கல்வான் பள்ளத்தாக்கில் சீன எல்லைப்படை வீரர்களால் தாக்கப்பட்டு இந்திய ராணுவத்தினர் 23 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் வினோதம் இவர்களை துப்பாக்கிச் சூட்டில் சாகவில்லை, முட்கம்பி சுற்றப்பட்ட இரும்புத் தடிகளால் அடித்தே கொல்லப்பட்டுள்ளனர் என்பது. மேலும் பலர் இந்த தாக்குதலில் இருந்து தப்பிக்க வெளியே ஓடியதில் கடும் உறைகுளிர் சீதோஷ்ணத்தால் பாதிக்கப்பட்டும், கல்வான் நதியில் குதித்து தப்பிக்க முயல்கையில் சீன ராணுவத்தால் தாக்கப்பட்டு (மீண்டும் இதே தடியால் தான்) கொல்லப்பட்டதாகவும் செய்திகள் கூறுகின்றன.

பாபு எனும் ஒரு கர்னலும் பலியாகியிருக்கிறார். நூற்றுக்கு மேற்பட்ட இந்திய ராணுவத்தினர் இந்த தாக்குதலில் காயம்பட்டுள்ளனர். சிலர் உயிருக்குப் போராடி வருகிறார்கள். சீன ராணுவம் சிலரைக் கைப்பற்றிக் கொண்டு போய் கொன்றிருக்கிறார்கள்; பேச்சுவார்த்தைப் பிற்கு சிலரை திரும்ப ஒப்படைத்திருக்கிறார்கள்.

நான் இப்போதுதான் முதன்முதலாய் ராணுவத்தினர் ஏதோ கல்லூரி மாணவர்களைப் போல கைத்தடிகளால் பரஸ்பரம் தாக்கிக் கொள்வார்கள் என்பதைக் கேள்விப்படுகிறேன். புகைப்படங்களில் அவர்கள் சதா ஏந்தியிருக்கும் விலையுயர்ந்த துப்பாக்கிகள் எங்கே? வெடிகுண்டுகள், டாங்கிகள் மற்றும் ஏவுகணைகள் எங்கே? இப்போதெல்லாம் தமிழ் சினிமாவில் கூட குண்டாந்தடியால் வில்லன்கள் தாக்க வருவதில்லை.

குறைந்தது அருவாளாவது ஏந்தி வருகிறார்கள். இயக்குநர் ஹரி இப்படி படப்பிடிப்புக்காக சொந்தமாக பல அருவாக்களை எப்போதும் வைத்திருப்பார் என்று சொல்கிறார்கள். நம் ராணுவத்திடம் இது கூட இல்லையா? கேங்ஸ்டர் படங்களில் பட்பட்டென எடுத்து சுடுகிறார்களோ அவை கூட இல்லையா? இங்கு தான் நாம் வெளியுறவுத் துறையின் கருணையற்ற அணுகுமுறையை, தமது அரசியலுக்காக போர் வீரர்களை (கூடவே பொதுமக்களையும்) பலிகொடுக்கும் போக்கை கவனிக்க வேண்டும். அதற்கு முன்பு இந்த கல்வான் பள்ளத்தாக்கு லடாய் என்ன, அதன் வரலாற்றுப் பின்னணி என்னவென அறிய வேண்டும்.

இந்த கல்வான் பள்ளத்தாக்கு இந்தியாவின் லடாக் பிராந்தியத்திற்கும் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள அக்சாய் சீனா பகுதிக்கும் இடையே அமைந்துள்ளது. அகாய் சீனா என்பது ஒரு காலத்தில் இந்தியாவின் எல்லைக்கு உட்பட்ட பகுதியே; ஆனால் அறுபதுகளில் சீன ஒரு சாலையை அமைத்து இதை எடுத்துக் கொண்டது. இந்தியா சீனா நாடுகளைப் பிரிப்பதே இந்தப் பள்ளத்தாக்கு வழியாக செல்லும் கட்டுப்பாட்டு எல்லைக் கோடுதான்.

அண்மைக் காலமாக இந்தியா இந்த எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் சில பாதுகாப்பு கட்டுமனங்களை அமைத்து வருகிறார். இது சீனாவை எரிச்சல்படுத்துகிறது; அவர்கள் தமது ராணு ரோந்தை அங்குள்ள ஏரியில் படகுகள் வழி அதிகப்படுத்த இந்தியாவும் தன் பங்குக்கு ரோந்தை உக்கிரமாக்கியது. அடுத்து ஒரு பக்கம் இந்தியா-சீனா பேச்சுவார்த்தையும் இருநாட்டு ராணுவத்தினர் இடையில் சிறிய அளவிலான மோதல்களும் ஒரே சமயம் நடந்து வந்தன. கல்வான் பள்ளத்தாக்கில் அண்மையில் சீனா அமைத்த ஒரு முகாம் தான் இப்போதுள்ள பஞ்சாயத்தின் துவக்கப்புள்ளி. அதை அகற்ற சீனா ஒப்புக்கொள்ளாததால் இந்திய ராணுவம் இறங்கி அதை நீக்கியது. அடுத்து சீன ராணுவத்தின் ஆரம்பத்தில் சொன்ன அந்த குண்டாந்தடித் தாக்குதலைத் தொடுத்துள்ளது.

