளுக்கு தீர்வுகாண ராஜபக்சாவினால் மாத்திரமே முடியுமாம்”! கடந்த ஐந்து வருடங்களாக பாரளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கொண்டுள்ள ராஜபக்சா, தமிழர்கள் வாழும் பிரதேசத்தில் – பௌத்தமயம், இராணுவமயம், சிங்களமயம் ஆகியவற்றை தவிர்ந்து, வேறு எதை அரசியல் ரீதியாக தமிழர்களுக்கு செய்துள்ளார்? ஈ.பி.டி.பி. தலைவருக்கு ராஜபக்சாவில் இப்படியொரு நம்பிக்கையிருந்தால், தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனை இவர் எப்பொழுது தீர்த்து வைப்பார் என்பதை கூறுவாரா?

“ஈ.பி.டி.பி. தலைவர் தன்னை சந்திக்க வருகிறார் என்றால், ‘சல்லி’ கேட்க வருகிறார் என்பதே அர்த்தம்” என்று ராஜபக்சா தனது நண்பர்களுக்கு கூறுவராம். இதில் என்ன வியப்பு!

இன்னுமொருவர் மதுபோதையில், அரைகுறை ஆங்கிலத்தில், பாரளுமன்றத்தில் ராஜபக்சா அரசு தவிர்ந்த மற்றவர்கள் தமிழ் மக்களுக்கு என்ன கொடுமைகள் செய்தார்கள் என பட்டியலிட்டு ‘முதளை கண்ணீர்’ விடுகிறார். யாவும் பதவியை காப்பதற்கான பேச்சுகளும் அறிக்கைகளுமே.

கடந்த சில நாட்களாக பொது வேட்பளார் சிறிசேனா உட்பட, ஐக்கிய தேசியக் கட் உறுபினர்கள், மற்றைய எதிர் கட்சியினர் வெளிப்படைய கூறுவதை நாம் மிக கவனமாக ஆராய வேண்டும். “ராஜபக்சா வென்றாரோ தோற்றரோ, நாம் அவரையோ அல்லாது வேறு எந்தவொரு சிறிலங்காவின் தலைவர்களையோ சர்வதேச நீதி மன்றத்தின் முன் நிறுத்த அனுமதிக்க மாட்டோம” என்று அறுத்து உறுத்து கூறுகிறார்கள்.

முன்னாள் ஜனதிபதி பிரேமதாசவின் மகன் சஜித் சொல்கிறார், “எதிரணியின் புதிய ஆட்சியில், சர்வதேச ரீதியில் எஞ்சியுள்ள விடுதலை புலிகளை முழுமைய ஓழிக்கப்படுவார்களாhம”. இதே சாஜித், தகப்பன் பிரேமதாச தமிழீழ விடுதலை புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய காலத்தில், இந்தியா இராணுவத்தை எதிர்த்து போராடிய புலிகளின் திறமையை பாராட்டியது மட்டுமல்லாது, கொழும்பில் தங்கியிருந்த அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம், யோகி உட்பட பலருடன் புகைப்படம் எடுப்பதற்கு ஆசைபட்டு, நேரங்கள் ஒதுக்கப்பட்டு, பெருமகிழ்சியுடன் புலி அங்கத்தவர்களுடன் படம் எடுத்தவர். இப்பொழுது இப்புகைப்படங்களை இவர் எங்கு ஒளித்து வைத்துள்ளரோ தெரியவில்லை!

தமிழர் அரசியல் தீர்வு சர்வதேசத்திடம்

பல தசாப்தங்களா சர்வதேச ரீதியாக, புலிகள், புலி ஆதரவாளர்கள், பயங்கரவாதிகள் என எம்மீது பலர் வேறுபட்ட குற்றச்சாட்டுக்கள் முன்வைத்த பொழுதும்; கொழும்பு அரச ஆங்கில, சிங்கள, தமிழ் ஊடகங்கள் எம்மை திட்டி செய்திகள் கட்டுரைகள் வெளியிட்ட பொழுதும்; உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சிங்கள தீவிரவாதிகள் மட்டுமல்லாது, எம்மீது எரிச்சல் பொறாமை கொண்ட சந்தர்பவாத தமிழர், எமக்கு எதிராக கபடமான பரப்புரைகளை மேற்கொண்டபொழுதும், சகலதையும் அலட்சியம் பண்ணி, இலக்கை நோக்கி தனித்து நின்று தொடர்ந்து இரு தசாப்தங்களாக ஆயாராது உழைத்ததான் பலனாக, இன்று பல நாடுகள், பல சர்வதேச அமைப்புக்கள், 2009ம் ஆண்டின் பின்னர் வேறுபட்ட புலம் பெயர்வாழ் தமிழ் அமைப்புக்களின் ஒருங்கிணைப்பின் பலனாக, தற்பொழுது இலங்கைதீவில் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனை சர்வதேசத்தின் கண்களை, விசேடமாக ஐக்கிய நாடுகள் சபையின் கண்களை திறக்க வைத்துள்ளது.

இவ் எழுச்சியை மழுங்கவிடாது பார்ப்தே புலம் பெயர் வாழ் தமிழர்கள் ஒவ்வொருவரின் கடமை. இவ் நிலையிலிருந்து நாம் ஒரு துளிகூட தவறுவோமானால், நாம் மீண்டும் சிங்கள தலைவர்களினால் ஏமாற்றப்பட்டு, இறுதியில் சிறுபான்மையினருக்கான உரிமையுடன் வாழ நேரிடும்.

இலங்கைதீவில் வாழும் தமிழ் மக்கள, இவ் ஜனதிபதி தேர்தலினால் தாம் என்ன லாபத்தை அடையலாம் என்பதில் மிக கவனமாகவும் அவதானமாகவும் இருக்க வேண்டும். இல்லையேல், ‘பொரியல் சட்டியிலிருந்து நெருப்பிற்குள் விழுந்த’ கதையாக தான் முடிவார்கள்.

அமெரிக்காவின் ஆளும் ‘ஜனநாயக’ காட்சி முக்கியஸ்தர்களிற்கும், முன்னாள் ஜனதிபதி சந்திரிக்காவிற்குமிடையில் நல்ல நெருக்கமான உறவுகள் உண்டு. ஆகையால் மைத்திரிபால சிறிசேன வெற்றியீட்டும் கட்டத்தில், தமிழர்கள் மீதான அனுதாபமும், ஆதரவும் அமெரிக்காவிற்கு இல்லாமல் போவதற்கு நிறைய வாய்ப்புக்கள் உண்டு.

ஜனதிபதி தேர்தலில் இருவர் மட்டுமல்லா, பலர் போட்டியிடவுள்ளார்கள். ஆகையால் இவர்கள் இருவரில் ஒருவருக்கு தான் வாக்களிப்பது ஜனநாயம் அல்லா. போட்டியிடுபவர்களில் விரும்பிய யாருக்கும், தமிழர் தமது வாக்குகளை அளிக்க முடியும். இது நிட்சயம் தேர்தல் பகிஷ்கரிப்பல்லா.

ச. வி. கிருபாகரன்

பிரான்ஸ்.

06 – 12- 2014