சீனாக்காரர்கள் துப்பாக்கியை ஏன் பயன்படுத்தவில்லை என்று கேட்டால் ஏன் இந்திய வீரர்களும் சட்டக்கல்லூரி மாணவர்களைப் போல அமெச்சூராக சண்டைபோட்டு ஓடினர் என்பது விளங்கும். இரு தரப்புக்கும் பேச்சுவார்த்தை நடந்து வருவதால் துப்பாக்கி பயன்படுத்துவது தமது தரப்பு நியாயத்தை பலவீனமாக்கும் என வெளியுறவுத் துறைகள் நினைக்கின்றன. ஆனால் சீனா முதலில் தாக்குதல் தொடுத்த நிலையில் இந்தியா ஏதோ மாணவப் போராளிகள் போலீசிடம் அடிவாங்குவதைப் போல நடந்து கொண்டிருக்க வேண்டாம்.

அவர்கள் தாராளமாக துப்பாக்கிகளை எடுத்து பயன்படுத்தி இந்த தாக்குதலை முறியடித்திருக்கலாம். நூற்றுக்கணக்கான இந்திய வீரர்களையும் காப்பாற்றி இருக்கலாம். ஆனால் பாருங்கள் நமது வெளியுறவுத் துறையிடம் இருந்து, பிரதமர் ஜியிடம் இருந்து ராணுவத்தலைமைக்கு இதற்கு அனுமதி சுலபத்தில் கிடைக்காது. எப்படி ஒக்கிப் புயலினால் கடலில் தத்தளித்த மீனவர்களை நமது கடற்படை நாட்கணக்காய் காப்பாற்றவில்லையோ அதேபோல ராணுவ வீரர்களை இம்முறை சாக விட்டிருக்கிறார்கள்; அவர்கள் துரத்தப்பட்டு நதியில் மூழ்கடிக்கப்பட்ட போதாவது கூடுதல் ஆயுதமேந்திய ராணுவப்படைகளை அவர்களின் உதவிக்கு அனுப்பியிருக்கலாம், ஆனால் ஜி அனுப்பவில்லை.

கடைசியில் அவர்கள் குளிரிலும் மருத்துவ உதவியின்றியும் செத்துப் போனார்கள். எல்லாவற்றுக்கும் காரணம் ஜியின் அரசியலும் முடிவெடுப்பதில் தீர்மானமான நிலைப்பாடு இல்லாததுமே. விளம்பரத்தில் அவர் காட்டுகிற முனைப்பும் தீர்மானமும் இப்போதெல்லாம் நிர்வாகத்தில் இருப்பதில்லை. ரொம்ப யோசித்து யோசித்து தனக்கு அரசியல் அனுகூலம் கிடைக்கும் முடிவு எது எனத் திட்டமிட்டு மக்களுக்கு ஆபத்து விளைவிக்கிற ஒரு முடிவாக எடுக்கிறார். இப்போதுகூட பாருங்கள் ஜி இதை வைத்து என்ன டிராமா பண்ணி தான் நல்லப் பெயர் வாங்கலாம் என தன் செயலாளர்கள், மந்திரிகளுடன் ஆலோசனை பண்ணிக் கொண்டிருப்பார்.

அன்புள்ள ஜி, தயவு செய்து பாகிஸ்தானுக்கு அனுப்பி நான்கைந்து பனை மரங்களை சாய்த்த ஏவுகணைகளையாவது அடுத்த முறை நம் ராணுவம் கொல்லப்படும் போது பயன்படுத்துங்கள். ஆனால் இந்த முறை ஒரு நூறு பனை மரங்களாவது சாயணும். ஜெய் ஹிந்த்!

பின்குறிப்பு: கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியாத தோல்வியில் இருந்து மக்களின் கவனத்தைத் திருப்பவே இந்த எல்லைக்கோட்டு பிரச்சனைகளை ஜி வளர்க்கிறார் என சிலர் சொல்வதில் உண்மை இருக்குமா இல்லையா என்பதை அடுத்த சில நாட்களில் ஜி எடுக்கும் முடிவுகளில், “மித்ரோ” என விளித்து ராணுவ உடையில் தோன்றிப் பேசுவாரா இல்லையா என்பதில் தெரிந்து விடும்.

நன்றி: அபிலாஷ் சந்திரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here